1998-க்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி
பள்ளியில் படிப்பது என்பது, “போதிக்கப்படுவது அல்லது ஒரு விசேஷ அறிவை அல்லது திறமையைப் பெற தொடர்ந்து பயிற்றுவிக்கப்படுவது” என்று அர்த்தப்படுத்துகிறது. தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் மூலம் நாம் கடவுளைப் பற்றிய அறிவைப் பெறுவதில் தொடர்ந்து பயிற்றுவிக்கப்படுகிறோம். மேலும் இந்தப் பள்ளியில் நாம் பங்கேற்பது, நம்முடைய பேச்சு மற்றும் போதிக்கும் திறமைகளை வளர்க்கிறது. 1998-ம் ஆண்டுக்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி நிகழ்ச்சிநிரல், பல விதங்களில் நாம் இன்னும் அதிக ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதற்கான வாய்ப்புகளை அளிக்கும்.
நீங்கள் அடுத்த வருடத்திற்கான பள்ளி அட்டவணையை ஆராய்ந்துபார்த்தீர்கள் என்றால், முதல் ஆறு மாதங்களுக்கு பேச்சு எண் 3, அறிவு புத்தகத்தின் அடிப்படையில் இருக்கும். கூடுதலாக, 1998 வருட கல்வித்திட்டத்தில் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்திலிருந்து பேச்சு எண் 3-ம் பேச்சு எண் 4-ம் கொடுக்கப்படுவதன் மூலம் இது படிப்படியாக முடிக்கப்படும். எப்பொழுதெல்லாம் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தின் அடிப்படையில் பேச்சு எண் 4 அமைகிறதோ, அப்பொழுதெல்லாம் அதை ஒரு சகோதரர் சபைக்கு கொடுக்கும் ஒரு பேச்சாக கையாளுவார். இப்பள்ளியில் பங்கேற்பவர்கள் யாரும் அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை மறுபடியும் நினைவுபடுத்துகிறோம்.
ஒரு புதிய சிறப்பம்சம்: நம்முடைய சொந்த நலனுக்காக ஒரு “கூடுதலான பைபிள் வாசிப்பு அட்டவணை” ஒவ்வொரு வாரத்தின் பாட்டு எண்ணுக்கு வலது பக்கத்திலுள்ள அடைப்புக்குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்கும். வாராந்தரப் பள்ளி நிகழ்ச்சிநிரலானது இந்த அட்டவணையின் அடிப்படையில் அமையாத போதிலும், அதை உங்களுடைய இலக்காக வைத்து பின்பற்றுங்கள். இந்த முறையானது நீங்கள் தினமும் பைபிள் படிப்பதை பழக்கமாக்கிக்கொள்ள உதவிபுரிகிறது. ஒருவேளை நீங்கள் இதுவரை தினமும் பைபிள் படிக்காதிருந்தால், அவ்வாறு செய்ய இது உதவும்.
பேச்சு நியமிப்புகள், ஆலோசனை கொடுத்தல், எழுத்துமுறை மறுபார்வை ஆகியவற்றைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு தயவுசெய்து “1998 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை”-ஐயும், அக்டோபர் 1996 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 3-ஐயும் கவனமாக வாசியுங்கள்.
நீங்கள் இதுவரையிலும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேரவில்லையென்றால், இப்போதே சேர்ந்துகொள்ளும்படி உங்களை அழைக்கிறோம். தனித்தன்மை வாய்ந்த இப்பள்ளி, யெகோவாவின் மனத்தாழ்மையும் பக்தியுமுள்ள ஊழியர்களை இன்னும் தகுதிவாய்ந்த ஊழியர்களாக ஆக்குவதில், தொடர்ந்து ஒரு முக்கியமான பங்கை வகித்துவருகிறது.—1 தீ. 4:13-16.