வீட்டுக்காரர் செவிகொடுத்துக் கேட்கும்படிசெய்யும் முன்னுரைகள்
1 உங்களுடைய வீட்டுக்கு-வீடு அளிப்பின் அதிமுக்கியமான பாகம் என்ன? அது முன்னுரைதான் என்று நம்மில் அநேகர் ஒப்புக்கொள்வோம். முதல் 30 விநாடிகளுக்குள் வீட்டுக்காரரின் அக்கறையைத் தூண்டுவதில் நீங்கள் வெற்றியடையவில்லை என்றால், அவர் சம்பாஷணையை ஒரு வேளை நிறுத்திவிடுவார்.
2 ஒரு திறம்பட்ட முன்னைரையைத் தயாரிக்கையில், என்ன காரணங்களை நீங்கள் சிந்திக்க வேண்டும்? நீங்கள் சந்திக்கவிருக்கும் ஜனங்களின் வழக்கங்களையும் அவர்களுடைய தேவைகளையும் கூர்ந்து ஆராயுங்கள். நகைச்சுவையான அறிமுக வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்வது வழக்கமான காரியமா அல்லது குறிப்புக்கு விரைவாக வரும்படி நீங்கள் எதிர்பார்க்கப்படுவீர்களா? உங்கள் பிராந்தியத்தில் அநேக இளம் தம்பதிகள் இருக்கின்றனரா? அவர்களுடைய அக்கறைகள் என்ன? பொதுவாக மனிதவர்க்கத்தை எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்னைகளைக் குறித்து உங்களுடைய சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஜனங்கள் உணர்வுள்ளவர்களாய் இருக்கின்றனரா?
இவ்வாறு சொல்வதன் மூலம் அவர்களைச் செவிகொடுத்துக் கேட்கும்படிச் செய்யலாம்:
◼ “வணக்கம். என்னுடைய பெயர் ․․. ஜனங்கள் போர்களில் கொல்லப்படுவதையும், பட்டினியாய் இருப்பதையும் பற்றி வாசிக்கும் போது எனக்கு அதிக கஷ்டமாக இருக்கிறது. உங்களுக்கு அப்படி இருக்கிறதா?” “இன்றைக்கிருக்கும் பிரச்னைகளை யாராவது பூமியிலிருந்து நீக்கிப்போட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” “ஏசாயா 9:6, 7-ல் குறிப்பிடப்பட்டிருப்பவைகளைப் போன்று ஒரு ஆட்சியாளருக்குத் தகுதிகள் இருந்தால்? (வாசித்து, வேத வசனத்தின் பேரில் குறிப்பு சொல்லுங்கள்)
3 சில பிராந்தியங்களில் ஜனங்கள் உலக சமாதானம் போன்ற உலக விவகாரங்களைக் காட்டிலும் தங்கள் வீடு மற்றும் குடும்பத்தின் பேரில் அதிக அக்கறையைக் காண்பிக்கலாம்.
இவ்வாறு கேட்பதன் மூலம் நீங்கள் அவர்களுடைய அக்கறையைத் தூண்டலாம்:
◼ “உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்துக்கும் இன்னும் பத்து ஆண்டுகளில் என்ன விதமான வாழ்க்கையை எதிர்பார்க்கிறீர்கள்? எதிர்காலத்தைப் பற்றிய பைபிளின் நோக்குநிலை அதிக உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது. ஏனென்றால் பரிபூரண தராதரங்களின் பேரில் ஆட்சி செய்யப் போகும் ஒரு ஆட்சியாளரின் வருகையைப் பற்றி அது முன்னறிவிக்கிறது. அவரைக் குறித்து ஏசா. 9:6, 7 என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்.”
4 குற்றச்செயலும் பாதுகாப்பும் சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளாக இருக்கும் ஒரு பிராந்தியத்தில் நீங்கள் வசிக்கிறீர்களா? நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கம் 10-ல் “குற்றச்செயல்/பாதுகாப்பு என்ற தலைப்பின் கீழ் இருக்கும் முதல் முன்னுரையை நீங்கள் உபயோகித்தால், சிலர் செவி கொடுத்துக் கேட்கலாம்.
நீங்கள் இவ்வாறு சொல்லலாம்
◼ வணக்கம். தனிப்பட்ட பாதுகாப்பு என்ற விஷயத்தைக் குறித்து நாங்கள் ஜனங்களிடம் பேசுகிறோம். நம்மைச் சுற்றி குற்றச் செயல்கள் அதிகமாக இருக்கின்றன, அவை நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கின்றன.” பின்பு, “அதற்குப் பரிகாரம் என்ன?” அல்லது “இப்படிப்பட்ட பிரச்னைகளை யாராவது பூமியிலிருந்து நீக்கிப்போட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” அல்லது “இப்படிப்பட்ட தகுதிகளையுடைய ஓர் ஆட்சியாளர் இருந்தால், அப்போது என்ன?” போன்ற கேள்விகள் ஒரு சம்பாஷணையை ஆரம்பிப்பதற்கு உதவியாயிருக்கக்கூடும். பிறகு நீங்கள் ஏசாயா 9:6, 7-ஐ வாசிக்கலாம்.
5 பள்ளி வயது இளைஞர்கள் உட்பட நாம் அனைவரும் இப்படிப்பட்ட எளிய ஓர் வசன அளிப்புகளை உபயோகிக்கலாம். உண்மையில், பத்திரிகைகளை அளிக்கும்போது இப்படிப்பட்டவைகளில் ஒன்றை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். பிரசுரங்களை அளிப்பதற்கு முன்பு, வீட்டுக்காரரின் அக்கறையை எழுப்புவதுதான் நம்முடைய இலக்கு என்பதை ஞாபகத்தில் வையுங்கள். இப்படிப்பட்ட வேதப்பூர்வ அளிப்பு, நமக்குச் செவிகொடுத்துக் கேட்பவர்களில் உண்மையான அக்கறையைத் தூண்டுவதற்கு ஒரு சிறந்த வழி என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா? பிப்ரவரி, மார்ச் மாதங்களின் போது இப்படிப்பட்ட அளிப்புகளை உபயோகிப்பதில் அநேகர் மகிழ்ச்சியடைவீர்கள் என்று நாங்கள் நிச்சயமாயிருக்கிறோம். பத்திரிகைகளை அளிக்கும்போதும் அந்த மாதத்துக்கான ஒழுங்கான அளிப்பை அளிக்கும்போதும் இவைகளை உபயோகிக்கலாம்.
6 நீங்கள் நடந்துகொள்ளும் முறையின் மூலமும், உங்களுடைய முன்னுரையின் மூலமும் உங்களுடைய சந்திப்பின் முதல் 30 விநாடிகளை நீங்கள் திறம்பட்ட விதத்தில் உபயோகித்தால் வீட்டுக்காரர்களைச் செவிகொடுத்துக் கேட்க வைக்க வேண்டும் என்ற முக்கியமான இலக்கை நீங்கள் பெரும்பாலும் அடைவீர்கள்.