“நேரம் எங்கே இருக்கிறது?”
1 நம்மில் அநேகர் அப்படித்தான் புலம்புகிறோம்; ஏனெனில் நமக்கு எப்போதும் தலைக்குமேல் வேலை இருக்கிறது. நம்மிடமுள்ள செல்வங்களிலேயே மிக அதிக மதிப்பு வாய்ந்ததும் மிக எளிதில் கடந்துசெல்வதும் நேரமே என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே கடவுளுடைய வார்த்தையை வாசிப்பது படிப்பது போன்ற, உண்மையிலேயே முக்கியமான காரியங்களுக்கென நேரத்தை நாம் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்?—பிலி. 1:10, NW.
2 இதற்கான முக்கிய வழி என்னவென்றால், அதிக நேரத்தைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிராமல், நமக்கிருக்கும் நேரத்திற்குள் எதையெல்லாம் செய்ய வேண்டுமென தீர்மானிப்பதே. நம் எல்லாருக்குமே ஒரு வாரத்தில் 168 மணிநேரமே உள்ளது; அதில் சுமார் 100 மணிநேரம் தூங்குவதற்கும் வேலை செய்வதற்கும் செலவிடப்படலாம். மீதமுள்ள மணிநேரத்தை நன்மை பெறுமாறு மிகச் சிறந்த வகையில் நாம் எப்படி பயன்படுத்த முடியும்? நாம் ‘ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போல் . . . காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டு, . . . கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ள’ வேண்டுமென எபேசியர் 5:15-17 சிபாரிசு செய்கிறது. அத்தியாவசியம் என்று யெகோவா சொல்லும் காரியங்களை செய்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை இது காட்டுகிறது.
3 நம் நாட்களை நோவாவின் நாட்களோடு இயேசு ஒப்பிட்டார். (லூக். 17:26, 27) அப்போது வாழ்ந்த மக்கள் வாழ்க்கையின் அன்றாட காரியங்களிலேயே மூழ்கியிருந்தார்கள். என்றாலும், பிரமாண்டமான ஒரு பேழையைக் கட்டவும் பிரசங்கிக்கவும் நோவா நேரத்தை கண்டுபிடித்தார். (எபி. 11:7; 2 பே. 2:5) எப்படி? கடவுளுடைய சித்தத்திற்கு முதலிடம் கொடுத்து, காரியங்களை ‘அப்படியே செய்து’ அவருக்குக் கீழ்ப்படிந்ததன் மூலமாகவே.—ஆதி. 6:22.
4 எதற்கு முதலிடம்? “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று இயேசு கூறினார். (மத். 4:4) ‘ஏற்ற வேளையில் [ஆவிக்குரிய] உணவுப் படியை’ ஒவ்வொரு வாரமும் நாம் பெறுகிறோம். (லூக். 12:42, NW) நாம் உண்மையிலேயே நன்மை பெறவேண்டுமானால், அவை அனைத்தையும் கிரகித்துக் கொள்வதற்காக தனிப்பட்ட வாசிப்பு, படிப்புக்கான நல்ல அட்டவணை தேவை. ஆவிக்குரிய உணவுக்கான நம் நன்றியுணர்வின் காரணமாக, அவற்றை ஃபாஸ்ட் ஃபுட்டைப் போல, அவசரத்தில் ஒருவர் வேக வேகமாக விழுங்கும் உணவைப்போல நாம் கருதுவதில்லை. அதற்குப் பதிலாக, ஆவிக்குரிய காரியங்களை படித்து மகிழ நேரமெடுத்துக்கொள்ள சரியான நன்றியுணர்வு நம்மை உந்துவிக்கிறது.
5 ஆவிக்குரிய உணவை உட்கொள்வது நித்திய ஜீவனுக்கு வழிநடத்தக்கூடும். (யோவா. 17:3) நம் தினசரி அட்டவணையில் அதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். பைபிளை அன்றாடம் வாசிப்பதற்கும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தயாரிப்பதற்கும் நேரத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியுமா? ஆம், நம்மால் கண்டுபிடிக்க முடியும். அப்போது, கடவுளுடைய சித்தத்தை தெரிந்து அதைச் செய்வதனால் வரும் “மிகுந்த பலன்” நமக்கு கிடைக்கும்.—சங். 19:7-11.