உங்களுடைய ஆவிக்குரிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுதல்
இயேசு சொன்னதாவது: “தங்களுடைய ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.” (மத்.5:3 NW) நம்முடைய ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவர்களாயிருப்பது ஏன் அவ்வளவு முக்கியமானது? அதைக் குறித்து நாம் உணர்வுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை நாம் எப்படி வெளிக்காட்டலாம்? நாம் தவிர்க்க வேண்டிய படுகுழிகள் யாவை? நம்முடைய ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவர்களாக இருப்பதனால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் யாவை?
2. சந்தேகமின்றி நம்முடைய சரீர சம்பந்தமான ஆரோக்கியத்துக்கும் சீராக உணவு உட்கொள்வதற்கும் இடையே உள்ள தொடர்பைக் குறித்து நாம் அனைவருமே நன்கு அறிந்தவர்களாக இருக்கிறோம். தன்னுடைய சரீரப்பிரகாரமான தேவைகளைத் தொடர்ந்து அசட்டை செய்யும் ஓர் ஆள் ஒவ்வொரு நாளும் தரமான வேலையை நடப்பிப்பார் என்று எதிர்ப்பார்க்க முடியாது. நம்மை நாமே ஆவிக்குரிய பிரகாரமாய் போஷித்துக் கொள்வதை அசட்டை செய்யும்போது அதே நியமம் பொருந்துகிறது.—மத் 4:4; யோவான் 17:3
தேவைகளைப் பூர்த்தி செய்ய கூட்டங்கள் உதவுகிறது
3. நம்முடைய ஆவிக்குரிய உடல் ஆரோக்கியத்துக்கும் நமது ஆவிக்குரிய உணவு உட்கொள்ளும் திட்டத்துக்கும் இடையே நேரடியான தொடர்பு இருக்கிறது. நமது கூட்டங்களில் நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பு” மிகச் சிறந்த ஆவிக்குரிய உணவு வகைகளை வழங்குகிறது. (மத். 24:45-47) ஒவ்வொரு கூட்டமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை சேவிக்கிறது. அவற்றில் எதையும் நாம் அசட்டை செய்யக்கூடாது. எல்லாக் கூட்டங்களுக்கும் நீங்கள் தயார் செய்கிறீர்களா/ மற்றும் ஒழுங்காக ஆஜராகிறீர்களா?
4. நாம் இப்பொழுது சுருக்கமாக நமது ஐந்து வாராந்தர கூட்டங்களில் மூன்றைப் பற்றி மட்டும் சிந்திப்போம். முன்னேறிக் கொண்டிருக்கும் சத்தியத்துக்கு இணையாக சேர்ந்து செல்வதற்கு திட்டமிட்டமைக்கப்பட்டிருக்கும் பிரதான கூட்டம் காவற்கோபுரம் படிப்பு. தேவராஜ்ய பள்ளியானது நாம் தேர்ச்சிப் பெற்ற ஊழியர்களாக ஆவதற்கு உதவி செய்யக்கூடும். சபை புத்தகப் படிப்பு பல்வேறு பைபிள் பொருள்களைப் பற்றிய கவனமான ஆராய்ச்சியை வழங்குகிறது.
5. சபைக் கூட்டங்களுக்காக நீங்கள் தயார் செய்கிறீர்களா? ஒரு சிலர் படிப்பு தகவல்களை மேலோட்டமாகப் படித்து கேள்விகளுக்கான விடைகளை சீக்கிரமாக கோடிட்டுவிடக்கூடும். ஆனால் இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்களை எடுத்துப் பார்க்காமலிருக்கக்கூடும். அவர்கள் ஏதோ கொஞ்சம் பதில் சொல்வதற்கு ஆயத்தமானவர்களாக இருக்கக்கூடும். ஆனால் கிடைக்கக்கூடிய முழு அளவான ஆவிக்குரிய போஷாக்கை அவர்கள் அடைகிறார்களா? நீங்களும் உங்களுடைய குடும்பத்தாரும் கூட்டங்களுக்காக தயார் செய்யும் விஷயத்தில் முன்னேறுவதற்கு இடமளிக்கிறதா?
காலத்தை வாங்குங்கள்
6. கூட்டங்களுக்காக தயார் செய்வதற்கு நேரத்தை ஒதுக்குகையில், உங்களுடைய திட்டத்தினுள் தொலைக்காட்சியோ அல்லது மற்றெந்த குறைந்த முக்கியத்துவமுள்ள காரியங்களோ குறுக்கிடுவதற்கு அனுமதியாதீர்கள். குடும்பத்தலைவர்கள் முக்கியமாகத் தங்கள் குடும்ப அங்கத்தினர்கள் ஒழுங்கான பைபிள் படிப்பு திட்டத்தைக் கொண்டிருப்பது, கூட்டங்களுக்குத், தயார் செய்வது, வெளி ஊழியத்தில் பங்கு பெறுவது போன்றவற்றை உறுதியாக கடைப்பிடிப்பதற்கு உதவி செய்ய வேண்டும். “கிடைக்கக்கூடிய காலத்தை விலைகொடுத்து வாங்க வேண்டும்.” என்ற பவுலின் ஆலோசனையை எல்லாரும் அதிக முக்கியம் வாய்ந்த ஒன்றாக ஏற்க வேண்டும், நமது ஆவிக்குரிய தேவைகளுக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும்.—எபே. 5:15-17
7. நம்முடைய ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து நாம் உணர்வுள்ளவர்களாக இருந்தால் நாம் மந்த மாணவர்களாக அல்லது சுய-திருப்தியுள்ளவர்களாக இருக்க செய்யும் படுகுழிகளை தவிர்ப்போம். தனிப்பட்டவர்களாகவும் குடும்பங்களாகவும் நமக்கு மெய்யான ஆவிக்குரிய தேவைகள் இருக்கின்றன நம்முடைய ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள் பேரிலேயே சார்ந்திருக்கிறது.