நீங்கள் தவறாமல் ஊழியத்திற்குச் செல்பவரா?
1 ஆகஸ்ட் 1999-ல் இந்தியா என்றுமில்லாத உச்சநிலை எண்ணிக்கையாக 21,212 பிரஸ்தாபிகளை எட்டியதைக் குறித்து அறிந்தபோது நாம் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தோம். உண்மையிலேயே இதை ஐக்கியப்பட்ட, உறுதியான முயற்சி எனலாம்! கிடைத்த ஆதாரத்தின் பேரில் பார்த்தால், அதைத் தொடர்ந்து வந்த மாதங்களில் இந்தப் பிரஸ்தாபிகளில் சிலருக்கு ஊழியத்தில் தவறாமல் கலந்துகொண்டு ராஜ்ய அறிவிப்பாளர்களாக இருப்பது கடினமாக இருந்திருக்கிறது. அது முதற்கொண்டு பிரஸ்தாபிகளின் மாதாந்தர சராசரி எண்ணிக்கை சுமார் 20,095 ஆக இருந்திருக்கிறது. 19 பிரஸ்தாபிகளில் ஒருவர் வெளி ஊழியத்தில் ஒவ்வொரு மாதமும் கலந்துகொள்ள திட்டமிடவில்லை என்பதையே இது காட்டுகிறது. பின்வரும் ஊக்குவிப்பு இப்பிரச்சினைக்கு பரிகாரமாய் அமையும் என நாங்கள் நம்புகிறோம்.
2 பாக்கியத்தைப் போற்றுங்கள்: மற்றவர்களுக்கு ராஜ்ய நற்செய்தியை சொல்லும் நமது பாக்கியத்தை நாம் ஆழ்ந்து போற்ற வேண்டும். இந்த வேலை யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துகிறது; நேர்மை மனம்படைத்தவர்கள் ஜீவனுக்கான வழியைக் கற்றுக்கொள்ள உதவியளிக்கிறது. (நீதி. 27:11; 1 தீ. 4:16) தவறாமல் சாட்சிகொடுப்பது ஊழியத்தில் நம்மை அனுபவமிக்கவர்களாய் ஆக்குகிறது; இது சந்தோஷத்தையும் சாதனை உணர்வையும் ஏற்படுத்துகிறது.
3 ஊழியத்தை அறிக்கை செய்யுங்கள்: ஊழியத்தில் கலந்துகொள்ளும் சிலர், தங்கள் ஊழியத்தை உரிய நேரத்தில் அறிக்கை செய்யாமல் அசட்டையாய் இருந்துவிடுகின்றனர். ‘கொஞ்ச நேரம் ஊழியம் செய்ததைப் போய் ஏன் அறிக்கை செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் நமக்கு ஒருபோதும் வரக்கூடாது. (மாற்கு 12:41-44-ஐ ஒப்பிடுக.) நாம் ஊழியத்தில் செலவழித்த நேரத்தை தவறாமல் அறிக்கை செய்வது அவசியம்! ஊழியத்தில் செலவழித்த நேரத்தை காலண்டரில் குறித்து வைக்கலாம்; இது போன்று வேறு ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்றலாம். இது ஒவ்வொரு மாதத்தின் கடைசியிலும் திருத்தமான அறிக்கையை தக்க சமயத்தில் போடுவதற்கு எப்போதும் நினைப்பூட்டும்.
4 தேவையான உதவியை அளியுங்கள்: ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்ள உதவி வேண்டுவோருக்கு கைகொடுக்கும் விதத்தில் சபை ஏற்பாடுகளில் மாற்றம் செய்வதும் தேவைப்படலாம். அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபிகள் உதவிக்கரம் நீட்ட, சபை செயலரும் புத்தகப் படிப்பு நடத்துனர்களும் ஏற்பாடு செய்யலாம். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக இருக்கும் உங்கள் பிள்ளைகளோ, பைபிள் மாணாக்கர்களோ சபையில் இருந்தால், ஒவ்வொரு மாதமும் தங்கள் ஊழியத்தை அறிக்கை செய்வதற்கு அவர்களைப் பயிற்றுவியுங்கள்.
5 “யெகோவாவின் சேவையில் நீண்ட வாழ்வுக்காக நன்றி” என்ற தலைப்பில் காவற்கோபுரம், அக்டோபர் 1, 1997-ல் வெளிவந்த வாழ்க்கை சரிதையை சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். 1921-ல் முழுக்காட்டுதல் எடுப்பதற்கு முன் நற்செய்தியின் ஒழுங்கான பிரஸ்தாபியாய் இருந்தார் நார்வேயைச் சேர்ந்த சகோதரி ஓட்டலி மிட்லென். எழுபத்தாறு வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய 99-ம் வயதில் “இன்னும் ஒரு ஒழுங்கான பிரஸ்தாபியாக என்னால் இருக்க முடிவதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்” என அவர் சொன்னார். யெகோவாவின் ஊழியர்கள் அனைவரும் பின்பற்றுவதற்கு என்னே சிறந்த மனப்பான்மை!