நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதற்கு ஒருவருக்கொருவர் உதவுவதன்மூலம்
1 யெகோவாவை நேசிக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஊழியத்தில் பலன் தருபவர்களாக இருக்க விரும்புகின்றனர். இயேசு நம்மை “சீஷராக்கி . . . நான் கற்பித்த யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என்று கட்டளையிட்டார். (மத். 28:19, 20) நீங்கள் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க விரும்புவீர்களேயானால் யெகோவாவின் வழிநடத்துதலை நாடுங்கள். சபையின் மூலம் கொடுக்கப்படும் நடைமுறையான உதவிகளையும் யோசனைகளையும் அனுகூலப்படுத்திக் கொள்ளுங்கள்.—மத். 7:7, 8.
2 உங்களுடைய சபை புத்தகப்படிப்பு ஊழியர் உங்கள் தொகுதியிலுள்ள பைபிள் படிப்பு வேலையில் விசேஷ ஆர்வம் எடுத்துக்கொள்ளுகிறார். அவரை அணுகி வேதப்படிப்பை நடத்தவேண்டும் என்ற உங்கள் ஆவலை அவரிடம் தெரியப்படுத்துங்கள். கொஞ்ச காலத்துக்கு அனுபவமுள்ள ஒரு பிரஸ்தாபி உங்களோடு சேர்ந்து வேலை செய்வதற்கு அவர் ஏற்பாடுகள் செய்வார். அதன் உள்நோக்கம் (1) ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கும் பின்பு படிப்படியாக முன்னேறும் ஒரு படிப்பாக அதை நடத்துவதற்கும் (2) எதிர் காலத்தில் மற்ற படிப்புகளை ஆரம்பிப்பதற்கும் உதவும்.
முன்மாதிரியின் மூலம் கற்றுக்கொள்ளுங்கள்
3 அநேக சந்தர்ப்பங்களில், நாம் ஒரு பைபிள் படிப்பை கொண்டிராததற்கு காரணம் பிரசுரங்கள் பெற்றுக்கொண்டவரை, அல்லது ஆர்வம் காட்டினவரை விரைவாக திரும்பப்போய் சந்திக்காமலிருப்பதேயாகும். ஆகையால், கூடுமானவரை சீக்கிரமாக திரும்பப் போய் சந்திக்க வேண்டும் என்று தீர்மானம் பண்ணிக்கொள்ளுங்கள். என்றபோதிலும் ஆர்வம் காட்டுபவரைப்பற்றிய ஒரு நல்ல பதிவை வைத்துக்கொள்வது அவசியம். உங்களுக்கு உதவி செய்யக்கூடிய பிரஸ்தாபி இது எவ்வாறு செய்யப்படலாம் என்பதை ஒருவேளை காண்பிக்கக்கூடும். நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மறுசந்திப்புக்காக ஆயத்தம் செய்ய விரும்பக்கூடும். மறுபடியும் சந்திக்கையில் ஆர்வத்தை எப்படித் தூண்டலாம் என்பதற்கு பழகிப் பார்க்கும் நிகழ்ச்சிகள் மேம்பட்ட உதவியை கொடுக்கக்கூடும்.
4 ஒரு சந்திப்பின்போது உங்களுடைய ஊழிய கூட்டாளி எவ்வாறு துவங்குகிறார் என்பதை கவனியுங்கள். வீட்டுக்காரரை எப்படிச் சம்பாஷணையில் உட்படுத்துகிறார் என்பதையும் பாருங்கள். நீங்களும் அதையே எப்படிச் செய்யலாம் என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். வழிநடத்தும் கேள்விகள் மூலமாக அவ்வாறு செய்கிறாரா அல்லது பொருத்தமான வேத வசனத்தின் பேரில் குறிப்புச் சொல்லும்படி அழைப்பதன் மூலமாக வீட்டுக்காரரை பதில்சொல்ல வைக்கிறாரா? சந்திப்புக்கு பிற்பாடு நீங்கள் கற்றுக்கொண்டவற்றை விமர்சியுங்கள். பின்பு எதிர்கால மறுசந்திப்புகளில் இந்தக் காரியங்களை பொருத்த முற்படுங்கள்.
5 ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்துவிட்ட பிற்பாடு அதில் நீங்கள் இருவரும் பங்குபெறுவதற்கான வழிமுறைகளை திட்டமிடுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய வேதவசனங்களை நீங்கள் வாசிக்கலாம். பின்பு அவற்றை புரிந்துகொள்வதற்கு வீட்டுக்காரருக்கு உதவலாம். படிப்பை முடித்துவிட்டு திரும்பும்போது உதவக்கூடிய ஆலோசனைகளுக்காக, உதாரணமாக எப்பொழுது துணைக்கேள்விகளைக் கேட்கலாம், அடுத்த வார படிப்புக்காக மாணாக்கரின் பசியார்வத்தை எப்படி தூண்டுவது, அமைப்பினிடமாக கவனத்தை எவ்வாறு திருப்புவது போன்றவற்றை உங்கள் ஊழிய கூட்டாளியிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.
பிராந்திய சரிமாற்றம் செய்யப்படுகையில்
6 புதிய சபைகள் உருவாகும்போது அல்லது பிராந்திய சரிமாற்றங்கள் செய்யப்படுகையில் நீங்கள் ஆரம்பித்த ஒரு பைபிள் படிப்பை இன்னொரு பிரஸ்தாபிக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். மற்றெரு சபையிலுள்ள ஒரு திறமைவாய்ந்த பிரஸ்தாபியை உங்களுடன் வரும்படி ஏற்பாடு செய்யலாம். சில வாரங்கள் கழிந்த பின்பு, அந்தப் பிரஸ்தாபி அதைத் தொடர்ந்து நடத்தலாம். பைபிள் படிப்புகளை இன்னொருவர் நடத்த ஒப்படைப்பது சீஷராக்கும் வேலையின் மற்றொரு அம்சம் என்பதை உணருவதானது மாணாக்கருக்கு எது சிறந்ததோ அதைச் செய்யும்படி உங்களை வழிநடத்தும்.—பிலி. 2:4.
7 “சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன்” என்ற தமது வாக்குறுதியை யெகோவா நிச்சயமாகவே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். மேலும் விரும்பத்தக்க காரியங்களால் தமது ஆலயத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார். (ஆகாய் 2:7) யெகோவாவை அறிவதற்கும் அவரை நேசிப்பதற்கும் மற்றவர்களுக்கு உதவிசெய்வது ஆ! என்னே ஒரு மகத்தான சிலாக்கியம்! சபை புத்தகப்படிப்பு ஏற்பாட்டின் மூலம் ஒருவரக்கொருவர் உதவிசெய்து இவ்வாறாக நம்மில் அநேகர் ஒழுங்கான ஒரு வீட்டு பைபிள் படிப்பை நடத்தும் சந்தோஷத்தைக் கொண்டிருப்போமாக.