உங்களுக்கு “மாம்சத்திலே ஒரு முள்” இருக்கிறதா?
1 நற்செய்தியை பிரசங்கிக்கவேண்டிய கடமையை நம்மாலான மிகச்சிறந்த விதத்தில் செய்து முடிப்பதற்கு நாம் பேராவல் கொள்கிறோம். இருப்பினும், நம்முடைய அன்பான சகோதர சகோதரிகளில் அநேகர் முழுமையாக பங்குகொள்வதை சிரமமாக காண்கின்றனர்; ஏனென்றால், தீராத வியாதிகள் அல்லது உடல் ஊனங்கள் குறுக்கிட்டு அவர்கள் விரும்புகிற அளவுக்கு செய்வதை கடினமாக்குகின்றன. விசேஷமாக, தங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஊழியத்தில் அதிக சுறுசுறுப்பாக ஈடுபடுவதை பார்க்கும்போது, சோர்வடையச் செய்யும் உணர்ச்சிகளை சமாளிப்பது அவர்களுக்கு சவாலாக இருக்கலாம்.—1 கொ. 9:16.
2 பின்பற்றத்தக்க ஒரு முன்மாதிரி: அப்போஸ்தலனாகிய பவுல், “மாம்சத்திலே ஒரு முள்”ளுடன் போராட வேண்டியிருந்தது. தன்னை எப்போதும் குட்டிய ‘சாத்தானின் தூதன்’ என்பதாக இதை அவர் விவரித்தார்; இந்தக் கடும்வேதனையூட்டும் தொந்தரவை நீக்கும்படி அவர் யெகோவாவிடம் மூன்று முறை மன்றாடினார். இருந்தபோதிலும், அதன் மத்தியிலும்கூட, பவுல் சகித்திருந்து தன்னுடைய ஊழியத்தில் முன்னேறினார். அவர் தன்மீதே பரிதாபப்பட்டுக்கொண்டோ சதா புலம்பிக்கொண்டோ இல்லை. அவர் தன்னாலான மிகச் சிறந்ததை செய்தார். “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்ற கடவுளின் இந்த வாக்குறுதியே அவர் வெற்றிகரமாக சமாளிப்பதற்கு உதவியது. பவுல் சகித்திருப்பதற்காக, தன்னுடைய சூழ்நிலையை ஏற்றுக் கொண்டு, யெகோவாவிலும் பரிசுத்த ஆவியிலும் சார்ந்திருக்க கற்றுக்கொண்டபோது அவருடைய பலவீனம் பலமாக மாறியது.—2 கொ. 12:7-10.
3 நீங்கள் எவ்வாறு சகிக்கலாம்: மனித பலவீனம் கடவுளுக்கு நீங்கள் செய்யும் சேவையில் கட்டுப்பாட்டை வைக்கிறதா? அப்படியானால், பவுலின் மனநிலையைப் பின்பற்றுங்கள். உங்களுடைய வியாதி அல்லது உடல் ஊனத்துக்கு இந்தக் காரிய ஒழுங்குமுறையில் எந்தப் பரிகாரமும் இல்லாதபோதிலும்கூட, உங்களுடைய தேவையை புரிந்துகொண்டு, “இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியை” கொடுக்கிற யெகோவாவின் மீது நீங்கள் முழு நம்பிக்கை வைக்கலாம். (2 கொ. 4:7, NW) உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக, சபையில் கிடைக்கும் உதவியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். (நீதி. 18:1) வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்கு கொள்வது கடினமாக இருந்தால், சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கோ தொலைபேசி சாட்சி கொடுப்பதற்கோ நடைமுறையான வழிகளைப் பாருங்கள்.
4 மாம்சத்திலே ஒரு முள் ஊழியத்தில் உங்களால் செய்ய முடிந்ததை கட்டுப்படுத்துகிறபோதிலும், நீங்கள் லாயக்கற்றவராக உணரவேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உடல் வலிமையும் சூழ்நிலைமைகளும் அனுமதிக்கிற அளவுக்கு செய்வதன்மூலம் நீங்களும்கூட பவுலைப் போல “தேவனுடைய தகுதியற்ற தயவின் சுவிசேஷத்திற்கு முழுமையாக சாட்சிபகர” முடியும். (அப். 20:24, NW) உங்கள் ஊழியத்தை நிறைவேற்றுவதற்காக நீங்கள் முயற்சி எடுக்கையில் யெகோவா அதிக மகிழ்ச்சியடைவார் என்பதை அறியுங்கள்.—எபி. 6:10.