யெகோவாவின் பாரபட்சமற்ற குணத்தைப் பின்பற்றுவோமாக
1 யெகோவா எல்லாரிடமும் கரிசனை காட்டுபவர், அவருடைய சித்தத்தை செய்யும் அனைவரையும் பாரபட்சமின்றி ஏற்றுக்கொள்கிறார். (அப். 10:34, 35) மக்களுக்கு பிரசங்கித்தபோது, இயேசுவும் அவரைப் போலவே பாரபட்சமில்லாதவராக இருந்தார். (லூக். 20:21) பவுலைப் போல், நாமும் அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். அவர் எழுதினதாவது: “அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார்.”—ரோ. 10:12, பொ.மொ.
2 நாம் சந்திக்கும் எல்லோரிடமும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பது, கடவுளுக்கு மகிமையை தேடித் தருகிறது. எந்த இனத்தவராகவும் அந்தஸ்துடையவராகவும் அறிவுள்ளவராகவும் வசதிபடைத்தவராகவும் இருந்தாலும், எல்லோருக்கும் இந்த அருமையான பொக்கிஷத்தை தொடர்ந்து அள்ளித் தரவேண்டும். (ரோ. 10:11-13) ஆண் பெண், இளையோர் முதியோர் என்ற பாகுபாடின்றி, செவிகொடுக்கும் அனைவருக்கும் பிரசங்கிக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம். ஒவ்வொரு வீட்டுக்காரரும் சத்தியத்தை கேட்க வாய்ப்பு கொடுக்க வேண்டும், இதற்காக எல்லா வீடுகளையும் நாம் சந்திக்க வேண்டும்.
3 எல்லோருக்கும் கரிசனை காட்டுங்கள்: எவ்வளவு பேரை நம்மால் சந்திக்க முடியுமோ அவ்வளவு பேரையும் சந்திப்பதே நம் இலக்கு. இதை மனதிற்கொண்டு, மருத்துவமனைகள், நர்ஸிங் ஹோம்கள், மக்கள் நல அலுவலகங்கள், மறுவாழ்வு மையங்கள் போன்ற இடங்களில் உள்ளவர்களையும் சந்தித்து சாட்சிகொடுப்பதில் வெற்றியடைந்துள்ளனர். அதோடு, காவல்துறையினர், கல்வி துறையினர், வழக்குறைஞர்கள், நீதிபதிகள் போன்றோருக்கும் நம் பிரஸ்தாபிகள் சாட்சி கொடுத்துள்ளனர். நாம் அதிகாரிகளை சந்திக்கையில், சமுதாயத்திற்கு ஆற்றும் தொண்டுக்காக அவர்களை பாராட்டுவது நல்லது. அவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும், அவர்களுடைய வேலையைப் பற்றியும் அதில் உட்பட்டுள்ள பிரச்சினைகளைப் பற்றியும் கலந்தாராயும் கட்டுரைகளை தேர்ந்தெடுத்து அளியுங்கள்.
4 ஒரு சமயம், நீதிபதியிடம் அவருடைய அலுவலகத்தில் பேசுவதற்கான வாய்ப்பு ஒரு சகோதரிக்கு கிடைத்தது. உற்சாகமான உரையாடலுக்குப் பிறகு அவரே இவ்வாறு சொன்னார்: “யெகோவாவின் சாட்சிங்ககிட்ட எனக்கு பிடிச்ச ஒரு விஷயம் என்ன தெரியுமா? அவங்க ஆதாரப்பூர்வமான கொள்கைகள உடையவங்க, அதிலிருந்து அவங்க இம்மியும் விலகுவதே இல்ல.” அந்தஸ்துமிக்க அந்த நபருக்கு சிறந்த சாட்சி கொடுக்கப்பட்டது.
5 மக்களின் இதயங்கள் திறந்த புத்தகமல்ல என்பது உண்மைதான். இருப்பினும், நாம் சந்திக்கும் அனைவரோடும் பேசுவது, நம் வேலையை வழிநடத்தும் கடவுளுடைய திறமையில் நமக்குள்ள விசுவாசத்தை வெளிக்காட்டுகிறது. கூடுதலாக, நம்பிக்கையின் செய்தியை மக்கள் கேட்பதற்கும், அதற்கேற்ப செயல்படுவதற்கும் வாய்ப்பளிக்கிறது. (1 தீ. 2:3, 4) நம் நேரத்தை ஞானமாக பயன்படுத்தி, இந்த நற்செய்தியின் மூலம் நம்மால் முடிந்தளவு எல்லோரையும் சந்திப்போம்; இவ்வாறு யெகோவாவின் பாரபட்சமற்ற குணத்தை பின்பற்ற கடும்முயற்சி செய்வோமாக.—ரோ. 2:11; எபே. 5:1, 2.