ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைத்தல்
1 ராஜ்யத்தை முதலாவது தேடு என்ற இயேசுவின் அறிவுரையை பொருத்திப் பிரயோகித்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் சில காரியங்களுக்கு முதன்மையான இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை கண்டிருக்கின்றனர். (மத். 6:33) மேலும் இயேசுவின் அறிவுரைகளைப் பின்பற்றுவது சில இடையூறுகளை மேற்கொள்ளுவதற்கும்கூட உதவுகிறது என்பதை காண்கின்றனர். பாராட்டத்தக்கவை அவிசுவாசியான குடும்ப அங்கத்தினரைக் கொண்ட அநேக சகோதர சகோதரிகள் ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைப்பதில் உண்மையுடன் தொடர்ந்திருக்கின்றனர்.
2 ராஜ்ய அக்கறைகளை தம்முடைய வாழ்க்கையில் முதலிடத்தில் வைத்தார் என்பதை இயேசு எவ்வளவு நம்பத்தக்க விதத்தில் நடப்பித்துக் காண்பித்தார்! பிலாத்து முன்னிலையில் விசாரணைக்காக நின்றபோது அவர் உறுதியுடன் நிலைத்திருந்தார். (யோவான் 18:36, 37) ஆம், கழுமரத்தில் மரிப்பதற்கு தொங்கிக் கொண்டிருந்த சமயத்திலும்கூட அவர் ராஜ்ய நம்பிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தினார். கள்வனிடம் பின்வருமாறு சொன்னார்: “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்.”—லூக். 23:43.
செல்லுங்செலவைக் கணக்குப் பார்த்தல்
3 ஏன் இயேசு ராஜ்யத்தை அவ்வளவு முக்கியமானதாக கருதினார்? கடவுளுடைய ராஜ்யம் நீதியாக ஆட்சி செய்யுமென்றும் அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியில் செய்யப்படுவதை அது கூடியகாரியமாக ஆக்கும் என்பதையும் பற்றிய “சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்கவே” அவர் பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டார். ஆதியில் நோக்கங் கொண்டதைப் போன்ற ஒரு பரதீஸாக இந்தப் பூமியை மாற்றியமைக்க வேண்டும் என்ற யெகோவாவின் சித்தத்தை நிறைவேற்றுவதில் பங்குகொள்வது என்னே பெருத்ததோர் மகிழ்ச்சி! ஆம், விசுவாசிக்கும் மனித குலத்திற்காக ராஜ்ய ஆட்சியின் கீழ் மிகுந்த ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன!
4 கடவுளுடைய ராஜ்யத்தின் சார்பாக பேசுகிறவரான இயேசுவைப் பின்பற்றுவதானது “கழுமரத்தைச்” சுமந்துசெல்வதையும் அது உட்படுத்தும் அனைத்துக் காரியங்களை ஏற்றுக்கொள்வதையும் குறிக்கிறது. ‘செல்லுங் செலவை கணக்குப் பார்த்தல்’ என்பது கடவுளுடைய சேவைக்கு இடையூறாக இருக்கக்கூடிய பொருளாதார உடமைகளை “வெறுத்துவிட” ஒருவர் ஆயத்தமாக இருப்பதைக் குறிக்கிறது. (லூக். 14:27, 28, 33) அதே சமயத்தில் அனைவரும் தம்மைப் பின்பற்றுகிறவர்களாகும்படியும் அனைவருடனும் நற்செய்தியை பகிர்ந்துகொள்ளும்படியும் இயேசு உற்சாகப்படுத்தினார். ராஜ்ய ஆட்சியின் கீழ் நித்திய ஜீவனை அடைவது எந்தச் செலவுக்கும் தகுதியானது.—மத். 13:44-46.
கவலைப்படாதிருங்கள்
5 பத்தொன்பது நூற்றாண்டுகள் கடந்து சென்றுவிட்டதானது ராஜ்ய அக்கறைகளை நம்முடைய வாழ்க்கையில் முதலிடத்தில் வைக்கவேண்டிய அவசியத்தைக் குறைத்துவிடவில்லை. யெகோவாவைச் சேவிப்பது உண்மையிலேயே நமக்கு மிகுந்த முக்கியத்துவமுடையதாக இருக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வது நல்லது. இயேசு விளக்கி கூறினதாவது: “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; . . . தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது; . . . ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்.” (மத். 6:24, 25) நம்முடைய ஆத்துமாக்களைக் குறித்து நாம் கவலையுள்ளவர்களாக இருக்கிறோமா? அல்லது ராஜ்யத்தை முதலாவது தேடு மற்ற எல்லாக் காரியங்களும் கூட கொடுக்கப்படும் என்ற இயேசுவின் அறிவுரையின் பேரில் நம்பிக்கையுள்ளவர்களாய் அதைப் பின்பற்றுவதற்கு போதிய விசுவாசம் நமக்கு இருக்கிறதா?
6 தங்களுடைய வேலை அட்டவணை தேவராஜ்ய நடவடிக்கைகளில் குறுக்கிடுகிறது என்பதற்காக அதிக சம்பளம் பெறும் வேலைகளையும் சில சகோதரர்கள் விட்டுகொடுத்திருக்கின்றனர். பைபிள் நியமங்களுக்கு முரணானது என்பதை உணர்ந்ததும் வேறு சிலர் தங்கள் தொழிலை மாற்றியமைத்துக் கொண்டனர். வேறு சில எஜமானர்கள் மனமுவந்த மற்றும் நம்பகமான வேலையாட்களாக நிரூபித்த யெகோவாவின் சாட்சிகளை வைத்துக்கொள்வதற்காக சலுகைகளை அளித்திருக்கின்றனர். (கொலோ. 3:23, 24) நிச்சயமாகவே ராஜ்ய அக்கறைகளை முதலாவது தேடுவதில் மூப்பர்களும் உதவி ஊழியர்களும் பயனியர்களும் நல்ல முன்மாதிரியை வைக்கும்போது, ஒரு சபையானது சிறந்த முறையில் பலப்படுத்தப்படுகிறது.
இப்பொழுதே திட்டமிடுங்கள்
7 இளைஞராகிய உங்களில் சிலர் சீக்கிரத்தில் பள்ளி படிப்பை முடிக்கக்கூடும். ஒரு தேவராஜ்ய வாழ்க்கைத் தொழிலுக்காக நீங்கள் இப்பொழுதே திட்டமிடுகிறீர்களா? நீங்கள் பயனியர் சேவையை துவங்குவதற்கு முன்பு முழுநேர உத்தியோகம் செய்ய உத்தேசிக்கிறீர்களா? பயனியர் சேவையில் எதிர்காலத்தில் பங்குபெறுவதைக் குறித்து நீங்கள் திட்டமிடுவது பாராட்டத்தக்கது. என்றபோதிலும் ராஜ்யம் உங்களுடைய வாழ்க்கையில் முதலிடத்திலிருக்குமானால் உங்களுடைய சூழ்நிலைமை அனுமதிக்குமானால் பயனியர் சேவையை ஏன் முதலிடத்தில் வைக்கக்கூடாது? உலகப் பிரகாரமான தொழில் முதலிடத்தை எடுத்துக்கொள்ளுமானால் கவலைகளினால் உங்கள் இருதயம் பாரமடைந்துவிடும் அபாயம் இருக்கிறது. இது பயனியர் சேவையை உற்சாகமிழக்கச் செய்துவிடக்கூடும்.—மத். 6:27, 34; லூக். 21:34.
8 இந்த உலகம் தனக்காக சேவை செய்ய மனமுள்ளவர்களிடமிருந்து அதிகத்தை எதிர்பார்க்கிறது. நாம் நம்முடைய வாழ்க்கையை எளிமையானதாக்கி அதிமுக்கியமான காரியங்களை நாம் நிச்சயப்படுத்திக் கொள்வோமானால் ராஜ்யத்தை முதலாவது தேடுவதிலிருந்து கிடைக்கும் ஆசீர்வாதங்களை நாம் அனுபவித்து மகிழ்வோம். இந்த உலகத்தின் கவர்ச்சிகளுக்கு இணங்கிச் செல்வதற்குப் பதிலாக நம்முடைய தேவைகளை அறிந்தவரும் அதை அளிப்பதாக வாக்களிப்பவருமான யெகோவாவில் நம்பிக்கையாயிருப்பது எவ்வளவு மேம்பட்டது! ராஜ்ய அக்கறைகளை முதலாவது வைப்பதன் மூலம் நம்முடைய வாழ்க்கை மெய்யான நோக்கமுடையதாக இருக்கும், நித்திய எதிர்கால ஆசீர்வாதங்களால் பலப்படுத்தப்படும்.—மத். 6:32; 1 தீமோ. 6:17-19.