உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w18 ஆகஸ்ட் பக். 23-27
  • ஒவ்வொரு நாளும் யெகோவாவோடு வேலை செய்யுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒவ்வொரு நாளும் யெகோவாவோடு வேலை செய்யுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் சபையில் இருப்பவர்களுக்கும் உதவி செய்யுங்கள்
  • உபசரிக்கும் குணத்தைக் காட்டுங்கள்
  • வாலன்டியராக சேவை செய்யுங்கள்
  • யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்யுங்கள்
  • உங்கள் ஊழியத்தை விரிவாக்க வழிகள்
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
  • முழுநேர ஊழியர்களை மறந்துவிடாதீர்கள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • பரிசுத்த சேவையின் சிலாக்கியங்களை உயர்வாய் கருதுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • கிறிஸ்தவப் பெண்களுக்குப் பக்கபலமாக இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
w18 ஆகஸ்ட் பக். 23-27
உடல் நிலை சரியில்லாத ஒரு சகோதரரை மற்ற சகோதர சகோதரிகள் போய் பார்க்கிறார்கள்

ஒவ்வொரு நாளும் யெகோவாவோடு வேலை செய்யுங்கள்

“[நாம்] கடவுளுடைய சக வேலையாட்களாக இருக்கிறோம்.”—1 கொ. 3:9.

பாடல்கள்: 44, 75

இந்த விஷயங்களில் கடவுளோடு வேலை செய்கிறீர்கள் என்று எப்படிச் சொல்லலாம்?

  • குடும்பத்திலும் சபையிலும் உதவி செய்யும்போது...

  • உபசரிக்கும் குணத்தைக் காட்டும்போது...

  • வாலன்டியர் சேவை செய்யும்போதும், யெகோவாவுடைய சேவையில் அதிகமாக ஈடுபடும்போதும்...

1. எந்தெந்த விதங்களில் நாம் கடவுளோடு வேலை செய்கிறோம் என்று சொல்லலாம்?

மனிதர்களைப் படைத்தபோது, அவர்கள் தன்னுடைய சக வேலையாட்களாக இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்பினார். இன்று, மனிதர்கள் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பது உண்மைதான். இருந்தாலும், உண்மையுள்ள மனிதர்களால் யெகோவாவோடு சேர்ந்து ஒவ்வொரு நாளும் வேலை செய்ய முடியும். உதாரணத்துக்கு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும்போதும், மற்றவர்களை சீஷர்களாக்கும்போதும், நாம் “கடவுளுடைய சக வேலையாட்களாக இருக்கிறோம்.” (1 கொ. 3:5-9) இந்த முக்கியமான வேலையைச் செய்வதற்காக சர்வவல்லமையுள்ள கடவுளே நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால், அது எவ்வளவு பெரிய பாக்கியம்! இருந்தாலும், பிரசங்க வேலை செய்யும்போது மட்டும்தான் நாம் கடவுளோடு வேலை செய்கிறோம் என்று சொல்ல முடியாது. மற்ற விதங்களிலும் நாம் அவரோடு சேர்ந்து வேலை செய்கிறோம். குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் சபையில் இருப்பவர்களுக்கும் உதவி செய்யும்போதும்... உபசரிக்கும் குணத்தைக் காட்டும்போதும்... உலகம் முழுவதும் அமைப்பு செய்துவருகிற வேலைகளில் உதவும்போதும்... நம்முடைய சேவையை இன்னும் அதிகரிக்கும்போதும்... நாம் கடவுளோடு வேலை செய்கிறோம் என்று சொல்லலாம். (கொலோ. 3:23) இதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

2. யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவையை மற்றவர்கள் செய்யும் சேவையோடு ஏன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது?

2 இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது, ஒரு விஷயத்தை மனதில் வைப்பது முக்கியம். நம் எல்லாருடைய சூழ்நிலையும் ஒரேமாதிரி இருப்பதில்லை. வயது... ஆரோக்கியம்... குடும்ப சூழல்... திறமைகள்... ஆகியவை நபருக்கு நபர் வித்தியாசப்படுகின்றன. அதனால், யெகோவாவுக்கு நீங்கள் செய்யும் சேவையை மற்றவர்கள் செய்யும் சேவையோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். “ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களை ஆராய்ந்து பார்க்கட்டும். அப்போது, அவன் மற்றவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷப்படாமல் தன்னைப் பார்த்தே சந்தோஷப்படுவான்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார்.—கலா. 6:4.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் சபையில் இருப்பவர்களுக்கும் உதவி செய்யுங்கள்

3. தங்களுடைய குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறவர்கள் கடவுளோடு வேலை செய்கிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?

3 நம்முடைய குடும்பத்தை நாம் நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். உங்கள் குடும்பத்துக்காக நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கலாம். தாய்மார்கள், தங்கள் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்காக வீட்டிலேயே இருக்க வேண்டியிருக்கலாம். வயதான பெற்றோர்களால் தங்களைக் கவனித்துக்கொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். இவையெல்லாம் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய வேலைகள்! “ஒருவன் தன்னை நம்பியிருக்கிறவர்களை, முக்கியமாகத் தன்னுடைய குடும்பத்தில் இருக்கிறவர்களை, கவனித்துக்கொள்ளவில்லை என்றால் அவன் விசுவாசத்தை விட்டுவிட்டவனாகவும் விசுவாசத்தில் இல்லாதவனைவிட மோசமானவனாகவும் இருப்பான்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீ. 5:8) உங்களுக்குக் குடும்பப் பொறுப்புகள் இருந்தால், நீங்கள் நினைக்குமளவுக்கு யெகோவாவின் சேவையில் நிறைய செய்ய முடியாமல் போகலாம். ஆனால் கவலைப்படாதீர்கள்! உங்கள் குடும்பத்தின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யும்போது, அதைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார்.—1 கொ. 10:31.

4. கடவுளுடைய அரசாங்கத்துக்குப் பெற்றோர்கள் எப்படி முதலிடம் கொடுக்கலாம், அப்படிச் செய்யும்போது என்ன ஆசீர்வாதம் கிடைக்கிறது?

4 கிறிஸ்தவப் பெற்றோர்கள் எப்படி யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்யலாம்? கடவுளுடைய சேவையில் நல்ல இலக்குகளை வைப்பதற்குத் தங்கள் பிள்ளைகளுக்கு உதவுவதன் மூலம் அப்படிச் செய்யலாம். நிறைய பெற்றோர்கள் அப்படிச் செய்திருக்கிறார்கள்! அதனால், அவர்களுடைய பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது, முழுநேர சேவையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்; சொல்லப்போனால், வீட்டைவிட்டு ரொம்பத் தூரம் போய்கூட சேவை செய்கிறார்கள். சிலர் மிஷனரிகளாகவும், வேறுசிலர் தேவை அதிகமுள்ள இடங்களில் பயனியர்களாகவும், மற்றவர்கள் பெத்தேலிலும் சேவை செய்கிறார்கள். பிள்ளைகள் தங்களைவிட்டு ரொம்பத் தூரத்தில் இருப்பதால் பெற்றோர்களால் அவர்களோடு நிறைய நேரம் செலவு செய்ய முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், சுயநலமாக யோசிக்காமல், யெகோவாவுடைய சேவையைத் தொடர்ந்து செய்யும்படி பிள்ளைகளை அவர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள். பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுப்பதைப் பார்த்து பெற்றோர்கள் ரொம்பச் சந்தோஷப்படுகிறார்கள். (3 யோ. 4) இப்படிப்பட்ட பெற்றோர்கள், அன்னாளைப் போல்தான் உணர்கிறார்கள்; சாமுவேலை யெகோவாவுக்கு ‘அர்ப்பணித்துவிட்டதாக’ அன்னாள் சொன்னார். இப்படி, யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்வதை பெற்றோர்கள் பாக்கியமாக நினைக்கிறார்கள்.—1 சா. 1:28.

5. சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் எப்படியெல்லாம் உதவலாம்? (ஆரம்பப் படம்)

5 இப்போதைக்கு உங்களுக்குக் குடும்பப் பொறுப்புகள் அவ்வளவாக இல்லையென்றால், வயதான... உடல்நிலை சரியில்லாத... அல்லது வேறு உதவிகள் தேவைப்படுகிற சகோதர சகோதரிகளுக்கு உங்களால் உதவ முடியுமா? அல்லது, அவர்களுக்கு உதவுகிற குடும்பத்தாருக்கு நீங்கள் ஒத்தாசையாக இருக்க முடியுமா? இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் யாராவது உங்கள் சபையில் இருக்கிறார்களா என்று பாருங்கள். உதாரணத்துக்கு, வயதான பெற்றோரை ஒரு சகோதரி கவனித்துக்கொண்டிருக்கலாம். அவருடைய பெற்றோரை கொஞ்ச நேரம் நீங்கள் கவனித்துக்கொண்டால், அவரால் மற்ற வேலைகளைச் செய்ய முடியும், இல்லையா? அல்லது, கூட்டங்களுக்கோ கடைக்கோ போய்வர யாருக்காவது உதவ முடியுமா? அல்லது, மருத்துவமனையில் இருக்கும் ஒருவரை உங்களால் போய் பார்க்க முடியுமா? இப்படியெல்லாம் செய்யும்போது, மற்றவர்களுடைய ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுப்பதற்காக, நீங்கள் அவரோடு சேர்ந்து வேலை செய்கிறீர்கள் என்று அர்த்தம்.—1 கொரிந்தியர் 10:24-ஐ வாசியுங்கள்.

உபசரிக்கும் குணத்தைக் காட்டுங்கள்

6. நாம் எப்படி உபசரிக்கும் குணத்தைக் காட்டலாம்?

6 உபசரிக்கும் குணத்தைக் காட்டுவதில் கடவுளுடைய சக வேலையாட்கள் பேர்போனவர்கள். பைபிளில், ‘உபசரிப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, “அன்னியர்களுக்குத் தயவு” காட்டுவதைக் குறிக்கிறது. (எபி. 13:2; அடிக்குறிப்பு) பைபிளில் இருக்கும் உதாரணங்கள், நாம் எப்படியெல்லாம் தயவு காட்டலாம் என்பதைக் கற்றுத்தருகின்றன. (ஆதி. 18:1-5) மற்றவர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்போது, அதை நழுவவிடக் கூடாது. ‘நம்முடைய விசுவாசக் குடும்பத்தாராக’ இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி, நாம் எல்லாருக்கும் கண்டிப்பாக உதவிக் கரம் நீட்ட வேண்டும்.—கலா. 6:10.

7. முழுநேர ஊழியர்களை உபசரிக்கும்போது என்ன பலன்கள் கிடைக்கின்றன?

7 முழுநேர சேவை செய்யும் ஊழியர்கள் தங்குவதற்காக உங்கள் வீட்டில் இடம் தர முடியுமா? அப்படித் தரும்போது நீங்கள் யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்கிறீர்கள்! (3 யோவான் 5, 8-ஐ வாசியுங்கள்.) இப்படிச் செய்வதால் அவர்களுக்கும் நன்மை, உங்களுக்கும் நன்மை! இந்த விதத்தில், ‘ஒருவருக்கொருவர் உற்சாகம் பெறலாம்.’ (ரோ. 1:11, 12) ஓலாஃப் என்ற சகோதரரின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர் இளவயதில் இருந்தபோது, திருமணமாகாத ஒரு வட்டாரக் கண்காணி அவருடைய சபையைச் சந்தித்தார். சபையிலிருந்த சகோதரர்களால் தங்களுடைய வீட்டில் அவரைத் தங்கவைக்க முடியவில்லை. அதனால், அவரைத் தங்கவைப்பதற்கு, சாட்சிகளாக இல்லாத தன் பெற்றோரிடம் ஓலாஃப் அனுமதி கேட்டார்; அவர்களும் சம்மதித்தார்கள். ஆனால், சோஃபாவில்தான் ஓலாஃப் தூங்க வேண்டியிருக்கும் என்று சொன்னார்கள். ஓலாஃப் அதற்கு ஒத்துக்கொண்டார்; அந்த அசௌகரியத்தை நினைத்து அவர் வருத்தப்படவே இல்லை. ஏனென்றால், அந்த வாரம் முழுவதும் ஓலாஃபுக்கு ரொம்பவே சந்தோஷமான வாரமாக இருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த வட்டாரக் கண்காணியும் ஓலாஃபும் சீக்கிரமே எழுந்து, காலை உணவை சாப்பிட்டுக்கொண்டே நிறைய சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசினார்கள். அவர் கொடுத்த உற்சாகத்தால், முழுநேர சேவை செய்ய வேண்டுமென்ற ஆர்வம் ஓலாஃபுக்கு வந்தது. கடந்த 40 வருஷங்களாக அவர் பல நாடுகளில் மிஷனரியாக சேவை செய்திருக்கிறார்.

8. ஆரம்பத்தில் நன்றி காட்டாதவர்களுக்கும் நாம் ஏன் தயவு காட்ட வேண்டும்? ஓர் உதாரணம் கொடுங்கள்.

8 அன்னியர்களுக்கு அன்பு காட்ட நிறைய வழிகள் இருக்கின்றன. ஒருவேளை, ஆரம்பத்தில் அவர்கள் நன்றி காட்டவில்லை என்றாலும், நாம் அவர்கள்மீது அன்பு காட்டலாம். உதாரணத்துக்கு, ஸ்பெயினில் இருக்கும் ஒரு சகோதரி, ஈக்வடாரிலிருந்து குடிமாறி வந்திருக்கும் யசிக்கா என்ற பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்தினார். ஒருநாள் அப்படிப் படிப்பை நடத்திக்கொண்டிருந்தபோது, யசிக்கா பயங்கரமாக அழ ஆரம்பித்துவிட்டார். அவர் ஏன் அழுகிறார் என்று அந்தச் சகோதரி கேட்டார். அப்போது யசிக்கா விஷயத்தைச் சொன்னார். அதாவது, அவர் ஸ்பெயினுக்கு வருவதற்கு முன்பு ரொம்ப ஏழையாக இருந்திருக்கிறார். ஒருநாள் அவருடைய மகளுக்கு சாப்பாடுகூட கொடுக்க முடியாமல் வெறும் தண்ணீரைத்தான் கொடுத்திருக்கிறார். அந்தக் குழந்தையைத் தூங்க வைக்க முயற்சி செய்துகொண்டிருந்தபோது, கடவுளிடம் உதவி கேட்டு ஜெபம் செய்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அவருடைய வீட்டுக்கு வந்து பத்திரிகை கொடுத்திருக்கிறார்கள். பிறகு என்ன நடந்தது? யசிக்கா பயங்கரக் கோபத்தோடு அந்தப் பத்திரிகையை கிழித்துப்போட்டுவிட்டு, “என் குழந்தைக்கு இதையா சாப்பிட கொடுக்க முடியும்?” என்று அவர்களிடம் கேட்டிருக்கிறார். அவர்கள் யசிக்காவை சாந்தப்படுத்த முயற்சி செய்தும், அவர் கோபமாகவே இருந்திருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து அந்தச் சகோதரிகள் நிறைய உணவைக் கொண்டுவந்து கதவுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ஈக்வடாரில் நடந்த இந்த சம்பவம் யசிக்காவுக்கு ஞாபகம் வந்ததால்தான் அவர் அப்படி அழுதார்! அவர் செய்த ஜெபத்துக்கு, அந்தச் சகோதரிகள் மூலம் கடவுள் பதில் கொடுத்தது தெரியாமலேயே அவர்களிடம் கோபப்பட்டதை நினைத்து யசிக்கா மிகவும் வேதனைப்பட்டார். இப்போது, யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய வேண்டுமென்ற தீர்மானத்துக்கு வந்திருக்கிறார். ஈக்வடாரிலிருந்த அந்த இரண்டு சகோதரிகள் காட்டிய தாராள குணத்துக்குக் கிடைத்த அருமையான பலனைப் பார்த்தீர்களா?—பிர. 11:1, 6. 

வாலன்டியராக சேவை செய்யுங்கள்

9, 10. (அ) மனமுவந்து சேவை செய்ய இஸ்ரவேலர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பற்றிச் சொல்லுங்கள். (ஆ) சகோதரர்கள் இன்று எப்படியெல்லாம் மற்றவர்களுக்கு உதவலாம்?

9 தாங்களாகவே முன்வந்து யெகோவாவின் வேலையைச் செய்ய, இஸ்ரவேலர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. (யாத். 36:2; 1 நா. 29:5; நெ. 11:2) அதேபோன்ற வாய்ப்புகள் இன்று உங்களுக்கும் இருக்கின்றன. எப்படி? உங்களுடைய நேரம், பொருள் செல்வங்கள், திறமைகள் என எல்லாவற்றையும் பயன்படுத்தி சகோதர சகோதரிகளுக்கு உதவும் வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கின்றன. அப்படிச் செய்யும்போது, நீங்கள் நிச்சயம் சந்தோஷமாக இருப்பீர்கள்; யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார்.

10 உதவி ஊழியர்களாகவும் மூப்பர்களாகவும் மற்றவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்யும்படி, சபையிலிருக்கும் ஆண்களை பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (1 தீ. 3:1, 8, 9; 1 பே. 5:2, 3) இப்படிப்பட்ட சேவையைச் செய்பவர்கள், மற்றவர்களுக்கு நடைமுறையான உதவிகளையும் ஆன்மீக உதவிகளையும் செய்ய விரும்புகிறார்கள். (அப். 6:1-4) சபையில் அட்டெண்டன்டுகளாகவோ அல்லது பத்திரிகை இலாகாவிலோ, பிராந்தியம் சம்பந்தப்பட்ட வேலைகளிலோ, பராமரிப்பு வேலைகளிலோ அல்லது வேறு ஏதாவது வேலைகளிலோ உதவும்படி மூப்பர்கள் உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா? இந்த வேலைகளையெல்லாம் செய்த சகோதரர்கள், அதைச் சந்தோஷமாகச் செய்ததாகச் சொல்கிறார்கள்.

கட்டுமான வேலையில் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யும் சகோதரிகள் நல்ல நண்பர்களாக ஆகிறார்கள்

அமைப்பின் வேலைகளைச் செய்யும் சகோதர சகோதரர்களுக்குப் புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள் (பாரா 11)

11. கட்டுமான வேலைகளைச் செய்ததால் ஒரு சகோதரி எப்படிப் பலன் அடைந்தார்?

11 கட்டுமான வேலைகளைச் செய்பவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். மார்ஜீ என்ற சகோதரியின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். 18 வருஷங்களாக அவர் ராஜ்ய மன்ற கட்டுமான வேலைகளைச் செய்திருக்கிறார். அந்தச் சமயங்களில், நிறைய இளம் சகோதரிகளின் மேல் அக்கறை காட்டி, அவர்களைப் பயிற்றுவித்திருக்கிறார். ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்கு இதுபோன்ற கட்டுமான வேலை வாய்ப்பளிப்பதாக அவர் சொல்கிறார். (ரோ. 1:12) அவருடைய வாழ்க்கையில் கஷ்டமான ஒரு சூழ்நிலை வந்தபோது, கட்டுமான வேலைகளைச் செய்தபோது கிடைத்த நண்பர்கள் தனக்கு உதவியதாக அவர் சொல்கிறார். இதுபோன்ற கட்டுமான வேலையை நீங்கள் செய்திருக்கிறீர்களா? விசேஷ திறமைகள் எதுவும் இல்லையென்றாலும், உங்களால் அந்த வேலையைச் செய்ய முடியும்.

12. பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

12 பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு உதவும்போதும் நாம் யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்கிறோம்! நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்? பண உதவி செய்வதன் மூலம் உதவலாம்! (யோவா. 13:34, 35; அப். 11:27-30) அதோடு, அவர்களுடைய வீட்டைச் சுத்தம் செய்துகொடுக்கலாம் அல்லது பழுதுபார்த்து கொடுக்கலாம். போலந்து நாட்டைச் சேர்ந்த காப்ரியேலா என்ற சகோதரியின் வீடு வெள்ளத்தால் ரொம்பவே பாதிக்கப்பட்டது. அப்போது, அக்கம்பக்கத்து சபைகளிலிருந்த சகோதரர்கள் ஓடோடி வந்து உதவினார்கள். அதைப் பார்த்து காப்ரியேலா ரொம்பச் சந்தோஷப்பட்டார். இழந்ததை நினைத்து கவலைப்படுவதற்குப் பதிலாகப் பெற்றுக்கொண்டதை நினைத்து அவர் சந்தோஷப்பட்டார். “கிறிஸ்தவ சபையின் பாகமா இருக்குறது எனக்கு கிடைச்ச பெரிய பாக்கியம். உண்மையான சந்தோஷம் இங்கதான் கிடைக்குங்குறத, இந்த அனுபவம் எனக்கு கத்துக்கொடுத்திருக்கு” என்று அவர் சொல்கிறார். பேரழிவால் பாதிக்கப்பட்ட நிறைய பேருக்கு உதவி கிடைத்திருக்கிறது; அவர்களும் காப்ரியேலாவை போல்தான் உணர்கிறார்கள். இவர்களுக்கு உதவுவதன் மூலம் நிறைய சகோதரர்கள் யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள்; அவர்களுக்கும் இதேபோன்ற சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கிறது.—அப்போஸ்தலர் 20:35-ஐயும், 2 கொரிந்தியர் 9:6, 7-ஐயும் வாசியுங்கள்.

13. வாலன்டியராக சேவை செய்யும்போது, யெகோவாவின் மீது நாம் வைத்திருக்கும் அன்பு எப்படி அதிகமாகிறது? ஓர் உதாரணம் கொடுங்கள்.

13 ஸ்டெஃபனீ என்ற சகோதரியும் மற்ற பிரஸ்தாபிகளும் இன்னொரு விதத்தில் யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்தார்கள். எப்படி? சில சகோதர சகோதரிகள், தங்களுடைய நாட்டில் போர் நடந்ததால், அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வந்தார்கள். அகதிகளாக வந்த அவர்களுக்கு, ஸ்டெஃபனீயும் மற்ற பிரஸ்தாபிகளும் வீடு பார்த்து கொடுத்தார்கள்; சாமான்களையும் வாங்கிக் கொடுத்தார்கள். இதைப் பற்றி ஸ்டெஃபனீ இப்படிச் சொல்கிறார்: “உலகம் முழுசும் இருக்கிற சகோதர சகோதரிகளோட அன்பை ருசிக்கிறப்போ, அகதிகளா வந்த அவங்க முகத்துல சந்தோஷம் தெரியுது. அதுக்கு அவங்க ரொம்ப நன்றியோட இருக்காங்க. அத பார்த்து நாங்க பூரிச்சு போயிட்டோம். நாங்க அவங்களுக்கு உதவி செஞ்சதா அவங்க நினைக்குறாங்க, ஆனா உண்மைய சொல்லப்போனா அவங்கதான் எங்களுக்கு உதவி செஞ்சிருக்காங்க. அன்பு... ஐக்கியம்... விசுவாசம்... யெகோவாமேல இருக்குற நம்பிக்கை... இப்படி எல்லாத்தையும் பார்க்க முடிஞ்சுது. யெகோவாமேல நாங்க வெச்சிருக்குற அன்பை இந்த அனுபவம் இன்னும் அதிகமாக்கியிருக்கு. அமைப்பு நமக்காக செய்ற எல்லாத்தையும் நினைக்குறப்போ எங்க மனசுல நன்றி பொங்குது.”

யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்யுங்கள்

14, 15. (அ) ஏசாயா தீர்க்கதரிசிக்கு என்ன மனப்பான்மை இருந்தது? (ஆ) ஏசாயாவின் மனப்பான்மையை கிறிஸ்தவர்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

14 யெகோவாவோடு சேர்ந்து இன்னும் அதிகமாக வேலை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், தேவை அதிகமுள்ள இடத்துக்கு மாறிப் போக முடியுமா என்று யோசித்துப்பாருங்கள். தாராள குணத்தைக் காட்டுவதற்காக, கடவுளுடைய ஊழியர்கள் எல்லாரும் அப்படித் தூரமாகப் போய் ஊழியம் செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இல்லை என்பது உண்மைதான். இருந்தாலும், அப்படி மாறிப் போக சில சகோதர சகோதரிகளின் சூழ்நிலை அனுமதிக்கிறது. இப்படிப்பட்டவர்கள், ஏசாயா தீர்க்கதரிசியின் மனப்பான்மையைக் காட்டுகிறார்கள். “நான் யாரை அனுப்புவேன், எங்களுக்காக யார் போவார்கள்?” என்று யெகோவா கேட்டபோது, “இதோ, நான் இருக்கிறேன்! என்னை அனுப்புங்கள்!” என்று அவர் சொன்னார். (ஏசா. 6:8) யெகோவாவின் அமைப்புக்கு உதவ உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? உங்களால் அப்படிச் செய்ய முடியுமா? அப்படியென்றால், நீங்கள் எப்படியெல்லாம் உதவலாம்?

15 பிரசங்க வேலையைப் பற்றியும் சீஷராக்கும் வேலையைப் பற்றியும் இயேசு என்ன சொன்னார் என்று கவனியுங்கள். “அறுவடை அதிகமாக இருக்கிறது, ஆனால் வேலையாட்கள் குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பச் சொல்லி அறுவடையின் எஜமானிடம் கெஞ்சிக் கேளுங்கள்” என்று அவர் சொன்னார். (மத். 9:37, 38) வேலையாட்கள் குறைவாக இருக்கும் ஓர் இடத்துக்கு மாறிப் போய் பயனியர் சேவை செய்ய உங்களால் முடியுமா? அல்லது, அப்படிச் செய்ய வேறு ஒருவருக்கு உங்களால் உதவ முடியுமா? பிரஸ்தாபிகள் குறைவாக இருக்கும் இடத்துக்கு மாறிப் போய் பயனியராக சேவை செய்வதுதான் கடவுள்மீதும் மக்கள்மீதும் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டுவதற்கான சிறந்த வழி என்று நிறைய சகோதர சகோதரிகள் சொல்கிறார்கள். யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய வேறு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று உங்களால் யோசித்துப்பார்க்க முடியுமா? அந்த வழிகளில் சேவை செய்வதும் உங்களுக்குச் சந்தோஷத்தைத் தரும்.

16, 17. யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய வேறு என்னென்ன வழிகள் இருக்கின்றன?

16 பெத்தேலில் சேவை செய்ய அல்லது கட்டுமான வேலைகளில் கலந்துகொள்ள உங்களுக்கு விருப்பமா? தேவைப்பட்டால் இந்தச் சேவையை நீங்கள் தற்காலிகமாகச் செய்யலாம் அல்லது வாரத்தில் சில நாட்கள் மட்டுமே செய்யலாம். யெகோவாவின் அமைப்புக்கு எப்போதுமே ஆட்கள் தேவை. எங்கே வேண்டுமானாலும் சரி, எந்த வேலையாக இருந்தாலும் சரி, ஒருவேளை அந்த வேலையில் அனுபவம் இல்லாமல் இருந்தாலும் சரி, கொடுக்கப்படும் வேலையை மனப்பூர்வமாகச் செய்ய விரும்பும் ஆட்கள் யெகோவாவின் அமைப்புக்குத் தேவை. தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்வதற்காகத் தியாகங்கள் செய்ய மனமுள்ள ஒவ்வொருவரையும் யெகோவா உயர்வாக மதிக்கிறார்.—சங். 110:3.

17 யெகோவாவுக்கு அதிகமாகச் சேவை செய்ய உங்களுக்கு இன்னும் பயிற்சி தேவை என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்ள விண்ணப்பியுங்கள். ஏற்கெனவே முழுநேர ஊழியம் செய்யும் முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகளை இந்தப் பள்ளி பயிற்றுவிக்கிறது; இதன் மூலம், யெகோவாவின் அமைப்பில் அவர்களை இன்னும் நன்றாகப் பயன்படுத்த முடிகிறது. இந்தப் பள்ளியில் கலந்துகொள்பவர்கள், அமைப்பு சொல்லும் இடத்துக்குப் போக மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த விதத்தில் யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா?—1 கொ. 9:23.

18. ஒவ்வொரு நாளும் யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்யும்போது என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன?

18 நாம் யெகோவாவின் மக்களாக இருப்பதால், தாராள குணமுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் தயவானவர்களாகவும் நல்மனமுள்ளவர்களாகவும் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நாம் மற்றவர்கள்மேல் அக்கறை காட்டுகிறோம். இது நமக்குச் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொடுக்கிறது. (கலா. 5:22, 23) நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் சரி, யெகோவாவின் சக வேலையாட்களாக சேவை செய்யும்போதும், அவரைப் போலவே தாராள குணத்தைக் காட்டும்போதும் சந்தோஷமாக இருப்பீர்கள்.—நீதி. 3:9, 10.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்