உங்களிடமிருப்பதை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?
1. உண்மை வணக்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில் இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு வழிநடத்துதலைக் கொடுத்தார். தம்முடைய இரண்டு சீஷர்களோடு இயேசு செய்த உரையாடலைக் குறித்து லூக்கா அறிக்கை செய்கின்றான். அதாவது இயேசு, “வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் கொண்டிருந்தார்.” (லூக்கா 24:47, 32, 45) நிச்சயமாகவே சீஷர்கள் அவருடைய போதனைகளால் வெகுவாய் புத்துயிரூட்டப்பட்டார்கள், பலப்படுத்தப்பட்டார்கள். என்றபோதிலும் காலப்போக்கில், இயேசு அவர்களை விட்டுச் செல்ல வேண்டியதாயிருந்தது. அவரில்லாமல் கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையை அவர்கள் எப்படி புரிந்துகொள்ளக்கூடும்? அதைத் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு பொருத்தலாம் என்பதை அவர்கள் எவ்வாறு அறிந்துகொள்ளக்கூடும்?
2. இயேசு தம்முடைய சீஷர்களை எந்த உதவியுமின்றி அவர்கள் தங்களுடைய சொந்த அபூரணமான தீர்மானங்களை செய்துகொள்ளும்படி கைவிட்டுவிடவில்லை. இயேசு பூமியில் அவர்களுடனிருந்தபோது, அவர் அவர்களுக்கு தாங்கள் வழிகாட்டியாக திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தக்கூடிய பலதரப்பட்ட காரியங்களின்பேரில் ஏராளமான தகவலைக் கொடுத்திருந்ததை விரைவில் கண்டுணர ஆரம்பித்தார்கள். ‘அவர் சொன்னவற்றை நினைவுக்குக் கொண்டுவந்தப்போது’ தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தெளிவாக பகுத்துணர முடிந்தது. (லூக்கா 24:8; யோவான் 14:26) காலப்போக்கில் இயேசு பேசின பல காரியங்கள் நம்முடைய நன்மைக்காக கடவுளுடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டன.
3. கிறிஸ்தவ சபை செயற்பட ஆரம்பித்தபோது, தலைமைதாங்கி வழிநடத்தின ஆட்கள் இயேசு முன்னதாக அவர்களுக்குக் கற்பித்திருந்த காரியங்களை ஞாபகத்துக்குக் கொண்டுவரும்படி சகோதரர்களுக்கு உதவினார்கள். தன்னுடைய இரண்டாம் கடிதத்தில் பேதுரு எழுதினதாவது: “பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன். பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும் இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலனாகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்.” (2 பேதுரு 3:1, 2) எனவே, பெரும்பாலான காரியத்தில், கலந்தாராயப்படும் அவ்விஷயம் மிக முக்கியமான ஒன்றாக இருந்தபோதிலும், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட விஷயங்களை வெறுமென பயன்படுத்துவதே அவசியமாக இருந்தது.—அப். 15:12-21.
4. இப்படிப்பட்ட போதனை ஒருபோதும் பயனற்ற ஒன்றாகவோ அல்லது பழக்கமற்றுப்போன ஒன்றாகவோ ஆகிவிடவில்லை. கடந்த ஆண்டுகளினூடே யெகோவா தமது ஜனங்களுக்கு தமது சித்தத்தைப் பற்றிய தெளிவான விளக்கங்களை படிப்படியாக கொடுத்து வந்திருக்கிறார். (நீதி. 4:18) புரிந்துகொள்ளுதலில் கொண்டுவரப்பட்ட சரிப்படுத்துதல்கள் நன்றாக தெளிவுப்படுத்தப்பட்டு அமைப்பின் மூலம் தெளிவான ஆதார சான்றுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாவற்றிலும் அடிப்படையான நியமங்கள் ஒரே விதமாகவே நிலைத்திருக்கின்றன. இதன்காரணமாகவே, உதாரணமாக, இயேசுவின் மலைப் பிரசங்கம் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக அது கொடுக்கப்பட்டபோது இருந்ததைப் போன்றே இன்றும் நடைமுறையானதாக இருக்கிறது. நமக்குத் தேவையான காரியங்கள் ஏற்கெனவே அளிக்கப்பட்டிருப்பதனால் புதிய வெளிப்படுத்துதல்களுக்கான அவசியம் இல்லை.
தற்போதைய ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்திசெய்தல்
5. 1870-ம் ஆண்டுகள் முதற்கொண்டு நவீன கால கிறிஸ்தவ சபை கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய தெளிவான புரிந்துகொள்ளுதலினிடமாக படிப்படியான முன்னேற்றம் செய்திருக்கிறது. கடந்த ஆண்டுகளினூடே தெள்ளந்தெளிவான விடைகளை தேவைப்படுத்திய பல்வேறு வகையான கேள்விகள் எழும்பியிருக்கின்றன. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” இப்படிப்பட்ட “உணவை ஏற்ற வேளையில்” அளித்திருக்கிறது. (மத். 24:45) இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றும் பைபிள் சத்தியத்தின் வெளிச்சத்தில் முற்றிலுமாக ஆராயப்பட்டு யெகோவாவின் ஜனங்களுக்குத் திட்டவட்டமான வழிநடத்துதல்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்த எல்லாத் தகவல்களும் தேவராஜ்ய அமைப்பின் பிரசுரங்கள் வாயிலாக முக்கியமாய் காவற்கோபுரம் பத்திரிகை மூலமாக நமக்கு கடத்தப்பட்டிருக்கின்றன.
6. கடந்த ஆண்டுகளினூடே என்ன காரியங்கள் பிரசுரிக்கப்பட்டன என்பதை விமர்சித்துப் பார்க்கையில், நடைமுறையில் நமது மனதுக்கு வரக்கூடிய எந்த ஒரு பைபிள் விஷமானாலும் அதன்பேரில் சங்கத்தின் பிரசுரங்கள் ஏற்கெனவே வழிநடத்துதல்களைக் கொடுத்திருக்கின்றன என்பது தெளிவாக இருக்கிறது. கொள்கை சார்ந்த போதனைகள் முற்றுமுழுக்க அலசியராயப்பட்டிருக்கின்றன. கிறிஸ்தவ நடத்தையை நிர்வகிக்கும் நியமங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. மாபெரும் பிரசங்க வேலையை நிறைவேற்றுவதற்கான தேவைகள் கவனமாக குறித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாக காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுடைய புத்தகத் தொகுப்புகள் போதனைக்கான சேமிப்பு கிடங்குகளாக இருக்கின்றன. 1960 முதல் 1988 வரையான காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் புத்தகத் தொகுப்புகள் நம்மிடமிருக்குமானால், இன்றியமையாத பைபிள் அறிவையும் அதோடு எண்ணிறைந்த மற்ற அம்சங்களில் முழுமையான தகவல்களையும் கொண்ட 58 புத்தகத் தொகுப்பு என்ஸைக்ளோபீடியாவை நாம் உடையவர்களாயிருப்போம். “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற அம்சம் அநேக நூற்றுக்கணக்கான வினாக்களை ஆராய்ந்திருக்கிறது. நமது பிரசுரங்களில் ஏதாவது ஒரு முறையில் கையாளப்படாத ஒரு பொருளை குறிப்பிடுவது கடினமே. ஆகவே ஏதோவொரு குறிப்பிட்ட வகையில் வழிநடத்துதல் தேவைப்படுமானால், கடந்த காலங்களில் நம் கனத்துக்குக் கொண்டுவரப்பட்டதை நம் மனதுக்குத் திரும்பக் கொண்டுவருவதே நாம் செய்ய வேண்டிய எளிய காரியம்.
7. நாம் நமது சொந்த ஞாபக சக்தியில் சார்ந்திருக்க வேண்டுமானால் நமக்குத் தேவைப்படும் திட்டவட்டமான தகவலைத் தேடி கண்டுபிடிப்பது ஒரு பிரமாண்டமான வேலையாக இருக்கக்கூடும். எனினும் மகிழ்ச்சிக்கேதுவாய் அமைப்பானது, உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன் இன்டெக்ஸ் 1930-1985-ஐ கொடுத்திருக்கிறது. ஒருசில நிமிடங்களில் திட்டவட்டமான தகவல்களை கண்டுபிடிப்பதற்கு நாம் அதைப் பயன்படுத்தலாம். கடந்த 56 வருடங்களில் வெளியிடப்பட்டிருக்கும் 200-க்கும் மேற்பட்ட பிரசுரங்களிலிருந்து இந்த இன்டெக்ஸ் மேற்கோள் கொடுக்கிறது. உங்களுக்குத் தேவைப்படக்கூடிய தகவல்களைத் தேடி கண்டுபிடிப்பதற்கு இந் இன்டெக்ஸை பயன்படுத்த கற்றுக்கொண்டீர்களா? உங்களிடமிருப்பதை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? அதோடு, பல்வேறு மொழிகளில் அவ்வப்போது வெளிவரும் இன்டெக்ஸ்கள் இருக்கின்றன. மேலும் சில பிரசுரங்கள் தங்கள் சொந்த இன்டெக்ஸையும் கொண்டிருக்கின்றன.
கேட்கிறதை மறக்கிறவனாயிராமல் செய்கிறவனாயிருங்கள்
8. அமைப்பானது, அதன் பிரசுரங்கள் மூலமாக நாம் யெகோவாவின் சித்தத்தை பகுத்துணர்ந்துகொள்வதற்கு உதவுகிறது. நாம் அதன்படி செய்கிறவர்களாக இருக்க வேண்டும். கேட்கிறதை மறக்கிறவர்களாயிருப்பதற்கு மாறாக நாம் கற்றுக்கொள்ளும் காரியங்களைப் பொருத்திப் பிரயோகிப்பவர்களாக இருக்க வேண்டும். (யாக். 1:25) என்ன காரியங்கள் நமது கவனத்துக்குக் கொண்டுவரப்படுகிறதோ அவற்றை சொற்ப கால கலந்தாலோசிப்புக்குப் பின்பு ஒதுக்கி வைக்கப்பட வேண்டிய அல்லது மறக்கப்பட வேண்டிய போதனையாகக் கருதக்கூடாது. மாறாக, எதிர்காலத்தில் நமக்குத் தேவைப்படும் சமயத்தில் அதைத் திரும்ப நினைவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தோடு செவிகொடுக்க வேண்டும். அதை நாம் செய்வதற்காக வேண்டி “நாம் கேள்விப்பட்ட காரியங்களுக்கு வழக்கத்துக்கும் அதிகமான கவனத்தைச் செலுத்த வேண்டும்.”—எபி. 2:1, NW.
9. “வழக்கத்துக்கும் அதிகமான கவனத்தை நாம் செலுத்துவது எப்படி?” மார்ச் 15, 1989 ஆங்கில காவற்கோபுரம் பக்கம் 14-ல் விவரிப்பதாவது: (1) நாம் யெகோவாவின் அமைப்பை மதித்துணரவேண்டும், அதனை நமது ஒத்துழைப்பின் மூலமும் காண்பிக்கவேண்டும். (2) கடவுளுடைய வார்த்தையையும் அடிமை வகுப்பால் அளிக்கப்படும் பிரசுரங்களையும் தனிப்பட்ட முறையில் படிப்பதில் ஊக்கமுள்ளவர்களாயிருக்க வேண்டும். (3) நாம் கற்றுக்கொண்ட காரியங்களை தியானிக்க வேண்டும் அப்பொழுது நாம் அதை வாழ்க்கையில் பொருத்த முடியும். மற்றவர்களுக்கு உதவிசெய்ய பயன்படுத்த முடியும்.
10. நம்முடைய குடும்பங்களை பேணி வளர்ப்பதிலும், ஒழுக்கத்தைக் காத்துக்கொள்வதிலும், மற்றவர்களோடு தொடர்புகொள்வதிலும் நாம் எதிர்படக்கூடிய பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என்பதன் பேரில் பிரசுரங்களை எப்படி சமாளிப்பது என்பதன் பேரில் பிரசுரங்கள் தொடர்ச்சியான போதனைகளை கொடுக்கின்றன. அந்தப் போதனைகளுக்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள்? உங்களுக்கு தனிப்பட்ட விதமாய் பொருத்தக்கூடிய காரியங்களை ஜாக்கிரதையுடன் கவனிப்பதன் மூலம் அதைப் போற்றுதலோடு நோக்குகிறீர்களா? அல்லது அதை வெறுமென ஏதோ தற்காலிகமான ஒன்றாக கடந்துசெல்லும் அக்கறையாக நோக்குகிறீர்களா? அல்லது அதை வெறுமென ஏதோ தற்காலிகமான ஒன்றாக கடந்துசெல்லும் அக்கறையாக நோக்குகிறீர்களா? மதித்துணர்வானது தகவல்களை உறிஞ்செடுப்பதற்கு நம்மை உந்துவிக்க வேண்டும் மற்றும் பின்னால் அதை மனதிற்குத் திரும்பக் கொண்டுவந்து அதனை முழுமையாக பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு தியானிக்கவேண்டும்.—ஏசா. 48:17.
11. என்ன கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை வெறுமென வாசிப்பதைக் காட்டிலும் நாம் அதிகத்தைச் செய்ய வேண்டும். வாசித்தல் பெரும்பாலும் திட்டமிடப்படாத மற்றும் மேலோட்டமான ஒன்றாக இருக்கக்கூடும். அதற்கு மாறாக நாம் அதைப் படிக்க வேண்டும். படிப்பு என்பதன் அர்த்தம் என்னவெனில், ஒரு பொருளை எதிர்காலத்தில் உபயோகிக்கும் நோக்கத்தோடு கற்றுக்கொள்ள மனதை அதன்பேரில் ஒழுங்கான முறையில் ஊன்றவைப்பதையும், ஒரு காரியத்தை அதன் பேரில் செயல்படவேண்டுமென்ற நோக்கத்தோடு பகுத்தாராய்வதையும் அர்த்தப்படுத்துகிறது. இதன் குறிப்பு என்னவெனில், படிக்கும் தகவலை நமது மனது அணுகும் முறைதானே, அது எவ்வளவும் ஆழமாக நமது மனதில் பதியும் என்பதையும் நமது அனுதின வாழ்க்கையில் எந்தளவுக்கு அது பொருத்திப் பிரயோகிக்கப்படும் என்பதையும் உண்மையில் தீர்மானிக்கும். நாம் படிக்கும்போது நம்மைப் பின்வருமாறு தொடர்ந்து கேட்டுக்கொள்ள வேண்டும்: இது எனக்கு எவ்வாறு பொருந்தும்? என்னுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தை அதிகரிப்பதற்கு நான் இதை எவ்வாறு பயன்படுத்தலாம்? இதை நான் எப்படி மற்றவர்களுக்குப் புரியும்படி எடுத்துச்சொல்லுவேன்?
நம்முடைய வெளி ஊழியத்தை முன்னேற்றுவித்தல்
12. நம் ராஜ்ய ஊழியம் வெளி ஊழியத்தின் தேவைகளையும் மனப்போக்குகளையும் ஒழுங்காக அலசியாராய்ந்து வருகிறது. அதிக வலிமைவாய்ந்த நற்பலன்களை அடைவதற்கு உதவக்கூடிய வழிமுறைகளைச் சுட்டிக்காட்டுகிறது. அது மாதந்தோறும் பிசுரிக்கப்படுவதால் அதன் அறிவுரைகளை மதிப்பு வாய்ந்த ஒன்றாக நோக்கும் மனச்சாய்வுள்ளவர்களாக இருக்கிறீர்களா? அடுத்த இதழ்வரும் வரையில் மட்டுமே பொருத்தமானது என்று கருதுகிறீர்களா? ராஜ்ய செய்தியுடன் மக்களின் இருதயத்தை எட்டுவதே வெளி ஊழியத்தின் அடிப்படையான இலக்குகளில் ஒன்றாக எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது. மனித அக்கறைகள், உணர்ச்சிகள் மற்றும் மனப்பான்மைகள் பல ஆண்டுகளினூடே அடிப்படையில், ஒரே விதமாகவே இருந்து வந்திருக்கின்றன. அக்கறையைத் தூண்டுவதற்குப் பெருந்திரளான வழிமுறைகள் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தலாம். நம் ராஜ்ய ஊழியம் வெறுமென மற்றவர்கள் எதை வெற்றிகரமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை நம் கவனத்துக்குக் கொண்டுவருகிறது. கடந்த காலங்களினூடே எண்ணிறைந்த பல்வேறு முறைகளை சிபாரிசு செய்யப்பட்ட போதிலும் அடிப்படை முறைகள் ஒரே விதமாகவே நிலைத்திருக்கின்றன. தற்போது அளிக்கப்படும் யோசனைகள் கடந்த காலங்களில் ஒருவேளை அளிக்கப்பட்டிருக்கலாம். மேலும் அவை மறுபடியும் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படலாம்.
13. மற்றொரு மேன்மையான ஏற்பாடு நியாயங்கள் புத்தகமாகும். பக்கம் 8-ல் அது விவரிப்பதாவது: “இந்த வழிக்காட்டுநூலின் உபயோகம் வேதவசனங்களிலிருந்து நியாயங்களை எடுத்துக்காட்டுவதற்கான திறமையை விருத்தி செய்வதற்கும் மேலும் மற்றவர்களுக்கு உதவிசெய்வதில் அதை சக்தி வாய்ந்த முறையில் பயன்படுத்துவதற்கும் உங்களுக்கு உதவி செய்யவேண்டும்.” அதிக திருப்திகரமான நற்பலன்களை அடைவதற்கு இந்தப் புத்தகம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதைக் காண்பிக்கும் இனிமையான அனுபவங்களை அநேக பிரஸ்தாபிகள் சொல்லியிருக்கின்றனர். நம்முடைய ஊழியத்தில் நாம் எதிர்படக்கூடிய எந்த ஒரு சூழ்நிலைமைக்கும் உண்மையில் அதன் தகவல்கள் பயன்படுத்துவதற்கு நடைமுறையான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை விமர்சித்துப் பார்ப்பது அதிக பயனுள்ளதாக இருக்கக்கூடும். நம்முடைய புத்தக பைபிள் அதை எப்பொழுதுமே எடுத்துச் செல்ல வேண்டும். நாம் ஒழுங்காக கூட்டங்களுக்கு எடுத்துவரும் பிரசுரங்களுள் இதையும் சேர்த்துக்கொள்ளும்படி சிபார்சு செய்யப்படுகிறது. அதை எப்பொழுதும் கையில் வைத்திருப்பதன் மூலமும் அதன் உள்ளடக்கங்களை நான்கு அறிந்து வைத்திருப்பதன் மூலமும் “எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாக” வைத்துக்கொள்வதற்கு நாம் உண்மையிலேயே பிரயாசப்படுகிறவர்களாயிருப்போம்.—2 தீமோ. 3:17.
14. நாம் அதை ஊழியத்தில் நன்கு பயன்படுத்துவதன் மூலம் யெகோவா நமக்குக் கொடுத்திருப்பவற்றிற்கு நாம் மதித்துணர்வை காட்டுகிறவர்களாயிருப்போம். அவசியமான ஆவிக்குரிய உணவும் அத்துடன் நமது ஊழியத்திற்கான வழிநடத்துதலும் ஏராளமாய் நமக்குக் கிடைக்கும்படி செய்யப்பட்டிருக்கிறது. நாமோ அவற்றை “[தீர] சிந்தித்துக்கொண்டு இவைகளிலே [ஆழ்ந்து] நிலைத்திருப்”பது அவசியம். (1 தீமோ. 4:15, NW) அப்போது ஏற்ற சமயத்தில் நமக்கு என்ன தேவையோ அதை ஞாபகத்துக்குத் திரும்ப கொண்டுவருவதற்கு இது உதவி செய்யும். நினைவுக்குக் கொண்டுவருவதற்கு நமக்கு உதவி தேவைப்படுமானால் நம்முடைய ஞாபகசக்தியை தூண்டுவதற்கு திட்டமிடப்பட்ட பிரசுரங்களை நாம் கொண்டிருக்கிறோம். எப்பொழுதுமே புதிய காரியங்களை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதற்கு மாறாக, நம்மிடம் இருப்பவற்றிற்கு மன மகிழ்ச்சியோடு நாம் நன்றிகூற வேண்டும். மற்றும் அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தோமானால், “நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யவும்” முதிர்ச்சியுள்ள ஆட்களாக நாம் நம்மைக் காண்பிப்போம்.—எபி. 5:14.