பிரசங்க வேலைக்கு அது ஒரு முட்டுக்கட்டையா?
1 அநேகர் வாழ்க்கையில் ரொம்ப பிஸியாக இருக்கிறார்கள். படுபிஸியாக இருப்பவர்களில் யெகோவாவின் சாட்சிகளும் அடங்குவர்—கடவுளுடைய வார்த்தையை படிப்பது, சபை கூட்டங்களில் கலந்து கொள்வது, வெளி ஊழியத்தில் கலந்து கொள்வது போன்ற பல வேலைகள் இருக்கின்றன. அதோடு, உலகப்பிரகாரமான வேலை, வீட்டு வேலை அல்லது பள்ளிப் பாடங்கள் என இன்னும் பல பொறுப்புகளிலும் நாம் பிஸியாக இருக்கிறோம். இவையெல்லாம் அதிக நேரத்தை எடுத்துக்கொள்பவை. முக்கியமாக குடும்பத் தலைவர்களுக்கு இது பெரிய சவால்.
2 பல இடங்களில் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமாக இருப்பதால், குடும்பத் தலைவர்கள் பணம் சம்பாதிக்க நாள் பூராவும் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியதாயிருக்கலாம். நேரத்தையும் சக்தியையும் உலகப்பிரகாரமான வேலைகளிலேயே செலவிட வேண்டியதாயிருப்பதால் பிரசங்க வேலைக்கு சிறிது நேரமே கிடைக்கிறது. பொருளாதார விதத்தில் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதால், ஊழியத்தில் குறைந்தளவு நேரமே செலவிட முடியும் என சிலர் நினைக்கலாம். (1 தீ. 5:8) வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளோடு சம்பந்தப்பட்ட அநேக பிரச்சினைகள் இருப்பது வாஸ்தவம்தான். ஆனால் உலகப்பிரகாரமான வேலை நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலைக்கு முட்டுக்கட்டையாகிவிட வேண்டிய அவசியமில்லை. (மாற். 13:10) ஆகவே, நம்முடைய உண்மையான சூழ்நிலையை ஆராய வேண்டியது அவசியம்.
3 உலக சூழ்நிலைகள் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதால், எதிர்பாரா நெருக்கடிகளை சமாளிக்க நிறைய சேமிக்க வேண்டும் என்பதை குறியாக வைத்து ஒரு குடும்பத் தலைவர் உலகப்பிரகாரமான வேலையிலேயே அதிக நேரத்தை செலவிட விரும்பலாம். (1 கொ. 7:31) உலகப்பிரகாரமான வேலையில் இன்னும் அதிக நேரம் செலவிடுவதால் கூடுதலான பொருளுடைமைகளோ அல்லது பொழுதுபோக்கு காரியங்களில் ஈடுபட அதிக வாய்ப்போ கிடைப்பதாக தோன்றலாம், ஆனால் ஆவிக்குரிய நாட்டங்களுக்கும் தவறாமல் கூட்டங்களுக்கு செல்வதற்குமுரிய நேரத்தை இப்படிப்பட்ட காரியங்களுக்காக செலவழிப்பது குடும்பத்தை அதிக மகிழ்ச்சியுள்ளதாகவும் திருப்தியானதாகவும் ஆக்கிவிடுமா? நிச்சயமாகவே நம்முடைய ஆவிக்குரிய தன்மைக்கு ஆபத்தான எதையும் தவிர்க்கவே விரும்புவோம். ‘பரலோகத்திலே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கும்’ படியும் ‘தேவனிடத்தில் ஐசுவரியவானாய்’ இருக்கும்படியும் சொன்ன இயேசுவின் ஆலோசனைக்கு கவனம் செலுத்துவதே ஞானமான போக்காகும்.—மத். 6:19-21; லூக். 12:15-21.
4 ராஜ்ய அக்கறைகளை முதலாவது தேடுங்கள்: எல்லாவற்றிற்கும் மேலாக ஆவிக்குரிய விஷயங்களை முதலிடத்தில் வைக்கும்படி இயேசு தம் சீஷர்களுக்குப் போதித்தார். “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்” என அவர்களை ஊக்குவித்தார். அவர் ஏன் அதைச் சொன்னார்? “இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்” என அவர் கூறினார். இதை நாம் உண்மையில் ஒப்புக்கொள்கிறோம் என்றால், இயேசு அடுத்து சொன்னவற்றை செய்வதற்கு எதுவும் முட்டுக்கட்டையாக இருக்காது: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் [தேவையான பொருளாதார காரியங்கள்] உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” நமக்குத் தேவையானவற்றை கடவுள் பார்த்துக்கொள்வார்! (மத். 6:31-33) பணம் சம்பாதிப்பதைக் குறித்த அளவுக்குமீறிய கவலையால், அல்லது சீக்கிரத்தில் கடந்துபோகும் இந்தக் காரிய ஒழுங்குமுறையில் வசதியாக வாழ வேண்டும் என்ற ஆசையால் உங்கள் கவனம் திசை திருப்பப்படுவதற்கு உண்மையில் இது சமயமல்ல.—1 பே. 5:7; 1 யோ. 2:15-17.
5 உலகப்பிரகாரமான வேலை செய்வதன் முக்கிய நோக்கமே ஒருவருக்கு பொருளாதார தேவைகளை அளிப்பதாகும். ஆனால் எந்தளவுக்கு நமக்குத் தேவை? அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.” இதைவிட நிறைய சம்பாதிக்க முயலுகிறோமா? அப்படியானால், பவுல் எச்சரித்த விளைவுகளைத்தான் நாம் அறுப்போம்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.” (1 தீ. 6:8, 9; மத். 6:24; லூக். 14:33) அளவுக்கு மிஞ்சிய ஆசை நமக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை நாம் எப்படி சொல்ல முடியும்?
6 உலகப்பிரகாரமான வேலையின் காரணமாக நாம் குறைந்தளவே வெளி ஊழியத்தில் கலந்துகொள்கிறோம், அல்லது நற்செய்தியின் நிமித்தம் தியாகங்களைச் செய்ய வேண்டிய அவசியத்தை உணராதிருக்கிறோம் என்றால், நாம் எவற்றிற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதை ஆராய வேண்டும். (எபி. 13:15, 16) நம் பிரசங்க வேலைக்கு இருக்கும் இந்த முட்டுக்கட்டையை நீக்குவதற்கு, மிகவும் எளிய வாழ்க்கை வாழ்வது பெரிதும் உதவியாக இருக்கும். நம்முடைய நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்துவதைக் குறித்ததில் ராஜ்ய அக்கறைகளே எப்போதும் முதலிடம் வகிக்க வேண்டும்.
7 உழைப்பு வீண்போவதில்லை: “ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்”வதற்கு பவுலின் வார்த்தைகள் எப்போதும் நம்மை உற்சாகப்படுத்துகின்றன. (1 கொ. 15:58, பொது மொழிபெயர்ப்பு) ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதும் சீஷராக்குவதுமே ‘ஆண்டவரின் பணியில்’ மிக முக்கியமான வேலை. (மத். 24:14; 28:19, 20) முடிந்தமட்டும் முழுமையாக பங்குகொள்வதற்கு, ஒவ்வொரு வாரமும் வெளி ஊழியம் செல்வதற்கு நேரத்தை திட்டமிட்டு, அந்த நேரத்தை வேறு எதற்கும் பயன்படுத்தாமலிருக்க முயற்சி செய்ய வேண்டும். (எபே. 5:15-17) அப்போது, உலகப்பிரகாரமான வேலையோ மற்ற எதுவுமோ உங்கள் ஊழியத்திற்கு முட்டுக்கட்டையாக இராது.
8 பிறரிடம் சத்தியத்தை பகிர்ந்து கொள்வதில் நம்மையே அளிக்க முன்வருகையில், கொடுப்பதால் வரும் மிகச் சிறந்த மகிழ்ச்சியை நாம் அனுபவிப்போம். (அப். 20:35) ‘[நம்] கிரியையையும் . . . தமது நாமத்திற்கென [நாம்] காண்பித்த அன்பையும் மறந்துவிடுகிறதற்குக் கடவுள் அநீதியுள்ளவரல்ல’ என்பதால் ராஜ்ய பிரசங்க வேலையில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் நாம் வருங்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கலாம்.—எபி. 6:10, திருத்திய மொழிபெயர்ப்பு.