யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் நம்மை ஆவிக்குரியவிதத்தில் தூண்டியெழுப்புகின்றனவா?
1 ‘உம்முடைய நினைப்பூட்டுதல்கள் என் கவனமாக இருக்கின்றன’ என்று சொல்லி, சங்கீதக்காரன் யெகோவாவைத் துதித்தார். (சங். 119:99, NW) “நினைப்பூட்டுதல்கள்” என்பதற்கான எபிரெய வார்த்தை, யெகோவா தம்முடைய பிரமாணங்கள், தம்முடைய ஆணைகள், தம்முடைய நியமங்கள், தம்முடைய கட்டளைகள், தம்முடைய சட்டங்கள் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டிருப்பவற்றை மீண்டும் நம் மனதுக்குக் கொண்டுவருகிறார் என்ற எண்ணத்தைத் தெரியப்படுத்துகிறது. நாம் பிரதிபலித்தோமென்றால், அவை நம்மை ஆவிக்குரியவிதத்தில் தூண்டியெழுப்பி மகிழ்விக்கும்.—சங். 119:2.
2 யெகோவாவின் மக்களாக, நாம் புத்திமதியையும் அறிவுரையையும் ஒழுங்காகப் பெறுகிறோம். அவற்றில் பெரும்பாலானவற்றை நாம் முன்பே கேட்டிருக்கிறோம். நாம் இந்த உற்சாகமளிப்பைப் போற்றினாலும்கூட, மறந்துவிடும் மனச்சாய்வைக் கொண்டிருக்கிறோம். (யாக். 1:25) யெகோவா பொறுமையுடன் அன்பான நினைப்பூட்டுதல்களை அளிக்கிறார். ‘கர்த்தருடைய கட்டளைகளை நாம் நினைவுகூரும்படி நம்முடைய தெளிவான சிந்தனா சக்திகளைத் தூண்டியெழுப்புவதற்காக’ அப்போஸ்தலன் பேதுரு இந்த நினைப்பூட்டுதல்களில் சிலவற்றை பதிவுசெய்தார்.—2 பே. 3:1, 2, NW.
3 தனிப்பட்ட படிப்பு மற்றும் கூட்டங்களுக்கு ஆஜராவதன் முக்கியத்துவத்தைப்பற்றி நாம் மீண்டும் மீண்டும் நினைப்பூட்டப்படுகிறோம். நம்முடைய ஆவிக்குரிய நலனுக்கு இந்த நடவடிக்கைகள் அவ்வளவு இன்றியமையாதவையாக இருப்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.—1 தீ. 4:15; எபி. 10:24, 25.
4 கிறிஸ்தவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட பிரசங்க வேலையை நிறைவேற்றுவது சிலருக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இதற்கு முயற்சி, மன உறுதி, மற்றும் விடாமுயற்சி அவசியப்படுகிறது. அது நம்மிடத்தில் அதிகத்தைத் தேவைப்படுத்தினாலும், நம்முடைய ‘கால்களில் நற்செய்தியின் ஆயுதத்தைத் தொடுத்தவர்களாக’ இருப்பதன்மூலம் நாம் ‘உறுதியாக நிற்பதற்கு’ உதவப்படுகிறோம்.—எபே. 6:14, 15, NW.
5 நம் சேவை, யெகோவா தேவைப்படுத்தும் காரியங்களைக்குறித்து வெறுமனே மனதளவில் உணர்ந்துகொள்வதைவிட அதிகத்தால் தூண்டப்பட வேண்டியதாய் இருக்கிறது. ‘இரட்சிப்பைப் பெற வெளிப்படையாக அறிக்கை செய்வதற்கு’ இருதயம் உந்துவிப்பை அளிக்கிறது என்று அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைவுபடுத்துகிறார். (ரோ. 10:10, NW) நமக்குப் பலமான விசுவாசம் இருந்து, நம் இருதயம் யெகோவாவின் நினைப்பூட்டுதல்களிடமாக சாய்ந்திருந்தால், நாம் அவருடைய பெயருக்குத் துதியைக் கொண்டுவருவதில் வெளிப்படையாகப் பேசும்படி தூண்டப்படுவோம்.—சங். 119:36; மத். 12:34.
6 நல்ல வேலைகளைச் செய்வதில் நாம் கடினமாக உழைக்கும்போது, இது நமக்குச் சந்தோஷத்தைக் கொண்டுவரும் என்று நாம் சரியாகவே எதிர்பார்க்கிறோம். (பிர. 2:10) யெகோவாவினுடைய ஆவியின் கனிகளில் ஒன்றாக பவுல் சந்தோஷத்தை அடையாளம் காட்டுகிறார்; அதை வெளிக்காட்டுவதில் ‘பெருகும்படி நாம் நாடவேண்டும்.’ (கலா. 5:22) “மனமார்ந்த முயற்சி” எடுப்பது பலன்தரத்தக்க ஊழியத்தில் விளைவடையும் என்றும் அது சந்தோஷத்தை உருவாக்கும் என்றும் பேதுரு மேலுமாகக் கூறினார்.—2 பே. 1:5-8, NW.
7 நாம் ஒரு சவாலை எதிர்ப்படுகையில், அப்போஸ்தலருடைய உறுதியான நிலைநிற்கையை நினைவுகூரவேண்டும்; அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே.” (அப். 4:20) ‘இவற்றைச் செய்யும்போது, நாம் நம்மையும் நம் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்வோம்’ என்பதை நினைவுகூருகையில், தொடர்ந்து செல்லும்படி பலப்படுத்தப்படுகிறோம்.—1 தீ. 4:16.
8 நினைப்பூட்டுதல்களைத் தொடர்ந்து பெறுவதன் காரணமாக நாம் எரிச்சலடைவதோ கோபப்படுவதோ கிடையாது. மாறாக, அவற்றின் மேம்பட்ட மதிப்பை நாம் ஆழமாகப் போற்றுகிறோம். (சங். 119:129) இந்தக் கொடிய காலங்களில், நம்மை ஆவிக்குரிய விதத்தில் தூண்டியெழுப்பவும் நல்ல வேலைகளைச் செய்வதில் வைராக்கியமாக இருக்க தூண்டுவிக்கவும் யெகோவா நினைப்பூட்டுதல்களை அனுப்பிக்கொண்டே இருப்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!—2 பே. 1:12, 13.