அதிக தேவை உள்ள இடத்தில் உங்களால் சேவை செய்ய முடியுமா?
1 ராஜ்ய அறிவிப்பாளர்கள் அதிகமாக தேவைப்படும் ஓரிடத்துக்கு செல்வதைப் பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? ‘வந்து உதவி செய்ய வேண்டும்’ என்று நீங்கள் அழைக்கப்பட்டால், அப்போஸ்தலன் பவுலைப் போலவே பிரதிபலிப்பீர்களா? (அப். 16:9, 10) அநேக சபைகளில், ஆவிக்குரிய முதிர்ச்சி உடைய குடும்பங்கள், பிராந்தியத்தில் ஊழியம் செய்து முடிப்பதற்கு பயனியர்கள், அல்லது முன்நின்று வழிநடத்த உதவும் தகுதிபெற்ற மூப்பர்கள், உதவி ஊழியர்கள் ஆகியோருக்கான தேவை இருக்கிறது. பெரிய நாட்டுப்புற பகுதிகளில் ஆங்காங்கே ஒதுக்கமான சிறிய நகரங்களை உடைய பிராந்தியமாக அது இருக்கலாம். மிகவும் அருகிலுள்ள ராஜ்ய மன்றமே அநேக கிலோமீட்டர் தொலைவில் இருக்கலாம். உலகப்பிரகாரமான வேலை வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கலாம். அவ்வளவு நல்ல வானிலை எப்போதுமே இல்லாதிருக்கலாம். அப்படியொரு சவாலை ஏற்க மனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? அதில் வெற்றி காண்பது எப்படி?
2 விசுவாசமும் நம்பிக்கையும் அவசியம்: ஆபிராம் கடவுளுடைய கட்டளைக்கு இசைவாக, தன் சொந்த பட்டணமாகிய ஊர் என்ற இடத்தை விட்டு, தன் மனைவியையும், தன் சகோதரனின் மகனையும், வயதான தகப்பன் தேராகையும் கூட்டிக்கொண்டு 1,000 கிலோமீட்டர் பயணம் செய்து ஆரானுக்கு போனார். (ஆதி. 11:31, 32; நெ. 9:7) தேராகு மரித்த பிறகு, 75 வயதாக இருந்த ஆபிராமிடம் ஆரானையும் தன் உறவினரையும் விட்டுவிட்டு தாம் காண்பிக்கிற தேசத்துக்கு போகும்படி யெகோவா சொன்னார். ஆபிராமும் சாராயும் லோத்தும் ‘புறப்பட்டுப் போனார்கள்.’ (ஆதி. 12:1, 4, 5) ஊழியக்காரருக்கான தேவை அதிகமாக இருந்த இடத்தில் சேவை செய்வதற்காக ஆபிராம் போகவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் அவர் இடம்மாறி போவதற்கு ஏதோ தேவைப்பட்டது. அது என்ன?
3 அப்படியொரு பொறுப்பை ஏற்க முற்படுவதற்கு விசுவாசமும் நம்பிக்கையும் அவசியப்பட்டது. அவருடைய சிந்தனையையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. உறவினர்களின் மத்தியிலிருந்த அந்த பாதுகாப்பை விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அவர் தன்னையும் தன் வீட்டாரையும் யெகோவா பார்த்துக் கொள்வார் என நம்பினார். இன்றும் அநேகர் யெகோவாவிடம் அதேவிதமான நம்பிக்கையை வெளிக்காட்டியிருக்கின்றனர்.
4 குறுகியகால நியமிப்புகள்: நியமிக்கப்படாத பிராந்தியத்தில் ஊழியம் செய்வதால் வரும் செழுமையான ஆசீர்வாதங்களை எப்போதாவது அனுபவித்திருக்கிறீர்களா? அவ்வாறு செய்தவர்கள், அதற்காக வெகு தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. அத்தனை முயற்சிக்கும் தகுந்த பலன் கிடைத்ததா?
5 கலிபோர்னியாவிலிருந்து உடாவுக்கு சென்ற ஒரு சகோதரர் இவ்வாறு எழுதினார்: “அடிக்கடி ஊழியம் செய்யப்படாத ஒரு பிராந்தியத்துக்கு ஒரு தொகுதியை வழிநடத்தி செல்லும்படி முதன்முதலாக என்னிடம் சொல்லப்பட்டபோது, நான் தயங்கினேன். ஆனாலும் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தேன். அதற்காக நான் ஒருபோதும் வருத்தப்படவில்லை. அதுமட்டுமல்ல, அது என் வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது. இந்த பயண சிலாக்கியத்தை பெற்றதற்காக தினமும் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்.” ஃப்ளாரிடாவிலிருந்து டென்னெஸீக்கு சென்ற ஒரு சகோதரர், சத்தியத்திலிருக்கும் 20 வருடங்களிலேயே தன் நினைவிலிருந்து நீங்காத மிகச் சிறந்த அனுபவம் அதுவே என்கிறார். கனெடிகட்டிலிருந்து மேற்கு வர்ஜீனியா சென்ற வாலிபன் சொல்வதாவது: “என் வாழ்விலே மிகச் சிறந்த அனுபவம் இதுதான்!” சில காலமாவது தேவை அதிகமிருக்கும் இடத்தில் சேவை செய்வது ஊழியத்திற்கான தங்கள் போற்றுதலை அதிகரித்திருக்கிறது என்பதை அநேக பிரஸ்தாபிகள் ஒத்துக்கொள்கிறார்கள். அவ்வாறு செய்திருப்பவர்களிடம் பேசிப் பாருங்கள். ஆவிக்குரிய விதத்தில் கட்டியெழுப்பப்பட்டார்கள் என்றும் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அதை செய்வார்கள் என்றும் அவர்கள் சொல்ல கேட்பீர்கள்.
6 தேவை அதிகமிருக்கும் இடத்தில் சேவை செய்வதற்கு தற்காலிகமாக போவது வேறொரு நோக்கத்தையும் நிறைவேற்றலாம். அவ்வாறு செய்கிறவர்கள், நாட்டின் இன்னொரு பாகத்துக்கு இடம்மாறி செல்கையில் ‘செல்லுஞ்செலவைக் கணக்குப்பார்க்க’ உதவும் பயனுள்ள தகவல்களை பெறலாம்.—லூக். 14:30.
7 முடிவு வருமுன் ‘பூலோகமெங்கும்’ நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும் என்று யெகோவா தீர்மானமாய் இருக்கிறார். (மத். 24:14) இதை அறிந்தவர்களாய், உங்களால் முடிந்தால், தேவை அதிகமுள்ள இடத்துக்கு போக நீங்கள் மனமுள்ளவர்களாய் இருப்பீர்களா? பல இடங்களில் தேவை இருக்கிறது.
8 தேவை அதிகமுள்ள இடத்துக்கு செல்லுதல்: நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவரா? நிலையான வருமானம் இருக்கிறதா? இல்லையென்றால், சுயவேலை வாய்ப்புக்கு வழி செய்ய முடியுமா? எந்த இடத்தில் இருந்துகொண்டும் தொலைபேசியையோ கம்ப்யூட்டரையோ பயன்படுத்தி பிழைத்துக் கொள்ள முடியுமா? நீங்கள் வேறு இடத்திற்கு மாறிப்போக முடியவில்லை என்றால், உங்கள் குடும்ப அங்கத்தினர் ஒருவர் வேறு எங்காவது சேவை செய்ய உதவ முடியுமா?
9 ஜெபசிந்தையோடு இந்த விஷயத்தைப் பற்றி யோசித்தப்பின் தேவை அதிகமிருக்கும் இடத்துக்கு குடிமாற உங்களால் முடியும் என்று நினைத்தால், உங்கள் குடும்பத்தாருடனும் சபை மூப்பர்களுடனும் கலந்தாலோசியுங்கள். பின்னர், ஒரு கடிதத்தை எழுதி சபை மூப்பர்களிடம் கொடுங்கள்; அப்போது அவர்கள் தங்களுடைய குறிப்புகளையும் சிபாரிசுகளையும் அதில் எழுதி கிளை அலுவலகத்துக்கு அனுப்ப முடியும்.
10 நீங்கள் எழுதும் கடிதத்தில் என்னென்ன குறிப்புகள் இருக்க வேண்டும்? உங்கள் வயது, முழுக்காட்டுதல் பெற்ற தேதி, சபையிலுள்ள பொறுப்புகள், மணமானவரா மணமாகாதவரா, வயது வராத பிள்ளைகள் இருக்கிறார்களா ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப எந்தெந்த மாநிலங்களில் சேவை செய்ய விரும்புவீர்கள் என்பதையும் குறிப்பிடுங்கள். உதாரணமாக, உஷ்ணமும் ஈரப்பதமும் மிக்க இடங்களில் உங்களால் வாழ முடியுமா? கடும் குளிரை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா? அதிக உயரத்திலுள்ள இடங்கள் உங்களுக்கு சௌகரியப்படுமா? உங்களுக்கு வேறு மொழிகள் ஏதாவது பேச தெரியுமா?
11 உங்களுக்கு ஆர்வமும் ஒரு முயற்சியில் இறங்கும் குணமும் இருக்கிறதா? தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்ய உங்கள் சூழ்நிலைகள் அனுமதிக்கின்றனவா? அப்படியானால், யெகோவாவை நம்புகிறவர்கள் சுயதியாக மனப்பான்மையை வெளிக்காட்டும்போது, அவர் எப்படி தொடர்ந்து செழுமையான ஆசீர்வாதங்களை அவர்கள்மீது பொழிகிறார் என்று பாருங்கள்!—சங். 34:8; மல். 3:10.