படிப்புக் கட்டுரை 24
கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிராக இருக்கிற எல்லா தவறான யோசனைகளையும் தகர்த்தெறியுங்கள்!
“தவறான யோசனைகளையும், கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்குகிற ஆணவமான எல்லாவற்றையும் நாங்கள் தகர்த்தெறிந்து வருகிறோம்.”—2 கொ. 10:5.
பாட்டு 63 என்றும் பற்றுள்ளோராய்
இந்தக் கட்டுரையில்...a
1. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் என்ன எச்சரிப்பைக் கொடுத்தார்?
“நிறுத்துங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். நிறுத்துவதா? எதை நிறுத்துவது? ‘இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்த வேண்டும்.’ (ரோ. 12:2) இந்த வார்த்தைகளை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதினார். கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்த, கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்ட அந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர் ஏன் இந்தளவு வலிமையான ஓர் எச்சரிப்பைக் கொடுத்தார்?—ரோ. 1:7.
2-3. யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிப்பதற்கு சாத்தான் எப்படி முயற்சி செய்கிறான், நம்முடைய மனதில் “ஆழமாக வேரூன்றிய” விஷயங்களை எப்படித் தகர்த்தெறியலாம்?
2 சாத்தானுடைய உலகத்தின் தவறான யோசனைகளும் தத்துவங்களும் அன்றிருந்த சில கிறிஸ்தவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தின. அதனால்தான் பவுல் அந்த எச்சரிப்பைக் கொடுத்தார். (எபே. 4:17-19) நமக்கும் அந்த நிலைமை வர வாய்ப்பு இருக்கிறதா? இந்த உலகத்தின் அதிபதியான சாத்தான், யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிப்பதற்கு தன்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்கிறான். அதற்குப் பல தந்திரங்களைப் பயன்படுத்துகிறான். மற்றவர்கள் நமக்கு முக்கியத்துவம் தர வேண்டும் அல்லது புகழின் உச்சிக்கு நாம் போக வேண்டும் என்ற ஆசை நமக்குள் இருந்தால், சாத்தான் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறான். அவன் பயன்படுத்துகிற தந்திரங்களில் இதுவும் ஒன்று! நம்முடைய கடந்த கால அனுபவம், கலாச்சாரம், கல்வி ஆகியவற்றின் மூலம் நாம் கற்றுக்கொண்ட விஷயங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவனைப் போலவே நம்மையும் யோசிக்க வைக்கிறான்.
3 நம்முடைய மனதில் “ஆழமாக வேரூன்றிய” விஷயங்களைத் தகர்த்தெறிவது சாத்தியமா? (2 கொ. 10:4) பவுல் சொல்லும் பதிலைக் கவனியுங்கள். “தவறான யோசனைகளையும், கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்குகிற ஆணவமான எல்லாவற்றையும் நாங்கள் தகர்த்தெறிந்து வருகிறோம். அதோடு, எல்லா எண்ணங்களையும் கட்டுப்படுத்தி கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் செய்துவருகிறோம்” என்று அவர் சொன்னார். (2 கொ. 10:5) நம் மனதில் இருக்கும் தவறான எண்ணங்களை யெகோவாவின் உதவியோடு நம்மால் மாற்றிக்கொள்ள முடியும் என்பது இதிலிருந்து தெரிகிறது. வியாதியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு எதிராக மருந்து செயல்படுகிறது! அதேபோல் சாத்தானுடைய உலகத்தால் ஏற்பட்ட மோசமான பாதிப்புகளுக்கு எதிராகச் செயல்பட கடவுளுடைய வார்த்தை நமக்கு உதவுகிறது.
‘நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுங்கள்’
4. சத்தியத்தை ஏற்றுக்கொண்டபோது நாம் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது?
4 சத்தியத்தை ஏற்றுக்கொண்டு யெகோவாவை வணங்க வேண்டும் என்று முடிவு எடுத்தபோது நீங்கள் செய்த மாற்றங்களைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக, நம்மில் நிறைய பேர் தவறான பழக்கவழக்கங்களை மாற்றியிருக்கிறோம். (1 கொ. 6:9-11) அந்த மாற்றங்களைச் செய்வதற்கு நமக்கு உதவியதற்காக யெகோவாவுக்கு நாம் ரொம்பவே நன்றியோடு இருக்கிறோம், இல்லையா?
5. என்ன இரண்டு விஷயங்களைச் செய்யும்படி ரோமர் 12:2 சொல்கிறது?
5 ‘நிறைய மாற்றங்கள நான் செஞ்சிட்டேன், அதுவே போதும்’ என்று நாம் திருப்தியடைந்துவிடக் கூடாது. ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு செய்துகொண்டிருந்த பெரிய பாவங்களை இப்போது நாம் செய்வதில்லை. ஆனால், அதே பாவங்களை மறுபடியும் செய்யத் தூண்டுகிற எல்லாவற்றையும் தவிர்ப்பதற்கு நாம் கடினமாகப் போராட வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்? “இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள்” என்று பவுல் சொன்னார். (ரோ. 12:2) அப்படியென்றால், இரண்டு விஷயங்களை நாம் செய்ய வேண்டும். முதலாவது, ‘இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்த வேண்டும்.’ அதாவது, இந்த உலகம் நம்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு நாம் இடம்கொடுக்கக் கூடாது. இரண்டாவது, ‘நாம் யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.’
6. மத்தேயு 12:43-45-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்?
6 வெறுமனே வெளித்தோற்றத்தை மாற்றிக்கொள்வதை பற்றி பவுல் சொல்லவில்லை. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். (“மாற்றமா இல்லை வேஷமா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.) நம்முடைய மனதை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்! அதாவது, நம் மனப்பான்மையையும் உணர்வுகளையும் விருப்பங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்! அதனால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்வது முக்கியம்: ‘ஒரு கிறிஸ்தவனா வாழ்றதுக்கு நான் செஞ்சிட்டிருக்கிற மாற்றங்கள் வெறுமனே மேலோட்டமா இருக்கா, இல்ல என் இதயத்தோட ஆழத்துல நான் மாற்றங்கள செஞ்சிருக்கேனா?’ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மத்தேயு 12:43-45-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன. (வாசியுங்கள்.) இயேசு நமக்குச் சொல்லித்தரும் பாடம் இதுதான்: தவறான எண்ணங்களை மனதிலிருந்து எடுத்துப்போட்டால் மட்டும் போதாது, கடவுளுக்குப் பிடித்த எண்ணங்களை அதில் நிரப்பவும் வேண்டும்!
“மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை புதுப்பித்துக்கொண்டே இருங்கள்”
7. நம்முடைய இதயத்தையும் மனதையும் எப்படி மாற்றிக்கொள்ளலாம்?
7 மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை நம்மால் மாற்றிக்கொள்ள முடியுமா? இந்தக் கேள்விக்கு பைபிள் தரும் பதில் இதுதான்: “உங்கள் மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை புதுப்பித்துக்கொண்டே இருங்கள். கடவுளுடைய விருப்பத்தின்படி, உண்மையான நீதிக்கும் உண்மைத்தன்மைக்கும் ஏற்றபடி உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.” (எபே. 4:23, 24) இதிலிருந்து என்ன தெரிகிறது? நம்முடைய இதயத்தையும் மனதையும் நம்மால் மாற்றிக்கொள்ள முடியும்! ஆனால், அது அவ்வளவு சுலபம் கிடையாது. ஏனென்றால், தவறான ஆசைகளையும் செயல்களையும் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்ல, நம்முடைய ‘மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையையும்’ நாம் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நம்முடைய ஆசைகளையும், நாம் நடந்துகொள்ளும் விதத்தையும், நம் உள்நோக்கங்களையும் மாற்றிக்கொள்வதை இது குறிக்கிறது. இப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்ய நாம் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும்.
8-9. மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை மாற்றிக்கொள்வது முக்கியம் என்பதை ஒரு சகோதரரின் அனுபவம் எப்படிக் காட்டுகிறது?
8 முன்பு முரடனாக இருந்த ஒரு சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். குடிப்பதையும் சண்டைபோடுவதையும் நிறுத்திய பிறகு அவர் ஞானஸ்நானம் எடுத்தார். அவர் செய்த மாற்றங்களைப் பார்த்த அந்த ஊர் மக்களுக்கு அது ஓர் அருமையான சாட்சியாக இருந்தது. ஆனால், ஞானஸ்நானம் எடுத்த கொஞ்ச நாளிலேயே அவருக்கு ஒரு சோதனை வந்தது. ஒருநாள் சாயங்காலம், குடிபோதையில் இருந்த ஒருவன் அவருடைய வீட்டுக்கு வந்து அவரை சண்டைக்கு இழுத்தான். அவனோடு சண்டை போட வேண்டும் என்ற தூண்டுதலை நம் சகோதரர் ஆரம்பத்தில் கட்டுப்படுத்தினார். ஆனால், அந்தக் குடிகாரன் யெகோவாவைப் பற்றித் தவறாகப் பேசியபோது, அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வீட்டுக்கு வெளியே போய் அவனை அடித்து உதைத்தார்! அவருடைய பிரச்சினை என்னவென்று புரிகிறதா? அவர் பைபிளைப் படித்தது, சண்டை போடுவதற்கான தூண்டுதலை கட்டுப்படுத்த அவருக்கு உதவியது. ஆனால், மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை அவரால் இன்னமும் மாற்றிக்கொள்ள முடியவில்லை! அதாவது, அவர் உள்ளுக்குள் எப்படிப்பட்ட நபராக இருக்கிறார் என்பதை அவரால் மாற்றிக்கொள்ள முடியவில்லை!
9 இருந்தாலும், தன்னை மாற்றிக்கொள்ள அவர் தொடந்து முயற்சி செய்தார். (நீதி. 24:16) மூப்பர்களின் உதவியோடு அவர் முன்னேற்றம் செய்துகொண்டே வந்தார். பிறகு, அவர் ஒரு மூப்பராக ஆனார். இப்போது, பல வருஷங்களுக்குமுன் வந்த அதே சோதனை மறுபடியும் வந்தது. ஒருநாள் சாயங்காலம், குடிபோதையில் இருந்த ஒருவன் ஒரு மூப்பரை அடிப்பதற்காக ராஜ்ய மன்றத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்தான். அப்போது நம் சகோதரர் என்ன செய்தார்? அந்தக் குடிகாரனிடம் சாந்தமாகவும் அன்பாகவும் பேசினார், அவனுக்குப் புரியவைத்தார், அவனுடைய கோபத்தைத் தணித்தார். தள்ளாடிக்கொண்டிருந்த அவன், தன்னுடைய வீட்டுக்குப் போய்ச் சேர உதவினார். இப்படி நடந்துகொள்ள நம்முடைய சகோதரரால் எப்படி முடிந்தது? மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை அவர் மாற்றியிருந்தார்! அவர் உண்மையிலேயே சமாதானமான, மனத்தாழ்மையான ஒரு நபராக மாறியிருந்தார். இது யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தது!
10. நம் சுபாவத்தை மாற்றிக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
10 இப்படிப்பட்ட மாற்றங்கள் திடீரென்றும் நடக்காது, தானாகவும் நடக்காது. பல வருஷங்கள் நாம் “ஊக்கமாக முயற்சி” செய்ய வேண்டியிருக்கலாம்! (2 பே. 1:7) நிறைய வருஷங்கள் “சத்தியத்தில்” இருக்கிறோம் என்பதற்காக நாம் இந்த மாற்றங்களைச் செய்துவிடுவோம் என்றும் சொல்லிவிட முடியாது. நம் சுபாவத்தை மாற்றிக்கொள்ள நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்ய சில அடிப்படையான விஷயங்கள் நமக்கு உதவும். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை மாற்றுங்கள்
11. மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை மாற்றிக்கொள்ள ஜெபம் எப்படி உதவும்?
11 ஜெபம் செய்யுங்கள்! நாம் எடுக்க வேண்டிய முதல் படியும் மிக முக்கியமான படியும் இதுதான்! “கடவுளே, சுத்தமான இதயத்தை எனக்குள் உருவாக்குங்கள். உறுதியான புதிய மனதை எனக்குள் வையுங்கள்” என்று ஜெபம் செய்த சங்கீதக்காரரைப் போலவே நாமும் செய்ய வேண்டும். (சங். 51:10, அடிக்குறிப்பு) நம்முடைய மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை மாற்றுவது அவசியம் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். அப்படி மாற்றுவதற்கு யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும். யெகோவா நமக்கு உதவுவார் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்? எசேக்கியேல் காலத்தில் வாழ்ந்த கல்நெஞ்சம் கொண்ட இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதி நம்மை உற்சாகப்படுத்துகிறது. “நான் உங்களுக்கு ஒரே இதயத்தையும் புதிய மனதையும் கொடுப்பேன். . . . மென்மையான இதயத்தை [அதாவது, கடவுளுடைய அறிவுரைகளைக் கேட்டு நடக்கிற இதயத்தை] உங்களுக்குக் கொடுப்பேன்” என்று வாக்குறுதி கொடுத்தார். (எசே. 11:19, அடிக்குறிப்பு) இஸ்ரவேலர்கள் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தேவையான உதவியைச் செய்ய யெகோவாவுக்கு மனம் இருந்தது. இன்று நமக்கு உதவவும் அவருக்கு மனம் இருக்கிறது.
12-13. (அ) சங்கீதம் 119:59 சொல்கிறபடி, நாம் எதைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும்? (ஆ) நாம் என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
12 ஆழமாக யோசித்துப்பாருங்கள்! இது நாம் எடுக்க வேண்டிய முக்கியமான இரண்டாவது படி! கடவுளுடைய வார்த்தையை ஒவ்வொரு நாளும் நாம் கவனமாகப் படிக்க வேண்டும். என்னென்ன யோசனைகளையும் உணர்வுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, படித்த விஷயங்களை ஆழமாக யோசித்துப்பார்க்க நேரம் ஒதுக்க வேண்டும். (சங்கீதம் 119:59-ஐ வாசியுங்கள்; எபி. 4:12; யாக். 1:25) மனித தத்துவங்கள் நம் யோசனைகளை ஆதிக்கம் செலுத்துகின்றனவா என்பதையும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். நம்முடைய பலவீனங்களை நாம் நேர்மையாக ஒத்துக்கொள்ள வேண்டும். பிறகு, அவற்றிலிருந்து வெளியேவர கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.
13 உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் இதயத்துல பொறாமை இருக்குறதுக்கான அடையாளம் ஏதாவது தெரியுதா?’ (1 பே. 2:1) ‘என்னோட பின்னணி, கல்வி, சொத்துப்பத்து, இதையெல்லாம் நினைச்சு நான் பெருமைப்படுறேனா?’ (நீதி. 16:5) ‘என் அளவுக்கு வசதியா இல்லாதவங்களையும் வேற இனத்த சேர்ந்தவங்களையும் தாழ்வா பார்க்குறேனா?’ (யாக். 2:2-4) ‘சாத்தானோட உலகத்துல இருக்கிற விஷயங்கள் என்னை கவர்ந்து இழுக்குதா?’ (1 யோ. 2:15-17) ‘ஒழுக்கக்கேடான, வன்முறையான பொழுதுபோக்குகள நான் விரும்புறேனா?’ (சங். 97:10; 101:3; ஆமோ. 5:15) இந்தக் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லும்போது, எந்த விஷயத்தில் நீங்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். இதயத்தில் “ஆழமாக வேரூன்றிய” யோசனைகளைத் தகர்த்தெறியும்போது, நம் பரலோகத் தந்தையைப் பிரியப்படுத்துவோம்.—சங். 19:14.
14. நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம்?
14 நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்! இது நாம் எடுக்க வேண்டிய மூன்றாவது படி! நாம் யாரோடு பழகுகிறோமோ அவர்களுடைய தாக்கம் நம்மீது அதிகமாக இருக்கும். இதை நாம் உணருகிறோமோ இல்லையோ, இதுதான் உண்மை! (நீதி. 13:20) வேலை செய்யும் இடத்தில் அல்லது பள்ளியில், கடவுள் யோசிப்பதுபோல் யோசிப்பதற்கு உதவுகிற ஆட்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. சபைக் கூட்டங்களிலோ, நமக்கு மிகச் சிறந்த நண்பர்கள் கிடைப்பார்கள். “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும்” நமக்குத் தேவையான உற்சாகம் அங்குதான் கிடைக்கும்.—எபி. 10:24, 25.
“விசுவாசத்தில் பலப்படுகிறவர்களாக இருங்கள்”
15-16. நம் யோசனைகளை மாற்ற சாத்தான் எப்படி முயற்சி செய்கிறான்?
15 நம் யோசனைகளை மாற்றுவதிலேயே சாத்தான் குறியாக இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள். நம் யோசனைகளின் மீது கடவுளுடைய வார்த்தை ஏற்படுத்தியிருக்கிற நல்ல தாக்கத்தைக் கெடுப்பதற்காக, அவன் வித்தியாசமான போதனைகளையும் பயன்படுத்துகிறான்.
16 “கடவுள் நிஜமாகவே சொன்னாரா?” இதுதான் ஏதேன் தோட்டத்தில் ஏவாளிடம் அவன் கேட்ட கேள்வி! அன்று கேட்ட அதே கேள்வியைத்தான் அவன் இன்றும் கேட்கிறான். (ஆதி. 3:1) சாத்தானுடைய கைக்குள் இருக்கிற இந்த உலகத்தில், நம்முடைய நம்பிக்கைகள்மீது சந்தேகத்தைக் கிளப்புகிற சில கேள்விகளை நாம் அடிக்கடி எதிர்ப்படுகிறோம். உதாரணத்துக்கு, ‘ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் கல்யாணம் செய்றத கடவுள் நிஜமாவே ஏத்துக்குறது இல்லையா? கிறிஸ்மஸையும் பிறந்த நாளையும் நீங்க கொண்டாட கூடாதுனு கடவுள் நிஜமாவே சொல்றாரா? ரத்தம் ஏத்திக்க கூடாதுனு உங்க கடவுள் நிஜமாவே எதிர்பார்க்குறாரா? அன்பான கடவுள், சபை நீக்கம் செய்யப்பட்ட குடும்பத்தார்கிட்ட இல்லனா நண்பர்கள்கிட்ட நீங்க சகவாசம் வெச்சுக்க கூடாதுனு நிஜமாவே சொல்றாரா?’ என்றெல்லாம் மக்கள் நம்மைக் கேட்கிறார்கள்.
17. நம்முடைய நம்பிக்கைகளின் மீது சந்தேகத்தைக் கிளப்புகிற கேள்விகளை எதிர்ப்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும், அப்படிச் செய்யும்போது என்ன பலன் கிடைக்கும் என்று கொலோசெயர் 2:6, 7 சொல்கிறது?
17 நம்முடைய நம்பிக்கைகள் சரியானவைதான் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். சந்தேகத்தைக் கிளப்புகிற கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்கவில்லை என்றால், சந்தேக விதைகள் நம் மனதில் வேர்விட்டு வளர ஆரம்பித்துவிடும். இப்படிப்பட்ட சந்தேகங்கள் நம் யோசனைகளைக் கெடுத்துவிடும், கடைசியில் நம் விசுவாசத்தை சிதைத்துவிடும். அப்படியென்றால், நாம் என்ன செய்ய வேண்டும்? நம் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. அப்படிச் செய்தால்தான், “நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம்” என்னவென்பதை நாம் நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும். (ரோ. 12:2, அடிக்குறிப்பு) பைபிளையும் நம்முடைய பிரசுரங்களையும் தொடர்ந்து படித்தால், நாம் கற்றுக்கொண்ட சத்தியங்கள் உண்மையானவை என்பதை நம்மால் நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும். யெகோவாவின் தராதரங்கள் சரியானவை என்பதில் நமக்குத் துளிகூட சந்தேகம் இருக்காது. அப்போது, ஆழமாக வேரூன்றிய மரத்தைப் போல நாம் உறுதியாக இருப்போம்; ‘விசுவாசத்தில் பலப்பட்டவர்களாக’ இருப்போம்.—கொலோசெயர் 2:6, 7-ஐ வாசியுங்கள்.
18. சாத்தானுடைய உலகத்தால் ஏற்பட்டிருக்கும் மோசமான பாதிப்புகளை எதிர்த்து செயல்பட எவை நமக்கு உதவும்?
18 உங்களுடைய விசுவாசத்தை நீங்கள்தான் பலப்படுத்த வேண்டும். உங்களுக்காக வேறு யாரும் அதைச் செய்ய முடியாது. அதனால், மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருங்கள். எப்போதும் ஜெபம் செய்யுங்கள்; யெகோவாவுடைய சக்திக்காகக் கெஞ்சிக் கேளுங்கள்; படித்த விஷயங்களை ஆழமாக யோசித்துப்பாருங்கள்; உங்கள் யோசனைகளையும் உள்நோக்கங்களையும் தொடர்ந்து சோதித்துப்பாருங்கள். அதோடு, நல்ல நண்பர்களைக் கண்டுபிடியுங்கள்; நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள உதவுகிற ஆட்களோடு எப்போதும் பழகுங்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, சாத்தானுடைய உலகத்தால் ஏற்பட்டிருக்கிற மோசமான பாதிப்புகளுக்கு எதிராக உங்களால் செயல்பட முடியும். அதோடு, “தவறான யோசனைகளையும், கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்குகிற ஆணவமான எல்லாவற்றையும்” உங்களால் தகர்த்தெறிய முடியும்!—2 கொ. 10:5.
பாட்டு 58 என் அர்ப்பண ஜெபம்
a கடந்த கால அனுபவங்கள், கலாச்சாரம், கல்வி ஆகியவை நல்ல விதத்திலோ கெட்ட விதத்திலோ நம்முடைய யோசனைகள்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தவறான எண்ணங்கள் நமக்குள் ஆழமாக வேரூன்றியிருப்பதை நாம் உணரலாம். அப்படிப்பட்ட எண்ணங்களை நாம் எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.