உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w18 பிப்ரவரி பக். 13-17
  • யெகோவாவினால் எல்லாமே செய்ய முடியும்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவினால் எல்லாமே செய்ய முடியும்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பொழுது விடிந்ததிலிருந்து பொழுது சாயும்வரை வேலை
  • நாடுகடத்தப்பட்டவர்கள் கிர்கிஸ்தானுக்கு சத்தியத்தை எடுத்துவந்தார்கள்
  • சத்தியம் என் ஊரை நெருங்கியது
  • என் மனைவி சத்தியத்தை உடனே புரிந்துகொண்டாள்
  • தடையின்போது நடந்த கூட்டங்களும் ஞானஸ்நானமும்
  • ஊழியத்தை விரிவாக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டோம்
  • குடும்பப் பொறுப்புகள், ஊழியம் என்று சுறுசுறுப்பாக இருந்தோம்
  • குறிப்பிடத்தக்க மாற்றங்கள்
  • இளம் வயசுல எடுத்த தீர்மானத்துக்காக அவர் வருத்தப்பட்டதே இல்ல
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • பொருளடக்கம்
    விழித்தெழு!—2016
  • கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்
    2007 யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக்
  • மலைகள்—யார் காப்பாற்றுவார்?
    விழித்தெழு!—2005
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
w18 பிப்ரவரி பக். 13-17
பாஷன்பை படிபாயெஃப்

வாழ்க்கை சரிதை

யெகோவாவினால் எல்லாமே செய்ய முடியும்!

பாஷன்பை படிபாயெஃப்

“சாவே இல்லாத வாழ்க்கை கிடைக்கப்போகுது, செத்துப்போனவங்க உயிரோட வருவாங்க!” இந்த வார்த்தைகள் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்த என் மனைவி மைரம்பூபூவின் காதில் விழுந்தன. அதைப் பற்றி தெரிந்துகொள்ள அவளுக்கு ஆர்வமாக இருந்ததால், பஸ்ஸில் இருந்தவர்கள் கீழே இறங்கிய பிறகு, அந்த வார்த்தைகளைச் சொன்ன பெண்ணின் பின்னாலேயே வேகவேகமாகப் போனாள். அந்தப் பெண்ணின் பெயர் ஆபுன் மம்பெட்சடைகோவா. அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. அப்போதெல்லாம் யெகோவாவின் சாட்சிகளிடம் பேசுவது ஆபத்தாக இருந்தது. ஆனால், பிற்பாடு ஆபுனிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டவை எங்கள் வாழ்க்கையையே மாற்றிவிட்டன.

பொழுது விடிந்ததிலிருந்து பொழுது சாயும்வரை வேலை

நான் 1937-ல், கிர்கிஸ்தானில் இருக்கிற டாக்மாக் ஊருக்குப் பக்கத்தில் கால்கோஸ் என்ற கூட்டுப் பண்ணையில் பிறந்தேன். என்னுடைய குடும்பத்தார் கிர்கிஸ் மொழி பேசும் கிர்கிஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். என்னுடைய அம்மா அப்பா, பொழுது விடிந்ததிலிருந்து பொழுது சாயும்வரை கூட்டுப் பண்ணையில் வேலை செய்தார்கள். அங்கே வேலை செய்தவர்களுக்கு உணவுப் பொருள்கள் தவறாமல் கொடுக்கப்பட்டன, ஆனால் வருஷத்துக்கு ஒரு தடவைதான் சம்பளம் கொடுக்கப்பட்டது. என்னையும் என் தங்கையையும் வளர்க்க அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டார். நான் ஐந்து வருஷம்தான் பள்ளிக்குப் போனேன். அதற்குப் பிறகு, நானும் முழுநேரமாக அந்தப் பண்ணையில் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

கிர்கிஸ்தான் வரைப்படம்
டெஸ்கே ஆலா-ட்டூ மலைத்தொடர்

டெஸ்கே ஆலா-ட்டூ மலைத்தொடர்

எங்கள் பகுதியிலிருந்த மக்கள் வறுமையில் வாடினார்கள். வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் படாதபாடுபட்டார்கள். வாலிப வயதில், வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ நான் யோசிக்கவில்லை. யெகோவாவையும் அவருடைய நோக்கத்தையும் பற்றிய அருமையான உண்மைகள் என் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்று நான் கற்பனைகூட செய்யவில்லை. சத்தியம் எப்படி கிர்கிஸ்தானை எட்டியது என்பதும், எப்படிப் பரவியது என்பதும் சுவாரஸ்யமான ஒரு கதை. வட கிர்கிஸ்தானில் இருக்கிற என்னுடைய சொந்த ஊரில்தான் அந்தக் கதை ஆரம்பமானது.

நாடுகடத்தப்பட்டவர்கள் கிர்கிஸ்தானுக்கு சத்தியத்தை எடுத்துவந்தார்கள்

1956-ல் யெகோவாவைப் பற்றிய சத்தியம் கிர்கிஸ்தானில் வேர்விட ஆரம்பித்தது. அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ஒரு கொள்கை, சத்தியம் வளருவதற்குப் பெரிய சவாலாக இருந்தது. எப்படியென்றால், இன்றைய கிர்கிஸ்தான் பகுதி அன்று சோவியத் யூனியனின் (USSR) பாகமாக இருந்தது. சோவியத் யூனியனில் இருந்த யெகோவாவின் சாட்சிகள் அரசியல் விவகாரங்களில் நடுநிலைமையோடு இருந்தார்கள். (யோவா. 18:36) அவர்கள் கம்யூனிஸ்ட் நாட்டின் எதிரிகளாகக் கருதப்பட்டதால் துன்புறுத்தப்பட்டார்கள். ஆனால், கடவுளுடைய வார்த்தை நேர்மையான ஆட்களின் மனதைத் தொடுவதை எந்தவொரு கொள்கையாலும் தடுக்க முடியாது. இத்தனை வருஷங்களாக என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான ஒரு பாடம், யெகோவாவினால் “எல்லாமே செய்ய முடியும்” என்பதுதான்.—மாற். 10:27.

எமில் யான்ட்சன்

எமில் யான்ட்சன்

யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டது உண்மைதான்; ஆனாலும், கிர்கிஸ்தானில் அவர்கள் வளர்ச்சி அடைவதற்கு அதுவே காரணமானது. எப்படி? சோவியத் யூனியனின் பாகமாக இருந்த சைபீரியாவுக்கு அந்த நாட்டின் எதிரிகள் நாடுகடத்தப்பட்டார்கள். விடுதலை செய்யப்பட்டபோது, அவர்களில் நிறையப் பேர் கிர்கிஸ்தானுக்கு வந்தார்கள். அப்படி வந்த சிலரின் மூலமாகத்தான் சத்தியம் இங்கே பரவியது. அவர்களில் ஒருவர்தான் எமில் யான்ட்சன். அவர் 1919-ல் கிர்கிஸ்தானில் பிறந்தவர். அவர் கட்டாய வேலை முகாமுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அங்குதான் சாட்சிகளைச் சந்தித்திருந்தார். அவர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு 1956-ல் நாடு திரும்பினார். என்னுடைய சொந்த ஊர் இருந்த பகுதியில், அதாவது சோகுலுக் ஊருக்குப் பக்கத்தில், அவர் குடிவந்தார். 1958-ல், அங்கு ஒரு சபை உருவானது; அதுதான் கிர்கிஸ்தானின் முதல் சபை.

விக்டர் வின்டர்

விக்டர் வின்டர்

கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குப் பிறகு, சோகுலுக் ஊருக்கு விக்டர் வின்டர் என்ற சகோதரர் குடிமாறி வந்தார். அவர் திரும்பத் திரும்பக் கஷ்டத்தை அனுபவித்தார். நடுநிலைமையோடு இருந்ததால், மூன்று வருஷ சிறைத் தண்டனையை இரண்டு தடவை அனுபவித்தார். மறுபடியும் பத்து வருஷ சிறைத் தண்டனையை அனுபவித்தார். அதோடு, ஐந்து வருஷங்களுக்கு நாடுகடத்தப்பட்டார். இவ்வளவு துன்புறுத்தல் வந்தும், உண்மை வணக்கம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்தது.

சத்தியம் என் ஊரை நெருங்கியது

எடுவார்ட் வார்ட்டர்

எடுவார்ட் வார்ட்டர்

1963-க்குள், கிர்கிஸ்தானில் சுமார் 160 சாட்சிகள் இருந்தார்கள். அவர்களில் நிறையப் பேர் ஜெர்மனி, உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர்தான் எடுவார்ட் வார்ட்டர். அவர் 1924-ல் ஜெர்மனியில் ஞானஸ்நானம் எடுத்திருந்தார். 1940-களில் நாசிக்கள் அவரைச் சித்திரவதை முகாமுக்கு அனுப்பியிருந்தார்கள். சில வருஷங்களுக்குப் பிறகு, சோவியத் யூனியனில் இருந்த கம்யூனிஸ்டுகள் அவரை நாடுகடத்தினார்கள். 1961-ல், என்னுடைய சொந்த ஊருக்கு ரொம்பப் பக்கத்தில் இருந்த கான்ட் என்ற ஊருக்கு அவர் குடிமாறிவந்தார்.

எலிசபெத் ஃபாட்; ஆக்சாமே சுல்ட்டானாலீவா

எலிசபெத் ஃபாட்; ஆக்சாமே சுல்ட்டானாலீவா

யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்த எலிசபெத் ஃபாட் என்ற சகோதரியும் கான்ட் ஊரில் இருந்தார். அவர் தையல் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவந்தார். அவர் அருமையாக தைத்ததால் டாக்டர்கள், டீச்சர்கள் போன்றவர்கள்கூட அவரிடம்தான் தங்கள் துணிமணிகளைத் தைத்தார்கள். அவருடைய வாடிக்கையாளர்களில் ஒருவர்தான் ஆக்சாமே சுல்ட்டானாலீவா என்ற பெண். அவருடைய கணவர் அரசு வழக்கறிஞரின் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒரு அதிகாரி. ஒரு தடவை, ஆக்சாமே எதையோ தைப்பதற்காக எலிசபெத்தைப் பார்க்க வந்தார். அப்போது, வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றியும் இறந்தவர்களின் நிலைமையைப் பற்றியும் நிறையக் கேள்விகளைக் கேட்டார். அதற்கான பதில்களை எலிசபெத் பைபிளிலிருந்தே காட்டினார். பிற்பாடு, ஆக்சாமே ரொம்ப ஆர்வத்தோடு ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.

நிக்காலை ஷிம்போஷ்

நிக்காலை ஷிம்போஷ்

கிட்டத்தட்ட அந்தச் சமயத்தில்தான், மால்டோவாவைச் சேர்ந்த நிக்காலை ஷிம்போஷ் என்ற சகோதரர் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 30 வருஷங்களாக வட்டார ஊழியம் செய்தார். சபைகளைச் சந்தித்தது மட்டுமல்லாமல், நம் பிரசுரங்களை நகல் எடுத்து விநியோகிக்கும் வேலை சரியாக நடக்கும்படியும் பார்த்துக்கொண்டார். அவர் செய்த வேலைகள் அதிகாரிகளின் கண்களிலிருந்து தப்பவில்லை. அதனால், எடுவார்ட் வார்ட்டர் இப்படி ஆலோசனை சொல்லி அவரை உற்சாகப்படுத்தினார்: “அதிகாரிங்க ஏதாவது கேட்டா, புருக்லின்ல இருக்குற தலைமை அலுவலகத்துல இருந்துதான் நமக்கு புத்தகங்கள் வருதுன்னு நேரடியா சொல்லிடுங்க. கேஜிபி அதிகாரியோட கண்ணை பார்த்து பேசுங்க. எதுக்கும் பயப்படாதீங்க.”—மத். 10:19.

சீக்கிரத்திலேயே, கான்ட்டிலிருந்த கேஜிபி தலைமை அலுவலகத்தில் ஆஜராகும்படி நிக்காலையிடம் சொல்லப்பட்டது. “நமக்கு எங்கிருந்து புத்தகங்கள் வருதுன்னு அதிகாரி கேட்டாரு. புருக்லின்ல இருந்து வருதுன்னு நான் சொன்னேன். அவருக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. உடனே என்னை அனுப்பிட்டாரு. அதுக்கு அப்புறம் என்னை கூப்பிடவே இல்ல” என்று நிக்காலை சொன்னார். அப்படிப்பட்ட தைரியமான சாட்சிகள், வட கிர்கிஸ்தானில் என்னுடைய சொந்த ஊர் இருக்கும் பகுதியில் தொடர்ந்து ஜாக்கிரதையாக ஊழியம் செய்தார்கள். 1980-களில் யெகோவாவைப் பற்றிய அருமையான சத்தியத்தைத் தெரிந்துகொள்ள எங்கள் குடும்பத்துக்கும் வாய்ப்புக் கிடைத்தது; என் மனைவிதான் முதலில் அதைக் கேட்டாள்.

என் மனைவி சத்தியத்தை உடனே புரிந்துகொண்டாள்

என் மனைவி மைரம்பூபூ, கிர்கிஸ்தானில் இருக்கும் நார்ன் என்ற பகுதியைச் சேர்ந்தவள். 1974-ம் வருஷம், ஆகஸ்ட் மாதத்தில், ஒரு நாள் அவள் என் தங்கையின் வீட்டுக்கு வந்திருந்தாள். அங்குதான் நாங்கள் முதல்முதலில் ஒருவரை ஒருவர் பார்த்தோம். பார்த்ததுமே எனக்கு அவளைப் பிடித்துவிட்டது. அன்றைக்கே நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம்.

ஆபுன் மம்பெட்சடைகோவா

ஆபுன் மம்பெட்சடைகோவா

1981, ஜனவரி மாதம், மைரம்பூபூ பஸ்ஸில் மார்க்கெட்டுக்குப் போய்க்கொண்டிருந்தாள். அப்போதுதான், ஆரம்பத்தில் சொன்ன அந்த வார்த்தைகளை அவள் கேட்டாள். இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள அவள் ஆசைப்பட்டதால், அந்தப் பெண்ணின் பெயரையும் விலாசத்தையும் கேட்டாள். தன்னுடைய பெயர் ஆபுன் என்று அவர் சொன்னார்; ஆனால், 1980-களிலேயே சாட்சிகளுடைய வேலை தடை செய்யப்பட்டிருந்ததால் அவர் ரொம்ப உஷாராக நடந்துகொண்டார். தன்னுடைய விலாசத்தை என் மனைவியிடம் கொடுப்பதற்குப் பதிலாக, எங்கள் விலாசத்தை வாங்கிக்கொண்டார். அவரிடம் பேசிய பிறகு, என் மனைவி ரொம்ப சந்தோஷத்தோடு வீட்டுக்கு வந்தாள்.

“ரொம்ப ஆச்சரியமான விஷயங்கள நான் கேட்டேன். சீக்கிரத்துல சாவே இல்லாத வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்கப்போகுதுன்னு ஒருத்தங்க சொன்னாங்க. காட்டு மிருகங்கள்கூட நமக்கு அடங்கி நடக்கும்னு சொன்னாங்க” என்று அவள் சொன்னாள். எனக்கு ஏதோ கதை கேட்பதுபோல் இருந்தது. “முதல்ல அவங்க வந்து விவரமா சொல்லட்டும், அப்புறம் பார்க்கலாம்” என்று நான் சொன்னேன்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு சகோதரி ஆபுன் வந்தார். அதன் பிறகு அடிக்கடி வந்து எங்களைப் பார்த்தார். அப்போது, கிர்கிஸ் இனத்தில் முதல்முதலாக சாட்சிகளாக ஆன சிலரை நாங்கள் சந்தித்தோம். அந்தச் சகோதரிகள் எங்களுக்கு அருமையான சத்தியங்களைச் சொல்லிக்கொடுத்தார்கள்; யெகோவாவைப் பற்றியும் மனிதர்களுக்காக அவர் செய்ய நினைத்திருக்கும் காரியங்களைப் பற்றியும் கற்றுக்கொடுத்தார்கள். பரதீஸ் இழக்கப்பட்டதிலிருந்து பரதீஸ் திரும்பப் பெறும் வரையில் என்ற புத்தகத்திலிருந்து அவர்கள் படிப்பு நடத்தினார்கள்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அந்தப் புத்தகம் டாக்மாக்கில் ஒரேவொரு பிரதிதான் இருந்தது. அதனால் நாங்களே அதைப் பார்த்துக் கைப்பட எழுதிக்கொண்டோம்.

நாங்கள் முதலில் கற்றுக்கொண்ட ஒரு விஷயம், ஆதியாகமம் 3:15-ல் இருக்கும் தீர்க்கதரிசனம். கடவுளுடைய மேசியானிய ராஜாவான இயேசுவின் மூலம் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எல்லாருமே தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான செய்தி இது! இந்தச் செய்தியை அறிவிக்கும் வேலையில் கலந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்று எங்களுக்குப் புரிந்தது. (மத். 24:14) சீக்கிரத்திலேயே, பைபிள் சத்தியம் எங்கள் வாழ்க்கையை அடியோடு மாற்ற ஆரம்பித்தது.

தடையின்போது நடந்த கூட்டங்களும் ஞானஸ்நானமும்

டாக்மாக்கில் இருந்த ஒரு சகோதரர் ஒரு கல்யாணத்துக்கு எங்களைக் கூப்பிட்டார். சாட்சிகள் எவ்வளவு வித்தியாசமாக நடந்துகொண்டார்கள் என்பதை நானும் என் மனைவியும் கவனித்தோம். கல்யாணத்தில் மதுபானம் பரிமாறப்படவில்லை, எல்லாமே ஒழுங்காக நடந்தன. ஆனால் நாங்கள் அதுவரை போயிருந்த மற்ற கல்யாணங்களில், எல்லாரும் குடிபோதையில் இருந்தார்கள், மோசமாக நடந்துகொண்டார்கள், கெட்ட வார்த்தைகளைப் பேசினார்கள்.

டாக்மாக்கில் சில சபைக் கூட்டங்களுக்கும் நாங்கள் போனோம். சீதோஷ்ணம் இடைஞ்சலாக இல்லாதவரை, அவை காட்டுப்பகுதியில் நடத்தப்பட்டன. போலீஸ் கண்காணித்துக்கொண்டே இருந்த விஷயம் சகோதர சகோதரிகளுக்குத் தெரிந்திருந்ததால், காவலுக்கு ஒருவரை நிற்க வைத்தார்கள். குளிர்காலத்தில், ஒரு வீட்டில் கூட்டங்களை நடத்தினார்கள். ஒருசில தடவை போலீஸ் அந்த வீட்டுக்குள் புகுந்து, நாங்கள் என்ன செய்கிறோம் என்று கேட்டு எங்களை அதட்டினார்கள். 1982, ஜூலையில் நானும் என் மனைவியும் ஷூயை ஆற்றில் ஞானஸ்நானம் எடுத்தபோதுகூட, ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்தது. (மத். 10:16) சகோதரர்கள் கொஞ்சம் கொஞ்சம் பேராக அந்தக் காட்டுப்பகுதிக்கு வந்துசேர்ந்தார்கள். நாங்கள் ராஜ்ய பாடலைப் பாடினோம், பிறகு ஞானஸ்நானப் பேச்சைக் கேட்டோம்.

ஊழியத்தை விரிவாக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டோம்

1987-ல், ஆர்வம் காட்டிய ஒருவரை பாலிக்‍ஷீ ஊரில் போய்ப் பார்க்கும்படி ஒரு சகோதரர் என்னிடம் சொன்னார். அங்கே போக நாங்கள் நான்கு மணிநேரம் ரயிலில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. நிறைய தடவை அங்கு போய் ஊழியம் செய்த பிறகுதான், எவ்வளவு பேர் ஆர்வமாக இருந்தார்கள் என்பது புரிந்தது. எங்கள் ஊழியத்தை விரிவாக்க அது சரியான வாய்ப்பாக இருந்தது.

நானும் என் மனைவியும் அடிக்கடி பாலிக்‍ஷீ ஊருக்குப் போனோம். சனி, ஞாயிறுகளில் பெரும்பாலும் அங்கேயே தங்கி, ஊழியம் செய்து, கூட்டங்களை நடத்தினோம். அங்கே ஏராளமானவர்கள் நம்முடைய பிரசுரங்களைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், உருளைக்கிழங்குகளைக் கொண்டுபோகும் மிஷாக் என்ற சாக்குகளில் பிரசுரங்களை எடுத்துக்கொண்டு டாக்மாக்கிலிருந்து கிளம்பிப் போனோம். ஒவ்வொரு மாதமும் இரண்டு சாக்குகள் நிறைய பிரசுரங்களை எடுத்துக்கொண்டு போயும், அவை சீக்கிரத்திலேயே காலியாகிவிட்டன. ரயிலில் போகும்போதும் வரும்போதும்கூட, மற்ற பயணிகளிடம் எங்களால் சாட்சி கொடுக்க முடிந்தது.

நாங்கள் பாலிக்‍ஷீ ஊருக்குப் போய் எட்டு வருஷங்களில், அதாவது 1995-ல், அங்கே ஒரு சபை உருவானது. அவ்வளவு வருஷங்களாக அங்கே போய் வருவதற்கு நிறைய செலவானது. எங்களுக்கு அவ்வளவு வசதியும் இல்லை. அப்படியென்றால், எப்படி சமாளித்தோம்? ஒரு சகோதரர் தவறாமல் பணம் கொடுத்து உதவினார். ஊழியத்தை விரிவாக்க நாங்கள் விரும்பியதை யெகோவா பார்த்தார்; அதனால், எங்களுக்காக ‘வானத்தின் கதவுகளைத் திறந்தார்.’ (மல். 3:10) யெகோவாவினால் எல்லாமே செய்ய முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

குடும்பப் பொறுப்புகள், ஊழியம் என்று சுறுசுறுப்பாக இருந்தோம்

1992-ல், நான் மூப்பராக நியமிக்கப்பட்டேன். எங்கள் நாட்டில், கிர்கிஸ் இனத்தைச் சேர்ந்தவர்களிலேயே நான்தான் முதல்முதலில் மூப்பராக நியமிக்கப்பட்டேன். என்னுடைய சொந்த ஊரான டாக்மாக்கில் இருந்த சபையில், புது விதமான ஊழிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கல்வி நிறுவனங்களில் படித்துக்கொண்டிருந்த கிர்கிஸ் இனத்தைச் சேர்ந்த இளம் மாணவர்கள் நிறையப் பேருக்கு நாங்கள் பைபிள் படிப்பு நடத்தினோம். அப்படிப்பட்ட மாணவர்களில் ஒருவர் இப்போது கிளை அலுவலகக் குழுவின் அங்கத்தினராக இருக்கிறார், மற்ற இரண்டு பேர் விசேஷ பயனியர்களாக சேவை செய்கிறார்கள். கூட்டங்களில் மற்றவர்களுக்கும் நாங்கள் உதவினோம். 1990-களின் ஆரம்பத்தில் நம்முடைய பிரசுரங்கள் ரஷ்ய மொழியில்தான் வந்தன, கூட்டங்களும் அந்த மொழியில்தான் நடந்தன. ஆனால், கிர்கிஸ் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை சபையில் அதிகமாகிக்கொண்டே வந்தது. அதனால், நான் மொழிபெயர்ப்பு செய்தேன்; சத்தியத்தை நன்றாகப் புரிந்துகொள்ள இது அவர்களுக்கு உதவியது.

தன்னுடைய எட்டுப் பிள்ளைகளோடு பாஷன்பை படிபாயெஃபும் அவருடைய மனைவியும்

1989-ல், என் மனைவியோடும் எட்டுப் பிள்ளைகளோடும்

எங்கள் குடும்பம் பெரிதாகிக்கொண்டே வந்தது; நானும் மைரம்பூபூவும், பிள்ளைகளை நல்லபடியாக வளர்ப்பதற்கும் கவனம் செலுத்தினோம். ஊழியத்துக்கும் கூட்டங்களுக்கும் அவர்களைக் கூட்டிக்கொண்டு போனோம். எங்கள் மகள் குல்ஸைராவுக்கு 12 வயது இருந்தபோதே, தெருவில் நடந்துபோகிறவர்களிடம் பைபிள் சத்தியங்களைப் பற்றி ஆர்வமாகப் பேசுவாள். வசனங்களை மனப்பாடம் செய்வது எங்கள் பிள்ளைகளுக்குப் பிடித்திருந்தது. எங்கள் பிள்ளைகளும், பிற்பாடு எங்கள் பேரப்பிள்ளைகளும் சபைக் காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட்டார்கள். இப்போது உயிரோடு இருக்கும் என்னுடைய 9 பிள்ளைகள் மற்றும் 11 பேரப்பிள்ளைகளில், 16 பேர் யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள், தங்கள் அப்பா அம்மாவோடு சேர்ந்து கூட்டங்களுக்குப் போகிறார்கள்.

குறிப்பிடத்தக்க மாற்றங்கள்

1950-களில் இங்கே யெகோவாவின் வேலைகளை ஆரம்பித்த அன்பான சகோதர சகோதரிகள், இவ்வளவு காலமாக நடந்திருக்கிற மாற்றங்களைப் பார்த்தால் ஆச்சரியப்பட்டுப்போவார்கள். ஊழியம் செய்யவும் பெரிய கூட்டங்களை நடத்தவும் 1990-களிலிருந்து எங்களுக்கு நிறைய சுதந்திரம் கிடைத்திருப்பது அப்படிப்பட்ட ஒரு மாற்றம்!

பாஷன்பை படிபாயெஃபும் அவருடைய மனைவியும் ஒரு கடைக்காரரிடம் சாட்சி கொடுக்கிறார்கள்

ஊழியத்தில் என் மனைவியோடு

1991-ல், கஸக்ஸ்தானில் இருந்த அல்மா-ஆடாவில், நானும் என்னுடைய மனைவியும் முதல்முதலாக ஒரு பெரிய மாநாட்டில் கலந்துகொண்டோம். இப்போது, அந்த இடம் அல்மாட்டி என்று அழைக்கப்படுகிறது. 1993-ல், கிர்கிஸ்தானில் முதல் தடவையாக மாநாடு நடந்தது. பிஷ்கெக்கில் இருக்கிற ஸ்பார்ட்டாக் ஸ்டேடியத்தில் சகோதரர்கள் அந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு வாரமாக சகோதர சகோதரிகள் அந்த ஸ்டேடியத்தை சுத்தம் செய்தார்கள். இதைப் பார்த்து அசந்துபோன அந்த ஸ்டேடியத்தின் மேலாளர், வாடகையே இல்லாமல் மாநாடு நடத்துவதற்கு அனுமதித்தார்.

1994-ல், கிர்கிஸ் மொழியில் முதல்முதலாக நம் பிரசுரங்கள் அச்சிடப்பட்டதை இன்னொரு மைல்கல் என்று சொல்லலாம். இப்போது, பிஷ்கெக்கில் இருக்கிற கிளை அலுவலகத்தில் ஒரு மொழிபெயர்ப்புக் குழு தவறாமல் கிர்கிஸ் மொழியில் பிரசுரங்களை மொழிபெயர்க்கிறது. 1998-ல், நம்முடைய வேலைக்கு கிர்கிஸ்தானில் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது. இப்போது நம் வேலை நன்றாக முன்னேறியிருக்கிறது. இங்கே 5,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். சைனீஸ், ஆங்கிலம், கிர்கிஸ், ரஷ்யன், ரஷ்ய சைகை மொழி, துருக்கி, உய்கூர், உஸ்பெக் ஆகிய மொழிகளில் மொத்தம் 83 சபைகளும் 25 தொகுதிகளும் இருக்கின்றன. வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த இந்த அன்பான சகோதர சகோதரிகள் யெகோவாவுக்கு ஒற்றுமையாகச் சேவை செய்கிறார்கள். மேலே சொல்லப்பட்ட எல்லா மாற்றங்களையும் யெகோவா நடத்திக் காட்டியிருக்கிறார்.

யெகோவா என் வாழ்க்கையையும் மாற்றியிருக்கிறார். நான் ரொம்ப சாதாரணமான ஒரு குடும்பத்தில் பிறந்தேன், ஐந்து வருஷங்கள் மட்டும்தான் பள்ளிக்குப் போனேன். ஆனாலும், மூப்பராக சேவை செய்யும் வாய்ப்பை யெகோவா எனக்குக் கொடுத்திருக்கிறார். என்னைவிட அதிகம் படித்தவர்களுக்கு அருமையான பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பையும் தந்திருக்கிறார். உண்மையிலேயே, யெகோவா அதிசயங்களை நடத்திக் காட்டுகிறார்! என் வாழ்க்கையில் அவர் செய்திருக்கும் விஷயங்களைப் பார்க்கும்போது, வாழ்நாளெல்லாம் அவரைப் புகழ வேண்டுமென்ற ஆசை வருகிறது. யெகோவாவினால் “எல்லாமே செய்ய முடியும்” என்பதில் சந்தேகமே இல்லை!—மத். 19:26.

a இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது. ஆனால் இப்போது அச்சிடப்படுவதில்லை.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்