யெகோவாவால் பரிசோதிக்கப்படுதல் —ஏன் பயனுள்ளது?
1 எல்லாருமே நல்ல ஆரோக்கியத்தை விரும்புகின்றனர். அது வாழ்க்கையை அதிகமதிகமாக அனுபவிக்கத்தக்கதாக்குகிறது. என்றபோதிலும், நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்கிற அநேகர் இன்னமும் எப்பொழுதாவது பரிசோதனை செய்துகொள்கின்றனர். ஏன்? உருவாகிவரும் எந்தவித உடல்நலக் கோளாறுகளையும் கண்டுபிடிப்பதற்கு அவர்கள் முயற்சி செய்கின்றனர்; இதனால் அவற்றை குணப்படுத்துவதற்கு தேவையான படிகளை எடுக்கமுடியும். நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது இதைவிட அதிக முக்கியமானது. ‘விசுவாசத்தில் ஆரோக்கியமாக’ இருப்பதன்பேரில் யெகோவாவின் அங்கீகாரம் சார்ந்திருக்கிறது.—தீத். 1:13, NW.
2 யெகோவாவால் பரிசோதிக்கப்படுவதற்கு இப்பொழுதுதான் ஏற்ற சமயம். ஏன் அவ்விதமாக? ஏனென்றால் யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார், மேலும் அவர் எல்லா மனுஷர்களுடைய இருதயங்களையும் பரிசோதித்து வருகிறார். (சங். 11:4, 5; நீதி. 17:3) தாவீதைப் போலவே, யெகோவா நம்மை முற்றுமுழுக்க பரிசோதனை செய்யும்படி நாம் கேட்கிறோம்: “கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.”—சங். 26:2.
3 நம்முடைய அபூரண மாம்சத்தின் காரணமாக நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கு நம்மிலிருந்தே வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நீதிமொழிகள் 4:23 ஆலோசனை சொல்கிறது: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.”
4 நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியம், நம்மை சூழ்ந்திருக்கிற சீரழிந்த, ஒழுக்கங்கெட்ட உலகினாலும் அச்சுறுத்தப்படக்கூடும். இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு மிக அருகில் நெருங்கிச் செல்லும்படி நாம் நம்மை அனுமதிப்போமானால், நாமும் அதைப்போல சிந்திக்க ஆரம்பித்து, உலகப்பிரகாரமான மனப்பான்மைகளை வளர்க்கக்கூடும். அல்லது உலகப்பிரகாரமான வாழ்க்கைபாணியை நாம் ஏற்றுக்கொண்டு, உலகத்தின் ஆவியினால் மேற்கொள்ளப்படக்கூடும்.—எபே. 2:2, 3.
5 ஆவிக்குரிய விதமாக நம்மை அழிக்கும் முயற்சியில், சாத்தான் துன்புறுத்தலை அல்லது நேரடியான எதிர்ப்பை பயன்படுத்தக்கூடும். என்றபோதிலும், பெரும்பாலான சமயங்களில், நம்மை மோசம்போக்குவதற்கு உலகப்பிரகாரமான கவர்ச்சிகளை அவன் தந்திரமாக பயன்படுத்துகிறான். ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும் விழிப்புள்ளவர்களாகவும்’ இருக்கும்படி பேதுரு நம்மை உந்துவிக்கிறார். ஏனென்றால் சாத்தான் ‘கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிக்கொண்டிருக்கிறான்.’ ‘விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நிற்கும்படி’ நாம் உந்துவிக்கப்படுகிறோம்.—1 பே. 5:8, 9.
6 நம்முடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்வதன் மூலமும் அதை ஒவ்வொரு நாளும் பலப்படுத்துவதன் மூலமும் நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவேண்டிய அவசியமிருக்கிறது. நம்முடைய விசுவாசத்தைத் தொடர்ந்து நாம் பரிசோதிக்கும்படி அப்போஸ்தலன் பவுல் பரிந்துரை செய்கிறார். தகுதியான மருத்துவர் ஒருவரால் கொடுக்கப்படுகிற நடைமுறையான அறிவுரைக்கு ஞானமாக நாம் செவிசாய்ப்பது போலவே, சரிசெய்யப்பட வேண்டிய ஒரு பிரச்சினையை யெகோவாவுடைய ஆவிக்குரிய பரிசோதனை வெளிப்படுத்தும்போது நாம் அவருக்கும் செவிகொடுத்துக் கேட்கிறோம். இது, நாம் ‘நற்சீர் பொருந்துவதை’ சாத்தியமாக்குகிறது.—2 கொ. 13:5, 11.
7 யெகோவா உண்மையிலேயே மகத்தான பரிசோதகராக இருக்கிறார். அவருடைய பரிசோதனை எப்பொழுதும் திருத்தமாக இருக்கிறது. நமக்கு என்ன தேவை என்பதை அவர் துல்லியமாக அறிந்திருக்கிறார். அவருடைய வார்த்தையின் மூலமும் ‘உண்மையுள்ள அடிமையின்’ மூலமும், ஆரோக்கியமுள்ள ஆவிக்குரிய பத்திய உணவை குறித்துக்கொடுக்கிறார். (மத். 24:45, NW; 1 தீ. 4:6) வீட்டிலும் சபை கூட்டங்களிலும் இந்தப் போஷாக்குள்ள ஆவிக்குரிய ஆகாரமடங்கிய பத்திய உணவை தவறாமல் உட்கொண்டுவருவது, ஆவிக்குரிய விதமாக நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு துணைபுரிகிறது. ஊழியத்திலும் மற்ற கிறிஸ்தவ நடவடிக்கையிலும் கிடைக்கும் ஒழுங்கான ஆவிக்குரிய உடற்பயிற்சியும்கூட பயனுள்ளது. ஆகவே, யெகோவாவால் செய்யப்படுகிற ஒழுங்கான பரிசோதனையை நாம் வரவேற்கிறோம், அவர் நம்மை ஆவிக்குரிய ஆரோக்கியத்தில் மேம்பட்ட நிலையில் வைப்பார் என்ற நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.