கடவுள் உங்கள்மேல் அனுதாபம் காட்டுகிறாரா?
படைப்பு என்ன சொல்லித்தருகிறது?
அனுதாபம் என்றால், “மற்றவர்களுடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்பதாகும்; அவர்களுடைய உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் நம்முடையதைப் போலவே கற்பனை செய்வதாகும்.” “அனுதாபம் நம்முடைய இரத்தத்திலேயே ஊறிப்போயிருக்கிற குணம்” என்று மனநல நிபுணரான டாக்டர் ரிக் ஹான்ஸன் சொல்கிறார்.
சிந்தியுங்கள்: மற்ற எந்தவொரு உயிரினத்துக்கும் இல்லாத இந்தக் குணம், நமக்கு மட்டும் ஏன் இருக்கிறது? மனிதர்கள் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதாக பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:26) இதன் அர்த்தம் என்ன? நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால் அவருடைய குணங்களை நம்மால் ஓரளவு வெளிக்காட்ட முடிகிறது. அப்படியென்றால், மற்றவர்கள்மேல் அனுதாபம் காட்டி அவர்களுக்கு உதவுகிற சிலர், தங்களுடைய கரிசனைமிக்க படைப்பாளரான யெகோவா காட்டுகிற அனுதாபத்தையே காட்டுகிறார்கள்.—நீதிமொழிகள் 14:31.
கடவுள் காட்டுகிற அனுதாபத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்லித்தருகிறது?
கடவுள் நம்மேல் அனுதாபம் காட்டுகிறார், நாம் துன்பப்படுவதைப் பார்க்க அவருக்குக் கொஞ்சம்கூட பிடிக்காது. எகிப்தில் கொத்தடிமைகளாகக் கஷ்டப்பட்ட பிறகு 40 வருஷங்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த அவருடைய மக்களான பூர்வ இஸ்ரவேலர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவர்கள் வேதனைப்பட்ட சமயத்திலெல்லாம் அவரும் வேதனைப்பட்டார்.” (ஏசாயா 63:9) கடவுள் அவர்களுடைய வேதனைகளைப் பற்றி வெறுமனே தெரிந்து மட்டும் வைத்திருக்கவில்லை. அவர்களுடைய வேதனைகளை அவரால் உணர முடிந்தது. “அவர்களுடைய வலியும் வேதனையும் எனக்கு நன்றாகவே தெரியும்” என்று அவர் சொன்னார். (யாத்திராகமம் 3:7) “உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்” என்றும் அவர் சொன்னார். (சகரியா 2:8) மற்றவர்கள் நம்மை வேதனைப்படுத்தும்போது, நம்மோடு சேர்ந்து அவரும் வேதனைப்படுகிறார்.
சில சமயம் நம்மையே நாம் கண்டனம் செய்தாலும்... கடவுளுடைய அனுதாபத்தைப் பெறத் தகுதியில்லாதவர்களாக உணர்ந்தாலும்... பைபிள் நமக்கு இப்படி உறுதியளிக்கிறது: “கடவுள் நம் இதயத்தைவிட உயர்ந்தவராக இருக்கிறார், எல்லாவற்றையும் தெரிந்தவராகவும் இருக்கிறார்.” (1 யோவான் 3:19, 20) நம்மைப் பற்றி நாம் தெரிந்துவைத்திருப்பதைவிட கடவுள் மிக நன்றாகவே தெரிந்துவைத்திருக்கிறார். நம்முடைய சூழ்நிலைகள், யோசனைகள், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் அவர் முழுமையாகத் தெரிந்துவைத்திருக்கிறார். நம்மேல் அனுதாபம் காட்டுகிறார்.
வேதனையில் தவிப்பவர்களுக்குக் கடவுள் கண்டிப்பாக உதவி செய்வார் என்ற நம்பிக்கையோடு, ஆறுதலுக்காகவும் ஞானத்துக்காகவும் ஆதரவுக்காகவும் அவருடைய உதவியை நாம் நாடலாம்
பைபிள் வசனங்கள் இப்படி உறுதியளிக்கின்றன:
“நீங்கள் கூப்பிடுவீர்கள், யெகோவா பதில் சொல்வார். நீங்கள் உதவி கேட்டுக் கதறுவீர்கள்; ‘இதோ நான் இருக்கிறேன்!’ என்று அவர் சொல்வார்.”—ஏசாயா 58:9.
“யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் அழிந்துபோக வேண்டும் என்றல்ல, நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். உங்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கவே ஆசைப்படுகிறேன். நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள். என்னிடம் வந்து வேண்டிக்கொள்வீர்கள். நான் அதைக் கேட்பேன்.’”—எரேமியா 29:11, 12.
“என் கண்ணீர்த் துளிகளைத் தயவுசெய்து உங்களுடைய தோல் பையில் சேர்த்து வையுங்கள். நீங்கள் அவற்றையெல்லாம் எண்ணி உங்களுடைய புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறீர்களே.”—சங்கீதம் 56:8.
கடவுள் நம்மைக் கவனிக்கிறார், புரிந்துகொள்கிறார், நமக்காக அனுதாபப்படுகிறார்
கடவுள் நம்மேல் அனுதாபம் காட்டுகிறார் என்ற விஷயத்தைத் தெரிந்துகொள்வது, கஷ்டங்களைச் சமாளிக்க நமக்கு உதவுமா? இப்போது மரியாவின் அனுபவத்தைக் கவனியுங்கள்:
“என்னோட 18 வயசு பையன் ரெண்டு வருஷம் புற்றுநோயால படாத பாடுபட்டு கடைசியில இறந்தே போயிட்டான்; அதயெல்லாம் பார்த்து நான் ரொம்பவே வேதனைப்பட்டேன். வாழ்க்கையே வெறுத்துப்போயிடுச்சு, எனக்கு அநியாயம் நடந்த மாதிரி உணர்ந்தேன். யெகோவா என் மகன காப்பாத்தாததுனால அவர்மேல ரொம்ப கோபமா இருந்தேன்.”
“ஆறு வருஷம் கழிச்சு, சபையில இருந்த ஒரு அன்பான ஃப்ரெண்ட்கிட்ட மனசுவிட்டு பேசுனேன். யெகோவாவுக்கு என்மேல அன்பு இல்லன்னு அவங்ககிட்ட சொன்னேன். நான் பேசுன எல்லாத்தையும் அவங்க பொறுமையா, அமைதியா ரொம்ப நேரம் கேட்டாங்க. அதுக்கு அப்புறம் 1 யோவான் 3:19, 20-ல இருக்குற, ‘கடவுள் நம் இதயத்தைவிட உயர்ந்தவராக இருக்கிறார், எல்லாவற்றையும் தெரிந்தவராகவும் இருக்கிறார்’ங்கற வார்த்தைகள காட்டுனாங்க. நம்முடைய வேதனைகள யெகோவா புரிஞ்சுக்குறார்னு எனக்கு எடுத்து சொன்னாங்க.”
“ஆனாலும், எனக்கு கோபம் போகல! நான் அப்புறம், சங்கீதம் 94:19-ஐ வாசிச்சேன். ‘கவலைகள் என்னைத் திணறடித்தபோது, நீங்கள் எனக்கு ஆறுதல் தந்து, என் இதயத்துக்கு இதமளித்தீர்கள்’னு அந்த வசனம் சொல்லுது. இது எனக்காகவே எழுதப்பட்ட மாதிரி இருந்துச்சு. காலப்போக்குல, யெகோவா என் ஜெபத்த காதுகொடுத்து கேக்குறார்னும், என்னை புரிஞ்சுக்குறார்னும் தெரிஞ்சுக்கிட்டேன்; அதுக்கு அப்புறம் என் மனவேதனைய அவர்கிட்ட கொட்டுனேன், ரொம்ப ஆறுதலா உணர்ந்தேன்” என்று அவர் சொல்லி முடிக்கிறார்.
கடவுள் நம்மைப் புரிந்துகொள்கிறார், நமக்காக அனுதாபப்படுகிறார் என்று தெரிந்துகொள்வது மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது! ஆனால், இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு வேதனை? நாம் செய்த தவறுகளுக்குக் கடவுள் நம்மைத் தண்டிப்பதால்தானா? எல்லா வேதனைகளையும் கடவுள் முடிவுக்குக் கொண்டுவருவாரா? அடுத்து வரும் கட்டுரைகள் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்.