தனிப்பட்ட ஒழுங்கமைப்புக்கு கவனம் செலுத்துங்கள்
1. ஒரு வேலை செய்து முடிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ஏற்கெனவே அதிக வேலையாக இருக்கும் ஒருவரிடம் கொடுங்கள். “இக்கூற்றின் பின்னால் அடங்கிய பகுத்தாராய்வு என்னவென்றால் அதிக வேலையாயுள்ள ஓர் ஆள், பொதுவாக நல்ல ஒழுங்கமைப்புள்ளவராக இருக்கிறார், அதனால் அதிகத்தை நிறைவேற்றும் நிலையில் இருக்கிறார். நாம் அனைவருமே, உபயோகிப்பதற்கு ஒவ்வொரு நாளிலும் 24 மணி நேரத்தைக் கொண்டிருக்கிறோம். நாம் அந்நேரத்தை விரயம் செய்கிறோம், அல்லது அதா ஞானமாய் பயன்படுத்துகிறோமா என்பது நமது தனிப்பட்ட ஒழுங்கமைப்பைப் பொருத்தது.
2. எப்போதுமே “கர்த்தருடைய கிரியையில் அதிகம் செய்வதற்கு இருக்கிறது.” (1 கொரி. 15:58) நாம் ஆஜராவதற்குக் கூட்டங்களும், பங்குகொள்வதற்கு வெளி ஊழியமும் இருக்கின்றன. ஆனால் இவற்றிற்கும் முன்னதாக, தயாரிப்பு வருகிறது. வேறு வார்த்தைகளில், நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறபடி, மற்றவர்களை “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும்” ஏவும்படியும், பயனுள்ளவிதத்தில் “சீஷராக்குவதற்கும்” படிப்பதற்காக அதிக நேரத்தை செலவழிக்க வேண்டும். (மத். 28:19; எபி. 10:24) வாழ்க்கையின் சாதாரண காரியங்களான, உலகப்பிரகாரமான வேலை, கடைக்குச் செல்லுதல், சாப்பிடுதல், சுத்தம் செய்தல், பிரயாணம் செய்தல், பள்ளிக்குச் செல்லுதல், தூங்குதல், இவற்றிற்கு நேரம் தேவைப்படுகிறது. இது தவிர, பொழுது போக்கிற்காகவும் நேரம் செலவழிக்கப்படலாம். அந்தந்தக் காரியங்களை அதனதன் இடத்தில் வைப்பதானது நாம் சந்திக்க வேண்டி. சவாலாக இருக்கிறது. இது எவ்வாறு செய்யப்படக்கூடும்?
முதலிடத்தை ஏற்படுத்துதல்
3. இயேசு கூறினார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33) நம் நேரத்தை நாம் செலவழிக்கும் விஷயத்தில், ராஜ்ய அக்கறைகள் முதலிடத்தைப் பெறவேண்டியது தெளிவாகவே இருக்கிறது. நாம் நமது பணத்திற்கு வரவு-செலவு திட்டம் போடுவது போலவே நேரத்திற்கும் அட்டவணை போடுகையில், கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும், குடும்ப வேதப்படிப்பிற்கும் மற்ற தேவாட்சி நடவடிக்கைகளாகிய வெளி ஊழியம் மற்றும் தனிப்பட்ட படிப்பிற்கும் நம்மால் ஒதுக்கப்படும் நேரம் மற்ற அக்கறைகளைத் தொடருவதற்காக செலவழிக்கப்படாது.
4. வாழ்க்கையில் அத்தியாவசியமான காரியங்கள் அட்டவணையில் இடம்பெற வேண்டும். ஒருவர் தன்னையும் தன் குடும்பத்தையும் பராமரிப்பதற்காக உலகப்பிரகாரமான வேலையைச் செய்வதற்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. அதில் சாப்பிடுதல், தூங்குதல், மற்றம் ஒருவரது குடும்பத்தின் தேவைகளுக்குத் தனிப்பட்ட கவனம் செலுத்துவதும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். மூப்பர்களும், உதவி ஊழியர்களும் தங்கள் அட்டவணையின் வரிசையில், தேவாட்சிப் பொறுப்புகளைக் கையாளவும், தயாரிக்கவும் ஒதுக்கப்படும் நேரம் மற்ற அக்கறைகளைத் தொடருவதற்காக செலவழிக்கப்படாது.
ஒரு தெளிவான கண்ணைக் கொண்டிருத்தல்
5. இயேசு தம்மைப் பின்பற்றுவோரின் நடவடிக்கையைக் குறித்துக் கலந்து பேசுகையில் கூறினார்: “உன் கண் தெளிவாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.” (மத். 6:22) இதில் எது அடங்கியிருக்க வேண்டும்? அடிப்படையில், ஒருவரது வாழ்க்கை சிக்கலற்றதாக இருக்கவேண்டும் என்பதை இது அர்த்தங்கொள்கிறது. ஒருவரது நேரத்தைத் திருடும் வகையில் சிதறவைக்கும் காரியங்கள் அநேகம் இருக்கின்றன. இவற்றுள் ஒன்று டெலிவிஷன். சில வீடுகளில் டெலிவிஷன். சில வீடுகளில் டெலிவிஷன் பெட்டி காலையில் துவங்கி, நாள் முழுவதும் அப்படியே தொடர்ந்து ஓடும்படி வைக்கப்படுகிறது. ஒரு நபர் குறைந்த அளவு நேரத்தை எடுக்கும் ஒரு நிகழ்ச்சிநிரலைப் பார்ப்பதற்காக உட்காரலாம். ஆனால் அவர் தனிப்பட்ட படிப்பிற்கு ஒதுக்கியிருந்த நேரத்தை, தொடர்ந்து டெலிவிஷன் பார்ப்பதன் மூலம் நழுவ விட்டு விடுகிறார். பிரயோஜனமற்ற காரியங்களுக்காக ஒரு முழு சாயங்காலத்தையும் வீணாக்குவது எவ்வளவு எளிதாயிருக்கிறது! அநேகருக்கு எப்போது டி.வி-யை நிறுத்துவது என்று தெரிவதில்லை. நீங்கள் இப்பிரச்னைகளை கொண்டிருந்தால், டி.வி-யை ஓடவிடாமலே இருந்துவிடத் தீர்மானிப்பது மிகச் சிறந்ததாயிருக்கும். சிலர் இளைப்பாறுதலாகக் கருதும் சில விருப்பார்வ நடவடிக்கைகளும் பொழுதுபோக்குகளும். அதிக முக்கியமான காரியங்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நேரத்தை எடுத்துவிடுவதில் முடிவடையலாம்
6. விலையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஆஜராவது அல்லது அவற்றை டி.வி-யில் பார்ப்பது இவையும், விலைமதிப்புள்ள நேரத்தை விழுங்கிவிடக்கூடும். கணவன்மார்கள், மனைவிமார்கள் மற்றும் குழந்தைகள், தாங்கள் படிப்பதற்கும், ஒன்றாக கூடிவருவதற்கும் செலவழிக்கவேண்டிய நேரம் மற்ற காரியங்களால் திருடப்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். நாமனைவருமே நம் வாழ்க்கையை மிதமிஞ்சிய அளவில் விளையாட்டுகளாலும், பொழுதுபோக்குகளாலும் சிக்கலானதாக்கிக்கொள்ளாதபடி கவனமாயிருக்கவேண்டும்.
7. நாம் மற்ற முக்கியமான காரியங்களுக்காக ஒதுக்கிவைத்திருக்கும் முதலிடத்தை நம்முடைய உலகப்பிரகாரமான உத்தியோகம் எடுத்துக்கொள்ளும்படி நாம் அனுமதித்தால், கவலைக்கிடமான பிரச்சனையில் இது விளைவடையக்கூடும். சிலர் தங்களை அவர்களது வேலைகளில் அதிகம் உட்படுத்திக்கொண்டு, அல்லது பொருளாதார அனுகூலங்களின் எதிர்பார்ப்புகளில் அதிகமாக சிரத்தை வைத்துக்கொண்டு இருப்பதன் காரணமாக, கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்திற்கும் அல்லது தங்கள் குடும்பத்தின் ஆவிக்குரிய காரியங்களுக்கும் தங்கள் அட்டவணையில் நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கின்றன. (எபேசி. 5:15, 16) ‘நான் யெகோவா தேவனின் வணக்கத்திற்காக ஏற்கெனவே ஒப்புக்கொடுத்திருக்கும் நேரத்தை தனிப்பட்ட சொந்த அக்கறைகளுக்கு விற்பதில் உண்மையில் சந்தோஷப்படுவது யார்?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வது நலமாயிருக்கும்.
பயனுள்ள விதத்தில் நேரத்தைப் பயன்படுத்தும் வழிகள்
8. நேரத்தை அதிக பயனுள்ள விதத்தில் பயன்படுத்தும்படி ஒருவரது வாழ்க்கையை ஒழுங்கமைப்பதற்கு, ஆவிக்குரிய இலக்குகளும், ஒரு தெளிவான மதிப்பீடும் தேவைப்படுகிறது. இதுவே தினமும், முதலிடத்தை வகிக்க வேண்டிய காரியங்களின் பட்டியலைத் தயாரிப்பதற்கு முக்கியமான ஒன்றாயிருக்கிறது. ஒத்திப்போடாதீர்கள். நீங்கள் ஒரு வேலையைச் செய்வதற்கு நேரத்தை ஒதுக்கியிருந்தால், அதை அந்த நோக்கத்திற்காகவே பயன்படுத்துங்கள். உங்களுக்கு நீங்களே ஒரு வரம்பைக் கொண்டிருங்கள். படிக்கவேண்டிய குறிப்பிட்ட பாடப்பகுதிகளை முன்கூட்டியே படித்து தயாரித்து, அதை வெளி ஊழியத்திலோ அல்லது கூட்டங்களிலோ பயன்படுத்துவதற்குக் கடினமாக பிரயாசப்படுங்கள். அதே விதமாக, வீட்டைச் சுற்றியுள்ள அன்றாட வேலைகளையும் முன்கூட்டியே செய்துமுடியுங்கள்
9. பொதுவாக பலவிதங்களில் இழக்கப்படும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் மற்றவர்களுக்காக காத்திருக்க வேண்டிய சமயத்திலும், வாசிப்பதன் மூலமாகவும், கடிதம் எழுதுவதன் மூலமாகவும் அல்லது வேறு தேவையான வேலையைச் செய்வதன் மூலமாகவும் அந்நேரத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் வரிசையில் நிற்க வேண்டியிருந்தால் ஒரு சம்பாஷணையைத் துவங்க முயற்சி செய்வதன் மூலம், அது ஒரு சாட்சி கொடுத்தலுக்கு வழிநடத்தலாம். எல்லாருக்கும் தேவையான மற்றொன்று யாதெனில், போதியளவு ஓய்வெடுத்தலும், இளைப்பாறுதலும் ஆகும். அப்போதுதான் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். இது நீங்கள் இன்னும் அதிக பயனுள்ள விதத்தில் வேலை செய்ய சக்தியளிக்கும் தேவையான ஓய்வெடுக்க தவறுவதாலும், தூங்கத் தவறுவதாலும் பெறப்படும் ஆரோக்கிய குறைபாடு, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய காரியங்களுக்குச் சரியான கவனம் செலுத்துவதிலிருந்து தடுத்துவைக்கும்.
தனிப்பட்ட ஒழுங்கமைப்பை விருத்தி செய்தல்
10. வியாபார உலகில், கொடுக்கப்பட்ட ஒரு வேலையை எவ்விதம் நிறைவேற்றுவது என்பதற்கு வெறுமென திட்டம் போடுவதிலேயே அதிக நேரமும் முயற்சியும் செலவழிக்கப்படுகின்றன. ஒரு தொழிலதிபர், ஓர் உற்பத்திப் பொருளை உண்டாக்குவதற்கு முன் தொழிலாளர்களையும் கச்சாப் பொருட்களையும் ஒழுங்குபடுத்துவதை அதிக பயனுள்ளதாகக் காண்பார். தேவையான தொழிலாளர்களும், கச்சாப் பொருட்களும் ஏற்ற சமயத்திலும் ஏற்ற இடத்திலும் கிடைக்கக்கூடியதாக இல்லாவிடில், அதிக நேரமும், பணமும் நஷ்டமாகி, அதனால் அவர் இலாபமடைய முடியாமல் போய்விடும் என்ற சாத்தியத்தை அவர் உணருவார். என்றபோதிலும், நாம் நம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கு இன்னும் மேலான சிறந்த நோக்கங்களைக் கொண்டிருக்கிறோம். இவை யெகோவாவோடு ஒரு நேர்த்தியான உறவை வளர்த்து காத்துக்கொள்ளவும், சீஷராக்குவதில் திறம்பட்டவர்களாக இருக்கவும். நம் இலக்காகிய நித்திய ஜீவனை அடைவதற்கும் நாம் கொண்டுள்ள ஆவலை உள்ளடக்குகிறது. அப்படியானால், சரியான நேரத்தில் சரியான கருவியை நமக்கு நாம் கொண்டிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும்.
11. உதாரணமாக, ஒவ்வொரு வாரமும் ஐந்து சபைக் கூட்டங்கள் நமக்கு இருக்கின்றன. இக்கூட்டங்களில் சிந்திக்கப்படும் விஷயங்கள் பற்பல வெளியீடுகளிலிருந்து எடுக்கப்படுகின்றன. இவ்வெளியீடுகள் நமக்கு உடனடியாக கிடைக்கக்கூடிய இடத்தில் இருக்கின்றனவா? அந்த வாரம் நாம் படிக்க வேண்டிய காவற்கோபுர பத்திரிகையை தனியாக எடுத்து வைத்திருக்கிறோமா? அல்லது அதை தேடுவதற்காக நேரம் செலவழிக்க வேண்டியதாக இருக்கிறதா? மற்ற தேவையான வெளியீடுகளைப் பற்றியதென்ன? நம் ராஜ்ய ஊழியம், பாட்டுப் புத்தகம், பைபிள் மற்றும் சபை புத்தகப்படிப்பில் நாம் பயன்படுத்தும் புத்தகம் ஆகிய இவற்றைப் பற்றி என்ன? இந்தப் புத்தகங்களுக்கு அதற்கென்று ஓர் இடத்தில் வைப்பதும், அவை பயன்படுத்தப்படாமலிருக்கையில் அவற்றை அங்கேயே வைப்பதும் நல்லது. இவ்விதமாக, நாம் வெளி ஊழியத்திற்கோ அல்லது கூட்டங்களுக்கோ தயாரிக்கையில் பொருத்தமான வெளியீடுகளை விரைவாகக் கண்டு பிடிக்க முடியும்.
12. மூப்பர்களும் உதவி ஊழியர்களும் விசேஷமாக தங்கள் தனிப்பட்ட ஒழுங்கமைப்பைக் குறித்து கவனமுள்ளவர்களாயிருக்க வேண்டும். உலகப்பிரகாரமான வேலையிலும், சபையிலும் செய்யப்பட வேண்டிய வேலை அவ்வளவு அதிகமாயிருப்பதால், சில சமயங்களில் “அதிக முக்கியமான காரியங்கள்” மறக்கப்படலாம் அல்லது தள்ளிவிடப்படலாம். (பிலி 1:10) முக்கிய காரியங்களை முதலாவது செய்வதற்கு ஓர் பட்டியலை நிர்வகிக்கும் ஆலோசனையைப் பயன்படுத்துவது மெய்யாகவே பிரயோஜனமானதாயிருக்கக்கூடும். நீங்கள் இதை முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா? ஒரு சகோதரர் அத்தகைய ஒரு பட்டியலைக் கொண்டு அதை ஒவ்வொரு கூட்டத்திற்கும் முன்னதாக விமர்சித்துப் பார்க்கிறார். இவ்வகையில் அவர் அதிகத்தைச் செய்பவராய், சபையின் தேவையான வேலைகள் செய்துமுடிக்கப்படுவதைப் பார்த்துக்கொள்கிறார்.
13. மூப்பர்கள் சபையின் கடிதப் போக்குவரத்தைக் காத்துக்கொள்ள ஒரு நல்ல முறையைக் கொண்டிருக்க வேண்டும். எழுத்து வேலைகள் சரியாக ஒழுங்கமைக்கப்படாவிட்டால் சில சமயங்களில் குழப்பமாகவும், பாரமாகவும் இருக்கக்கூடும். அப்படியானால், ஒழுங்காக சில நிமிடங்கள் கடிதங்களைப் பிரித்து, தனியாக வைக்க வேண்டியவற்றை தனியாகவும், அல்லது பிறருக்குக் கடத்த வேண்டியவற்றை அல்லது தேவையற்ற, அழித்துப்போட வேண்டியவற்றையும் பிரிப்பதற்குச் செலவிடலாம். மற்ற மூப்பருக்குச் சுற்றுமுறைபடி வாசிக்கக் கொடுக்க வேண்டிய கடிதங்களை நீங்கள் உங்கள் கையிருப்பில் வைத்திருந்தால், அதை வேகமாய்க் கடத்துவதில் நிச்சயமாயிருங்கள். உங்கள் பெட்டியில் அதற்கென்று ஓர் இடத்தை ஒதுக்குவது அல்லது இத்தொடர்புகளைக் கொண்டிருக்கும்படி ஒரு தனி உறை அல்லது மடிப்பில் (folder) வைப்பது கவனம் செலுத்தப்பட வேண்டிய கடிதங்கள் அல்லது பொருட்களைக் கருத்தில் கொள்ள உங்களுக்கு உதவி செய்யும் இவ்விதமாக, முக்கியமான கடிதம் சம்பந்தப்பட்ட வேலைகள் இழக்கப்படாது அல்லது தாமதமாகச் செல்லாது.
அமைப்பு—ஓர் அடிமை ஓர் எஜமானல்ல
14. உங்கள் அட்டவணையை விமர்சித்த பிறகு எவ்வளவு ஒழுங்கமைப்பு தேவை என்று தீர்மானியுங்கள். நமது வாழ்க்கையை எந்த வேறுபாட்டிற்கும் இடமளிக்காத மித மிஞ்சி ஒழுங்கமைத்துக் கொள்ளும் மதவெறி கொண்டுள்ள பூரணர்களாய் ஆவதற்கு நாம் விரும்பவில்லை. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்களாய், ஓர் இணையற்ற சூழ்நிலையைக் கொண்டிருப்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்மில் சிலர் தனிப்பட்டவர்களாகவும், சிலர் விவாகமானவர்களாகவும் இருக்கிறோம். ஒரு குடும்பத்திற்கு ஒத்துவரும் காரியங்கள் மற்ற குடும்பத்திற்கு ஒத்துவராதிருக்கலாம். தனிப்பட்ட ஒழுங்கமைப்பு நம் தனிப்ட்ட மற்றும் குடும்பச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செய்யப்படவேண்டும். நீங்கள் ஒரு வெற்றிகரமான அட்டவணையைக் கொண்டிருக்க, விவேகத்தைக் காண்பித்து, உங்களை வழிநடத்தும்படி உதவும் பைபிள் நியமங்களுக்கு இசைய நீங்கள் திட்டமிடும் நடவடிக்கைகளில் மாறுதல்களைச் செய்துக்கொள்ளுங்கள்.—காவற்கோபுரம் (ஆங்.) செப்டம்பர் 15, 1988 ர். 28-30; விழித்தெழு! (ஆங்.) டிசம்பர் 8, 1987 பக். 24-27; மற்றும் விழித்தெழு! (ஆங்.) டிசம்பர் 22, 1965, பக். 9-12-ஐயும் பாருங்கள்.
15. சமீப ஆண்டுகளில், ஒரு நல்ல ஒழுங்கின் நியமங்களைப் பின்பற்றுவதன் மூலம் நடவடிக்கைகளை எளிதாக்குதல், யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பின் வேலைத்திறனை மேம்படுத்தியிருக்கிறது. சிலர் தங்களுக்குச் சிறந்தவிதத்தில் வேலை செய்யும் சில முறைகளைத் தாங்கள் கொண்டிருப்பதாக உணரலாம். அவர்கள், அத்தகைய முறைகளை மற்றவர்களும் பயன்படுத்தும்படி சங்கம் உற்சாகப்படுத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனாலும் பெரும்பாலும் அவை ஏற்கெனவே சிந்திக்கப்பட்டு, அவை அமைப்பிற்கு நடைமுறையற்றவையாக இருப்பதால் கைவிடப்பட்டிருக்கலாம். ஒற்றுமையையும், வேலைத் திறனையும் கருத்தில் கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் முறைகளைப் பின்பற்றுவது மற்றும் உங்களுடைய வேலையால் பாதிக்கப்படும் மற்றவர்கள் விளங்கிக்கொண்டு செயல்படும் முறைகளைப் பயன்படுத்துவது ஞானமானதாயிருக்கும்.
16. யெகோவா ஒழுங்குக்கும் சமாதானத்துக்கும் தேவனாக இருக்கிறார். (1 கொ. 14:33, 40) அவர் தம்முடைய சித்தத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்ற ஒரு குறிப்பிட்ட நேரத்தை வைத்திருக்கிறார். (அப். 1:7) அவருடைய வார்த்தையின் மூலம், அவர் அபூரண மனிதர்களாகிய நமக்கு சிரத்தை அளிக்கும் காரியங்களை அன்புடன் வகுத்திருக்கிறார். இயேசுவின் வழிநடத்துதலால், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பினர் மூலம் யெகோவா, இன்று, மிக முக்கியமான காரியங்கள் எவ்விதம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கான பயனுள்ள போதனைகளை அளிக்கிறார். (மத். 24:45-47; 28:19, 20; பிர. 12:13) ஆகையால் இச்சேர்க்கையிலுள்ள காலத்துக்கேற்ற நினைப்பூட்டுதல்கள் உட்பட, சங்கத்து வெளியீடுகளில் காணப்படும் வேதப்பூர்வமான புத்திமதிகளைப் பின்பற்றுவதன், நாம் நம் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்ற மேலும் சிறந்த விதத்தில் ஒழுங்கமைத்துக் கொண்டவர்களாகக்கூடும்.—2 தீமோ. 4:5.