‘தகுதியை சோதித்தறிவது’ எப்படி?
1 யெகோவாவின் அமைப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதனால், உதவி ஊழியர்களாக சேவை செய்ய தகுதியுடைய சகோதரர்களுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரிக்கிறது. பெரும்பாலான சகோதரர்கள் இன்னும் உதவி ஊழியர்களாக நியமிக்கப்படவில்லை. ஆனால், சபையில் சேவை செய்ய இவர்களுக்கு விருப்பம் இருக்கிறது. இவர்களில் இளைஞரும் அடங்குவர். இவர்களுக்கு ஏதாவது வேலை கொடுக்கும்போது, பயனுள்ள ஒன்றை சாதித்தோம் என்ற மனநிறைவை பெறுகின்றனர். ‘தகுதியை சோதித்து’ அறிவதன் மூலம் இவர்கள் இதற்கு ஏற்றவர்களா என்பது தெரியும். (1 தீ. 3:10) எப்படி சோதித்தறிவது?
2 மூப்பர்களின் பங்கு: உதவி ஊழியருக்கான தகுதி என்னவென்று 1 தீமோத்தேயு 3:8-13 குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் ஒரு சகோதரர் உதவி ஊழியராவதற்குத் தகுதியானவரா என்பது தீர்மானிக்கப்படுகிறது. அதோடு, பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறாரா என்பதையும் மூப்பர்கள் சோதித்தறிவார்கள். பத்திரிகை மற்றும் புத்தக இலாகா, மைக்ரோஃபோன்களை கையாளுதல், ராஜ்ய மன்றத்தை பராமரித்தல் போன்றவற்றில் சிறுசிறு வேலைகளை அவருக்கு கொடுக்கலாம். இத்தகைய பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறாரா, நிறைவேற்றுகிறாரா என்பதை மூப்பர்கள் கவனிப்பார்கள். நம்பத்தகுந்தவராக, காலந்தவறாதவராக, கடுமையாக உழைப்பவராக, நிதானம் உள்ளவராக, மனமுவந்து வேலை செய்பவராக, எல்லாரோடும் சிநேகப்பான்மையுடன் பழகுபவராக இருக்கிறாரா என மூப்பர்கள் பார்ப்பார்கள். (பிலி. 2:20) உடை, சிகையலங்காரத்தில் முன்மாதிரியாக இருக்கிறாரா? பொறுப்புமிக்கவரா? இவற்றை ‘ஞானம் தரும் பணிவாலும் நன்னடத்தையாலும் . . . காட்டுகிறாரா’ என்பதை அவர்கள் கவனிப்பார்கள். (யாக். 3:13, பொ.மொ.) சபையில் பொறுப்புகளை ஏற்க உண்மையிலேயே அவருக்கு நாட்டம் இருக்கிறதா? ஊழியத்தில் ஆர்வத்தோடு கலந்துகொண்டு, “சீஷராக்குங்கள்” என்கிற இயேசுவின் கட்டளையை நிறைவேற்றுகிறாரா?—மத். 28:19; 1991, மே 1, காவற்கோபுரம் பிரதியில் பக். 10-20-ஐக் காண்க.
3 உதவி ஊழியராக நியமிக்கப்படுவதற்கு வயது வரம்பு ஏதும் இல்லை. இருந்தாலும், அப்படிப்பட்ட சகோதரர்களை “ஊழியம் செய்யும் புருஷர்” என பைபிள் குறிப்பிடுகிறது. எனவே, பத்து அல்லது பதினைந்து வயது சிறுவர்களை உதவி ஊழியர்களாக நிச்சயம் நாம் யோசிக்க மாட்டோம். ஏனென்றால், மனைவி மற்றும் பிள்ளைகளை உடையவர்களாக சொல்லப்படுகிறது. (1 தீ. 3:12, 13, NW) அப்படிப்பட்டவர்கள், “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு” இணங்கிப் போகக் கூடாது. விளையாட்டுத்தனமாக இல்லாமல் முதிர்ச்சியுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும். அதோடு, கடவுளுக்கு முன்பும் மனிதருக்கு முன்பும் சுத்தமான மனசாட்சியும் நற்பெயரும் உடையவராய் இருக்க வேண்டும்.—2 தீ. 2:22.
4 ஒருவருக்கு பிறவியிலேயே அமைந்திருக்கும் திறமைகள் பிரயோஜனமானவையே. இருந்தாலும், அவர் பொறுப்புகளை எப்படி ஏற்றுக்கொள்கிறார், எப்படி செய்கிறார் என்பது மிக முக்கியம். தன் சகோதரர்களுக்கு ஊழியம் செய்யவும் கடவுளைத் துதிக்கவும் வேண்டுமென்கிற தாழ்மை உள்ளம் உடையவராய் இருக்கிறாரா? அப்படியென்றால், சபையில் சிலாக்கியங்களைப் பெறுவதற்கு அவர் எடுக்கும் முயற்சிகளை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார்.