கடவுளுடைய வார்த்தையின் போதகராயிருங்கள் —சிற்றேடுகளை பயன்படுத்தி
1 யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஒவ்வொரு ஊழியனும் மற்றவர்களுக்கு கடவுளுடைய வார்த்தையை போதிக்கும் வேலையில் பங்குகொள்ளும் பொறுப்பை உடையவராயிருக்கிறார். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையுடையவர் “சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு உபதேசம்பண்ணு”ம்படியான கட்டளையை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை மதித்துணரும்போது இந்தப் பொறுப்பின் முக்கியத்துவம் தெளிவாகிறது. (மத். 28:18-20) ஆகையால், நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பங்குகொள்வது நாம் போதகர்களாவதைத் தேவைப்படுத்துகிறது!—2 தீ. 2:2.
2 ஆகஸ்டில் சிற்றேடுகளை அளிக்கையில் நம்முடைய போதனா திறமைகளை பயன்படுத்தலாம். அவற்றிலிருந்து வேதப்பூர்வ கருத்துக்கள் சிலவற்றைத் தெரிந்தெடுத்து, ஒரு சம்பாஷணையைத் துவங்க உதவும் சில குறிப்புகளைத் தயாரிக்கலாம்.
3 “கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?” என்ற சிற்றேட்டை அளிக்கையில், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “உங்கள் அயலகத்தாரை சந்தித்துவருகையில், அநேகர் குற்றச்செயல், பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றின்பேரில் உள்ள பெரும் அதிகரிப்பைப் பற்றி கவலையுள்ளவர்களாக இருப்பதைக் காண்கிறோம். உங்களுடைய அபிப்பிராயத்தில், இது ஏன் அத்தகைய பிரச்சினையாக ஆகியிருக்கிறது? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இது நடக்கும் என்று பைபிள் முன் அறிவித்தது விசேஷ அக்கறைக்குரியதாக இருக்கிறது. [2 தீமோத்தேயு 3:1-3-ஐ வாசியுங்கள்.] இது “கடைசிநாட்களில்” நடக்கவேண்டும் என்பதை கவனியுங்கள். ஏதோவொன்று முடிவுக்கு வரவிருக்கிறது என்பதை இது மறைமுகமாகக் காட்டுகிறது. அது என்னவென்று நினைக்கிறீர்கள்?” பதில் சொல்ல அனுமதியுங்கள். 22-ம் பக்கத்திற்குத் திருப்பி, விளக்கப்படத்தைக் காட்டி, அந்தப் பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஓரிரண்டு வேதவசனங்களை சம்பாஷியுங்கள். இந்த ஆசீர்வாதங்கள் சமீபத்தில் இருப்பதாக நாம் ஏன் நம்புகிறோம் என்பதை விளக்குவதற்கு பிற்பாடு திரும்பிவர ஏற்பாடுகள் செய்யுங்கள்.
4 “வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?” என்ற சிற்றேட்டை அளிக்கையில் இந்த அணுகுமுறையை நீங்கள் பயன்படுத்த விரும்பலாம்:
◼ “வாழ்வதற்கான உண்மையான நோக்கத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தும், முடியாமல் பலர் கஷ்டப்படுகின்றனர். சிலர் ஓரளவு மட்டுப்பட்ட சந்தோஷத்தை அனுபவித்தாலும், பெரும்பான்மையர் ஏமாற்றமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கையை வாழ்கின்றனர். இப்படித்தான் வாழவேண்டுமென்று கடவுள் உத்தேசித்தாரென நீங்கள் நினைக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] கடவுள் இதுபோன்ற உலகில் நாம் வாழும்படி விரும்புகிறார் என்று பைபிள் காட்டுகிறது.” 21-ம் பக்கத்தில் உள்ள விளக்கப்படத்தைக் காட்டி, 25-ம் பக்கத்திலும் 26-ம் பக்கத்திலும் உள்ள 4-6 பாராக்களிடம் திருப்பி, அவர் என்ன வாக்குறுதி செய்திருக்கிறார் என்பதை விளக்குங்கள். திரும்பிச் செல்லுகையில், கலந்துரையாடலுக்கான இந்தக் கேள்வியை எழுப்புங்கள்: “கடவுள் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதன்பேரில் நாம் எப்படி நிச்சயமாயிருக்கலாம்?”
5 “பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!” என்ற சிற்றேட்டை அளிக்கையில் அதன் முன் அட்டையிலும் பின் அட்டையிலும் உள்ள முழு படத்தையும் காட்டி நீங்கள் கேட்கலாம்:
◼ “இதுபோல சந்தோஷமான மக்கள் நிறைந்த ஓர் உலகில் நீங்கள் வாழ விரும்புவீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] கடவுள் மக்களை நேசிக்கிறார் என்றும் இந்த பூமியில் சந்தோஷத்துடன் என்றும் வாழ விரும்புகிறார் என்றும் பைபிள் நமக்குச் சொல்லுகிறது. 49-ம் எண்ணுள்ள படத்திற்குத் திருப்பி, இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்களில் ஒன்றை வாசியுங்கள். பின்னர், 50-ம் எண்ணுள்ள படத்தை காட்டி, இந்தப் பரதீஸில் வாழ விரும்பினால் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை விளக்கிக் காட்டுங்கள். திரும்பிவந்து, இயேசு கிறிஸ்துவின் பேரில் விசுவாசம் ஏன் அவ்வளவு முக்கியமானது என்பதை கலந்து பேசுவதாக சொல்லுங்கள்.
6 ‘நம்முடைய உபதேசத்துக்கு கவனம் செலுத்துவதன் மூலம் நாம் தேறுகிறதை விளங்கச்’ செய்தால் யெகோவா பிரியப்படுகிறார். (1 தீ. 4:15, 16) ‘நற்காரிய சுவிசேஷத்தைக்’ கேட்க ஆவலுள்ளவர்களுக்கு உதவும் முயற்சிகளில், நம்முடைய சிற்றேடுகள் நமக்கு மெய்யான உதவியாகத் திகழலாம்.—ஏசா. 52:7.