வீட்டு பைபிள் படிப்புகளுக்காகத் தயாரிப்பதும் நடத்துவதும்
1 நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், சீஷராக்கவும் வேண்டுமென்று இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்குக் கட்டளையிட்டார். (மத். 24:14; 28:19, 20) வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துவது சீஷர்களை உண்டுபண்ணுவதற்கு அதிக திறம்பட்ட வழியாய் இருக்கிறது. இந்த முக்கியமான வேலை நம்முடைய வணக்கத்தின் பாகமாக இருப்பதால், வீட்டு பைபிள் படிப்புகளுக்குத் தயாரிக்கும் போதும் நடத்தும் போதும் மிகச் சிறந்ததைச் செய்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
2 படிப்புக்காகத் தயாரித்தல்: ஒரு வீட்டு பைபிள் படிப்பை நடத்துவதற்காகத் தயாரிப்பது, வெறுமென பாடத்தை வாசித்து மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கும் வசனங்களைப் பார்ப்பதற்கும் மேலாக அதிகம் உட்பட்டிருக்கிறது. நம்முடைய பைபிள் மாணாக்கரின் இருதயத்தை எட்டுவதற்கு, அவரை உந்துவிக்கச் செய்யும் விதத்தில் நாம் பொருளை அளிக்க வேண்டியிருக்கிறது.
3 முதலாவது, நாமே பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா வசனங்களும் எவ்வாறு பாராக்களுக்கும் பைபிள் மாணாக்கருக்கும் பொருந்துகிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். முக்கியமான வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் கோடிடுவது ஞாபகத்தில் வைப்பதற்கு நமக்கு உதவி செய்கிறது. பாடத்தின் முக்கியமான கருத்துகளைத் தனியே பிரித்தெடுத்து, அவற்றை எவ்வாறு மாணாக்கர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். கூடுதலாக, மாணாக்கரின் வேதாகம அறிவின் அளவு, சில விஷயங்களை ஏற்றுக்கொள்வதில் அவருக்கு இருந்த பிரச்னைகள், கிறிஸ்தவ ஆள்தன்மையை மேம்படுத்துவதற்கான அவருடைய தேவை போன்ற காரியங்களை சிந்திக்க வேண்டும். நாம் இவ்வாறு கேட்கலாம்: ‘பாடத்தில் இருக்கும் பொருளையும் வசனங்களையும் அவர் முன்னேற்றம் அடைவதற்கு உதவி செய்ய எவ்வாறு உபயோகிக்கலாம்?’ சில சமயங்களில் கூடுதலான ஆராய்ச்சி ஒருவேளை அவசியமாயிருக்கும். மாணாக்கர் உண்மையில் பயனடைய வேண்டுமென்றால், கவனமாக தயாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
4 ஒரு பைபிள் படிப்புக்காக தயாரிக்கையில் யெகோவாவிடம் ஜெபிப்பது ஒரு முக்கியமான பாகமாக இருக்கிறது. ஜெபிக்கையில் அந்த நபரைக் குறித்தும், அவருடைய தேவைகளைக் குறித்தும் திட்டவட்டமாய்க் குறிப்பிட்டு அவருடைய இருதயத்தை எட்டவதற்கு யெகோவா உங்களுக்கு உதவி செய்யுமாறு கேளுங்கள்.—1 கொரி. 3:6.
5 படிப்பை நடத்துதல்: சத்தியத்தைத் தன்னுடையதாக ஆக்கிக்கொள்ள ஒரு நபருக்கு உதவி செய்வதற்கு நம்முடைய பங்கில் முயற்சி தேவைப்படுகிறது. படிப்புக்கான பொருளை வெறுமென வகுப்பறையில் படிப்பதுபோன்ற விதத்தில் சிந்திப்பது, அந்த நபர் அறிவை எடுத்துக்கொள்வதற்கு ஒருவேளை உதவி செய்யலாம், ஆனால், தான் கற்றுக்கொள்ளும் காரியங்களை அவர் நம்புகிறாரா? அந்தப் பொருள் எவ்வாறு அவரைத் தனிப்பட்ட விதமாகப் பாதிக்கிறது என்பதையும், அவர் கற்றுக்கொண்டவைகளைக் குறித்து அவர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் மாணாக்கர் காண உதவுங்கள்.—கொலோ. 3:10.
6 சிந்திக்கப்படும் பொருளோடு, நேரடியாக சம்பந்தப்பட்டிராத விஷயங்களுக்குக் கலந்தாலோசிப்பு விலகிச்செல்ல அனுமதிக்கும் இடறுகுழியைத் தவிருங்கள். இவைகள் படிப்புக்குப் பிறகு, அல்லது மற்றொரு சமயம் கலந்தாலோசிக்கப்படலாம். மாணாக்கர் புத்தகத்திலிருந்து வெறுமென வாசிக்காமல், தன் சொந்த வார்த்தைகளில் பதில் சொல்லும்படி செய்வதும் முக்கியமானது. இது அவர் பொருளைப் புரிந்துகொண்டிருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை நிர்ணயிக்க உங்களுக்கு உதவும்.
7 ஒரு நல்ல போதகர் முக்கியமான குறிப்புகளை அழுத்துகிறார். அப்போது மாணாக்கர் அவைகளைத் தவறவிட மாட்டார். விஷயங்களின் உட்பகுதிக்குள் செய்யக்கூடிய சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் மூலம் இயேசு இவைகளைச் செய்தார். (மத். 16:13-16; 17:24-27) கேள்விகள் மாணாக்கர் புரிந்துகொள்கிறார் என்று நீங்கள் நிச்சயமாயிருக்க உதவி செய்வது மட்டுமல்லாமல், அவர்களுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதையும் வெளிக்காட்டுகிறது. தான் சொல்லிக்கொண்டிருந்தவைகளைக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் சிந்திப்பதற்கு இயேசு எளிய சிக்கலற்ற உதாரணங்களையுங்கூட உபயோகித்தார்.—மத். 13:31-33; 24:32, 33.
8 படிப்பின் முடிவில் உங்களுடைய விமரிசனத்தில் முக்கியமான வசனங்களைச் சேர்த்துக்கொள்ள நிச்சயமாயிருங்கள். மாணாக்கர் தான் கற்றுக்கொண்டவைகளைப்பற்றி எவ்வாறு உணருகிறார் என்பதை நீங்கள் காண்பற்கு உதவிசெய்யக்கூடிய கேள்விகளையும், தான் கற்றுக்கொண்டவற்றை எப்படி அவர் பிரயோகிக்கலாம் என்பதன் பேரில் கவனம் ஊன்றவைக்கும் கேள்விகளையும் உபயோகியுங்கள். உங்களுடைய அடுத்த படிப்பின் ஆரம்பத்தில், முக்கிய குறிப்புகளை மறுபடியும் சுருக்கமாக விமர்சியுங்கள்.
9 யெகோவாவின் ஊழியர்களாக ஆவதற்கு நாம் ஜனங்களைப் பயிற்றுவிக்கிறோம். இது ஒரு சிலாக்கியமும், கனத்த உத்தரவாதமுமாக இருக்கிறது. வீட்டு பைபிள் படிப்புகளில் உங்களுடைய கற்பிக்கும் தரத்தை நீங்கள் மேம்படுத்த முடியுமா? வீட்டு பைபிள் படிப்புகளுக்காக தயாரிப்பதையும் நடத்துவதையும் நம்மால் முடிந்த அளவு மிகச் சிறப்பாக நாம் செய்ய வேண்டும்.—1 தீமோ. 4:15, 16.