இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்யுங்கள்
1 சிறப்பான சிலாக்கியம் ஒன்று நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது யெகோவாவுக்கு சாட்சிகளாக இருப்பதாகும். இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்டதிலேயே மிகப் பெரிய ராஜ்ய அறிவிப்பு வேலையை நிறைவேற்றுவதற்கு யெகோவாவால் பயன்படுத்தப்பட்டு வருகிற ஊழியர்களின் உலகளாவிய அமைப்பின் பாகமாக நாம் இருக்கிறோம்! (மாற். 13:10) நாம் வாழ்கிற காலங்களின் அவசரத்தன்மையைக் கருத்தில்கொண்டு, முடிந்தளவு முழுமையாக நாம் இந்த வேலையில் பங்கெடுக்கிறோமா?
2 முடிவாக எத்தனை பேர் நம்முடைய பிரசங்கத்திற்குப் பிரதிபலிப்பார்கள் என்று நமக்குத் தெரியாது. அது ‘ஒரு திரள் கூட்டமாக’ இருக்கும் என்று யெகோவா நமக்கு உறுதியளிக்கிறார்; அவர்கள் அனைவரும் ‘அவருக்கு இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்கிறவர்களாக’ அடையாளங்காட்டப்படுகிறார்கள். (வெளி. 7:9, 15, NW) கடவுளுடைய சேவையில் ஏற்கெனவே சுறுசுறுப்பாக இருக்கும் ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான சாட்சிகள் வெறுமனே அக்கறையுடன் செவிசாய்ப்பவர்களாகவோ கூட்டங்களுக்கு மட்டும் வருகிறவர்களாகவோ இல்லை. அவர்கள் உலகெங்கும் ராஜ்ய செய்தியை அறிவிக்கும் வேலையாட்கள்!
3 ஒவ்வொரு நாளும், வெளி ஊழியத்திலோ முறைப்படி அமையாத விதத்திலோ யெகோவாவைத் துதிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒருவரிடம் மட்டும் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ள நாம் ஒவ்வொருவரும் முன்முயற்சி எடுத்தால், எவ்வளவு மகத்தான சாட்சி கொடுக்கப்படலாம் என்பதைக் குறித்து யோசித்துப் பாருங்கள். யெகோவாவுக்கான நம்முடைய போற்றுதல் அவரைப் பற்றி ஆர்வத்துடன் பேசுவதற்கு நம்மைத் தூண்ட வேண்டும்.—சங். 92:1, 3.
4 பரிசுத்த சேவை செய்யும்படி மற்றவர்களுக்கு உதவுங்கள்: யெகோவா தொடர்ந்து நம்மை அதிகரிப்பால் ஆசீர்வதிக்கிறார். (ஆகா. 2:7) இந்தியாவில் கடந்த ஊழிய ஆண்டில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 13,105 வீட்டு பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன. இந்த மக்களுடன் படிப்பதற்கான நம் இலக்கு என்னவென்றால், அவர்களும் இயேசுவின் சீஷர்களாகும்படி உதவுவதாகும். (மத். 28:19, 20) கூட்டங்களுக்கு ஒழுங்காக ஆஜராவதன்மூலம் அவர்களில் அநேகர் நன்கு முன்னேறி இருக்கின்றனர். தாங்கள் கற்றிருக்கிற “தேவனுடைய மகத்துவங்களைப்” பற்றி தங்களுக்குப் பழக்கமானவர்களிடம் பேசத் தொடங்கி இருக்கின்றனர். (அப். 2:11) பொது ஊழியத்தில் பங்கெடுக்கும்படி அவர்கள் இப்போது அழைக்கப்படலாமா?
5 தகுதிபெறும் புதியவர்களை வெளி ஊழியத்தில் நம்முடன் சேர்ந்துகொள்ளும்படி அழைப்பதற்கு ஏப்ரலில் நாம் ஒரு விசேஷித்த முயற்சியை எடுக்க வேண்டும். உங்கள் மாணவர் இதைச் செய்வதற்கான விருப்பத்தை உங்களிடம் தெரிவித்திருக்கிறாரா? அப்படியானால், அவர் வேதப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்கிறாரா? (நம் ஊழியம் புத்தகம், பக்கங்கள் 97-9-ஐப் பார்க்க.) அந்த மாணவர் வெளி ஊழியத்தில் பங்குபெற விரும்பும்போது, அவரது எதிர்நோக்குகளைக் குறித்து நடத்தும் கண்காணியிடம் கலந்து பேசுங்கள்; அந்தக் காரியத்தைப் பரிசீலிக்க இரண்டு மூப்பர்களை அவர் ஏற்பாடு செய்வார். முழுக்காட்டப்படாத ஒரு பிரஸ்தாபி ஆகும்படி அந்த மாணவர் தகுதி பெற்றுவிட்டார் என்றால், உங்களோடு வெளி ஊழியத்தில் சேர்ந்து கொள்ளும்படி அவரை அழையுங்கள். ஏப்ரலிலிருந்து பிரஸ்தாபிகளாவதற்கு தகுதி பெறக்கூடியவர்களுக்கு உதவ ஊழியக் கண்காணிகளும் புத்தகப் படிப்பு நடத்துகிறவர்களும் விசேஷமாக கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
6 முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாவதற்கு தங்கள் பிள்ளைகள் தகுதி பெறுகிறார்களா என்பதைக் குறித்து பெற்றோர் சிந்தித்துப் பார்க்கக்கூடும். (சங். 148:12, 13) உங்கள் பிள்ளை ராஜ்ய ஊழியத்தில் தன்னை ஈடுபடுத்த விரும்புகிறவனாயும், அவன் நல்ல நடத்தை உடையவனாயும் இருந்தால், ஊழியக் குழுவிலுள்ள ஒரு மூப்பரை நீங்கள் அணுகி நிலைமையை கலந்து பேசக்கூடும். உங்களையும் பிள்ளையையும் ஒன்றாக வைத்து சந்தித்துப் பேசிய பிறகு, அவன் ஒரு பிரஸ்தாபியாக எண்ணப்படுவதற்கு தகுதி பெற்றிருக்கிறானா என்று இரண்டு மூப்பர்கள் தீர்மானிப்பார்கள். கடவுளைத் துதிப்பதற்கு பிள்ளைகள் நம்முடன் சேர்ந்துகொள்ளும்போது, சந்தோஷப்படுவதற்கு விசேஷித்த காரணம் இருக்கிறது!
7 யெகோவா மட்டுமே நம்முடைய பரிசுத்த சேவையைப் பெற தகுதியுடையவர். (லூக். 4:8) அவரை “மிகவும்” துதிப்பதற்கான அருமையான சிலாக்கியத்தை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்வோமாக.—சங். 109:30; 113:3.