வழிகாட்டும் கண்காணிகள்—தேவராஜ்ய ஊழியப் பள்ளி கண்காணி
1 தேவராஜ்ய ஊழியப் பள்ளி கண்காணி ஆவிக்குரிய விதத்தில் முதிர்ச்சிவாய்ந்த மனிதர். பேசுவதிலும் போதிப்பதிலும் கடினமாய் உழைக்கிறார். நம் மரியாதைக்கும் ஒத்துழைப்புக்கும் தகுதியானவர். (1 தீ. 5:17 ) அவருடைய பொறுப்புகள் யாவை?
2 ராஜ்ய மன்றத்திலுள்ள தேவராஜ்ய ஊழியப் பள்ளி நூலகம் அவருடைய கவனிப்பின்கீழ் வருகிறது. இப்பள்ளியில் சேர்ந்துகொள்ள தகுதிபெறுகிற அனைவரையும் உற்சாகப்படுத்துவதில் ஆழ்ந்த அக்கறைகாட்டுகிறார். பள்ளி நடப்பதற்கு குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு முன்பே நியமிப்புகளை ஒழுங்கான முறையில் கொடுப்பதற்காக, திருத்தமான பதிவு வைக்கப்படுகிறதா என்பதை கவனித்துக்கொள்கிறார். சபையை அவர் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவரையும் அவருடைய திறமைகளையும் மனதில் கொண்டிருப்பது அவசியம். பள்ளி அட்டவணையை தயாரிப்பதில் மற்றொரு சகோதரரை அவருக்கு உதவியாக வைத்துக்கொள்ளலாம்; என்றபோதிலும், பேச்சுக்களை தகுந்த விதத்தில் நியமிப்பது அவருடைய மேற்பார்வையில் இருக்கிறது.
3 பள்ளியை திறம்பட்ட முறையில் நடத்துவதற்கு ஒவ்வொரு வாரமும் கண்காணி ஊக்கமாய் தயாரிக்க வேண்டும். நியமிக்கப்பட்ட பொருளை நன்கு படிக்க வேண்டும். இது, பாடதிட்டத்தை சபையார் மிகுந்த ஆர்வமுடன் எதிர்நோக்கியிருப்பதற்கும், நியமிக்கப்பட்ட பொருள் சரியாக பேசப்பட்டிருக்கிறதா என்பதை தீர்மானிப்பதற்கும், எழுத்துமுறை மறுபார்வையில் வரும் முக்கிய குறிப்புகளை சிறப்பித்துக் காட்டுவதற்கும் உதவும்.
4 மாணாக்கர் பேச்சு ஒவ்வொன்றும் முடிந்தப்பின், அந்த மாணாக்கருக்கு கண்காணி பாராட்டு தெரிவிப்பார்; மேலும், குறிப்பிட்ட பேச்சு பண்பு ஏன் நன்றாக இருந்தது அல்லது ஏன் அதில் முன்னேற்றம் தேவை என்பதை விளக்குவார். பள்ளி நியமிப்புகளை தயாரிப்பதற்கு கூடுதலான பயிற்சி எவருக்கேனும் தேவைப்பட்டால், கண்காணியோ அல்லது அவரால் நியமிக்கப்படும் வேறொருவரோ தனிப்பட்ட உதவியளிக்கலாம்.
5 தேவராஜ்ய ஊழியப் பள்ளி கண்காணி மற்றும் அவருடைய வழிநடத்துதலின்கீழ் சேவிக்கும் கூடுதலான ஆலோசகரின் கடினமான உழைப்பிலிருந்து முழுமையாக பயன்பெறுவதற்காக, நாம் பள்ளிக்கு தவறாமல் ஆஜராக வேண்டும். நம்முடைய நியமிப்புகளை நாம் அனைவருமே நல்லவிதமாக செய்துமுடிக்கவும் வேண்டும். மேலும், நமக்கும் மற்ற மாணாக்கர்களுக்கும் கொடுக்கப்படும் ஆலோசனையை பொருத்திப் பயன்படுத்த வேண்டும். இந்த முறையில், சபையார் முன்பும் வீடு வீடாக சென்று ராஜ்ய செய்தியை அறிவிக்கும் திறமையிலும் நாம் படிப்படியாக முன்னேறுவோம்.—அப். 20:20; 1 தீ. 4:13, 15.