சம்பாஷணையை துவக்க துண்டுப்பிரதிகளை பயன்படுத்துங்கள்
1 சம்பாஷணையை துவக்க நீங்கள் எடுக்கும் முயற்சியில்தான் பெரும்பாலும் திறம்பட்ட விதத்தில் சாட்சி கொடுப்பது சார்ந்துள்ளது. இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா? ஒருவருடைய ஆவலைத் தூண்டி, அவரை சம்பாஷணையில் உட்படுத்தும் வகையில் பேசுவதே மிகப் பெரிய சவால். ஆனால், இதை திறம்பட்ட விதத்தில் செய்வது எப்படி?
2 நன்கு யோசித்து தெரிந்தெடுத்த சில வார்த்தைகளை சொல்லி, பைபிள் அடிப்படையிலான ஒரு துண்டுப்பிரதியை கொடுப்பதன்மூலம் பேச்சை துவக்கலாம் என அநேக பிரஸ்தாபிகள் கருத்து தெரிவிக்கின்றனர். துண்டுப்பிரதியின் தலைப்புகள் கருத்தைக் கவரும் விதத்தில் இருக்கின்றன. கண்ணைக்கவரும் வண்ணப்படங்கள் அவற்றில் உள்ளன. படிப்பதற்கு நிறைய இருக்கிறதென்னும் எண்ணத்தால் ஒருவரை திணறடிப்பவை அல்ல இந்தத் துண்டுப்பிரதிகள். என்றாலும், துண்டுப்பிரதியிலுள்ள ரத்தினசுருக்கமான செய்திகள் ஒருவரின் கருத்தைக் கவரும் வண்ணம் உள்ளன. ஆகவே, இவற்றின் உதவியால் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க முடியும்.
3 “பிஸியான நாகரிக உலகில், படிப்பதற்காக நேரத்தை ஒதுக்க பெரும்பாலும் மக்கள் விரும்புவதில்லை. ஆனால், துண்டுப்பிரதிகளோ முக்கியமான செய்தியை சுருக்கமாக அளிக்கின்றன. அதேசமயம், மக்கள் வேண்டாமென்று ஒதுங்குமளவுக்கு வளவளவென்றும் இல்லை. நான் நிறைய துண்டுப்பிரதிகளைப் படித்துத்தான் சத்தியத்திற்கு வந்தேன்” என ஒரு சாட்சி சொல்கிறார். இந்தத் துண்டுப்பிரதிகளில் சுருக்கமாக விளக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய வார்த்தையின் சக்தியை ஒருபோதும் குறைவாக எடைபோடாதீர்கள்.—எபி. 4:12.
4 நான்கு எளிய வழிகள்: எளிய அணுகுமுறையை பயன்படுத்தி பலர் வெற்றி கண்டுள்ளனர். (1) துண்டுப்பிரதிகளில் சிலவற்றைக் காண்பித்து, அவற்றில் எதை வீட்டுக்காரர் விரும்புகிறார் என்று கேளுங்கள். (2) விரும்புகிற ஒன்றை அவர் தெரிந்தெடுத்த பின், துண்டுப்பிரதியில் உள்ள முக்கிய குறிப்பை சிறப்புப்படுத்திக் காட்டும் நன்கு தயாரிக்கப்பட்ட ஒரு கேள்வியை கேளுங்கள். (3) அந்த கேள்விக்கு பொருத்தமான பதிலை அளிக்கும் பத்தியையோ அல்லது வசனத்தையோ துண்டுப்பிரதியில் இருந்து வாசியுங்கள். (4) சாதகமாக பிரதிபலித்தால், துண்டுப்பிரதியில் உள்ள சில குறிப்புகளையோ அல்லது தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்து ஒரு பாடத்தையோ அல்லது அறிவு புத்தகத்தில் ஒரு அத்தியாயத்திலிருந்தோ சில குறிப்புகளை சொல்லுங்கள். இப்படியாக, ஒரு பைபிள் படிப்புக்கு அஸ்திபாரத்தை நீங்கள் போடலாம். நான்கு துண்டுப்பிரதிகளை பயன்படுத்தி எப்படி பேசலாம் என்பதை தயாரிக்க பின்வரும் ஆலோசனைகள் உதவும்.
5 “நிஜமாக உலகத்தை ஆளுவது யார்?” என்ற துண்டுப்பிரதியின் தலைப்பையே கேள்வியாக பயன்படுத்தலாம்.
◼ இந்தக் கேள்விக்கு, “கடவுள்” அல்லது “எனக்கு தெரியாது” என்று வீட்டுக்காரர் சொன்னால், துண்டுப்பிரதியில் பக்கம் 2-ல் உள்ள முதல் இரண்டு வாக்கியங்களையும் பக்கம் 3-ல் உள்ள முதல் பத்தியையும் வாசித்துக்காட்டுங்கள். 1 யோவான் 5:19-லும் வெளிப்படுத்துதல் 12:9-லும் உள்ள குறிப்புகளை வலியுறுத்துங்கள். பிசாசாகிய சாத்தான் இருப்பதை ஒருவர் சந்தேகிக்கிறாரோ இல்லையோ அல்லது பூமியின்மீது அவனுடைய செல்வாக்கை ஒத்துக்கொள்கிறாரோ இல்லையோ, “உலக நிலைமைகள் சுட்டிக்காட்டும் குறிப்பு” என்ற உபதலைப்பின்கீழ் உள்ள குறிப்புகளை வைத்து பேச்சை தொடரலாம். ஆர்வம் காட்டினால், துண்டுப்பிரதியில் பக்கங்கள் 3, 4-ல் உள்ள குறிப்புகளை பயன்படுத்தி, சாத்தான் எங்கிருந்து வந்தான் என்பதை விளக்க விரும்புவதாக சொல்லுங்கள்.
6 “மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை?” துண்டுப்பிரதி வீட்டுக்காரரின் ஆர்வத்தை உடனடியாக தூண்டலாம். சம்பாஷணையை துவக்க இப்படிக் கேட்கலாம்:
◼ “இறந்து போன நம் அன்புக்குரியவர்களை மறுபடியும் பார்க்க முடியுமா?” என கேளுங்கள். வீட்டுக்காரர் பதில் சொல்ல அனுமதியுங்கள். பின், துண்டுப்பிரதியில் பக்கம் 4-ல் இரண்டாவது பத்தியை காட்டி, அதிலுள்ள வசனம் யோவான் 5:28, 29-ஐ வாசியுங்கள். துண்டுப்பிரதியில் முதல் உபதலைப்பின்கீழ் உள்ள தகவல்களை புரிந்துகொள்ள இது உதவும் என விளக்குங்கள். அதைக் குறித்து கலந்தாலோசிக்கலாம் என சொல்லுங்கள்.
7 “குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள்” துண்டுப்பிரதி உலகிலுள்ள எல்லா குடும்பங்களையுமே கவரக்கூடியது. அதை பயன்படுத்தி, நீங்கள் இப்படி சொல்லலாம்:
◼ “குடும்பங்கள் இன்று அதிக பிரச்சினைகளில் சிக்கி தவிக்கின்றன என்பதை நீங்கள் நிச்சயம் ஒத்துக்கொள்வீர்கள். குடும்ப உறவுகளை பலப்படுத்த என்ன செய்யலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” பதில் சொல்ல அனுமதியுங்கள். பின்னர், வீட்டுக்காரரின் கவனத்தை பக்கம் 6-ல் முதல் பத்தியில் உள்ள குறிப்புகளுக்கு திருப்புங்கள். துண்டுப்பிரதியில் பக்கங்கள் 4, 5-ல் உள்ள வசனங்களில் ஒன்றை வாசித்து, அதன் அர்த்தத்தை விளக்குங்கள். பின், இலவச வீட்டு பைபிள் படிப்பைப் பற்றி சொல்லுங்கள்.
8 “நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்?” துண்டுப்பிரதியை பயன்படுத்த இதோ ஓர் அணுகுமுறை:
◼ “பைபிளின் முதல் புத்தகத்தில் இருக்கிற ஆபேல், காயீன் கதை நிறைய பேருக்குத் தெரியும். ஆதியாகமத்தில் உள்ள குறிப்பு காயீனின் மனைவியைப் பற்றியும் சொல்கிறது. அவள் எங்கிருந்து வந்தாள் என்பதைக் குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?” இந்த கேள்விக்கு பதில் சொல்ல, துண்டுப்பிரதியில் பக்கம் 2-ல் கடைசி பத்தியில் உள்ள குறிப்புகளை உபயோகியுங்கள். நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய பைபிளின் முக்கியமான விளக்கங்கள் துண்டுப்பிரதியில் இருப்பதையும் விளக்குங்கள். பக்கம் 5-ல் மூன்றாவது பத்தியில் இருந்து கலந்தாலோசிப்பை தொடருங்கள். அதிலுள்ள வசனங்களையும் பயன்படுத்தி குறிப்புகளை சொல்லுங்கள்.
9 பைபிள் செய்தியை உடைய துண்டுப்பிரதிகளை விநியோகிப்பது, நற்செய்தியை அறிவிக்க உதவும் திறம்பட்ட முறையாகும். காலாகாலமாக இப்படி செய்யப்பட்டு வருகிறது. நீங்கள் எங்கு சென்றாலும் அவற்றை எடுத்து செல்வது சுலபம். அதனால், வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போதும் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போதும் இவற்றை திறம்பட்ட விதத்தில் உபயோகிக்கலாம். நம் ஊழியத்தை முழுமையாய் நிறைவேற்றுவதில் துண்டுப்பிரதிகள் முக்கிய பாகம் வகிக்கின்றன. வித்தியாசமான துண்டுப்பிரதிகளை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். சம்பாஷணையை துவக்க அவற்றை தயங்காமல் தாராளமாக உபயோகியுங்கள்.—கொலோ. 4:17.