2002 “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு
1 “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.” (சங். 122:1) சங்கீதக்காரனின் இந்தக் கூற்றை ஆராய்கையில், (1) யெகோவாவை வணங்க வரும்படி அழைத்தபோது அவர் உணர்ந்த விதத்தையும், (2) உண்மை வணக்கத்தில் அதிக ஆர்வம்கொண்ட அவருடைய நல்ல நண்பர்களையும், (3) அழைப்பு விடுத்து, ஒன்றாக சேர்ந்து, கடவுளுடைய வீட்டிற்கு பயணம் செய்ய தேவைப்பட்டிருக்கும் திட்டமிடுதலையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
2 அடுத்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதை கேள்விப்பட்டதும் நமக்குள் எழும் உணர்ச்சிகளை சங்கீதக்காரனின் வார்த்தைகள் வெளிப்படுத்தவில்லையா? கடந்த மாநாடுகளில் அனுபவித்த சந்தோஷங்களையும் யெகோவாவை நேசிக்கும் சக ஊழியர்களோடு விசேஷ கூட்டத்தில் மீண்டும் கூடி வருவதையும் நினைக்கையில் நம் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. இந்தியாவில் 2002-2003-ல், “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மூன்று நாள் மாவட்ட மாநாடுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு செல்லவும் நமக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆவிக்குரிய விருந்திலிருந்து முழு பயனை அடையவும் திட்டமிட இதுவே சமயம்.
3 “உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்கார” வகுப்பு, இந்த மாநாட்டில் அளிக்க காலத்திற்கேற்ற ஆவிக்குரிய உணவை தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. (லூக். 12:42) கடந்த வருடங்களில் அநேக சிறிய மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன; இதனால் மாநாட்டில் கலந்துகொள்வது புதியவர்களுக்கு எளிதாக இருந்தது; அதோடு, யெகோவாவின் சாட்சிகள் பெருமளவில் கூடிவருவதை, நூற்றுக்கணக்கான சிறிய நகரங்களிலுள்ள பொது மக்கள் நன்கு கவனிக்க வாய்ப்பளித்தது. இந்த வருட மாநாடுகள், அநேக இடங்களிலிருந்து வரும் சாட்சிகளுடன் கூட்டுறவை அனுபவிப்பதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் பெரியளவில் நடத்தப்படும். தொலைதூர வடக்குப் பகுதிகளிலும், வடகிழக்கு பகுதிகளிலும் உள்ளவர்களுக்காக சிறியளவில் சில மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள போதிலும், ஒவ்வொரு சபையும் இந்தப் பெரிய மாநாடுகள் ஒன்றில் கலந்துகொள்ளும்படி நியமிக்கப்படும். பிரதிநிதிகள் தங்குவதற்கு வசதியான லாட்ஜ் அல்லது சத்திரம் போன்ற இடங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அதோடு, “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்ப”டுவதற்காக அநேக சகோதரர்கள் பல்வேறு இலாக்காக்களை ஒழுங்கமைக்க ஆரம்பித்துள்ளனர். (1 கொ. 14:40) நமது நன்மைக்காகவும் சௌகரியத்திற்காகவும் இத்தனை அநேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க, மாநாட்டிற்கு தயாராவதற்கு தனிநபர்களாக நாம் என்ன செய்யலாம்?
4 மூன்று நாட்களும் கலந்துகொள்ள இப்பொழுதே திட்டமிடுங்கள்: இந்த வருடம் பெரும்பாலான மாநாடுகள் தீபாவளி விடுமுறையின் போதும் டிசம்பர் விடுமுறை காலத்தின் போதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. எனினும் நியமிக்கப்பட்ட மாநாட்டில் முழுவதுமாக ஆஜராவதற்கும் பயணிப்பதற்கும் உங்கள் முதலாளியிடம் லீவு கேட்க வேண்டியிருக்கலாம். சில முதலாளிகள் “முரட்டுக்குணமுள்ளவர்க[ள்]” என்பதை யெகோவா அறிவார். (1 பே. 2:18) ஆனால், நம் மாநாடுகள் அதிமுக்கியமானவை என்பதால் நிகழ்ச்சிநிரல் அனைத்திலும் கலந்துகொள்ள ஊக்கமாய் முயல விரும்புகிறோம். இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி யெகோவாவிடம் ஜெபியுங்கள், நல்ல விளைவு ஏற்படும் வண்ணம் வழிநடத்த அவரிடம் கேளுங்கள்.—நெ. 2:4.
5 குடும்பத்தில் அனைவரும் கலந்துகொள்ள திட்டமிடுங்கள்: மாநாடு நடக்கும் நகருக்கு குடும்பமாக பயணப்பட்டு செல்வதற்கும் அங்கே தங்குவதற்கும் ஆகும் செலவு நம்மில் பலருக்கு கட்டுப்படி ஆகாது. பண அழுத்தத்தை சமாளிக்க கவனமாக திட்டமிடுவது உதவலாம். இப்போதிருந்து மாநாடு செல்லும் வரை ஒவ்வொரு குடும்ப அங்கத்தினருக்காகவும் தினமும் ஐந்து ரூபாயை மட்டும் நம்மால் ஒதுக்க முடிந்தால் அது பயணத்திற்கும் தங்குவதற்கும் ஆகும் செலவுக்குக் கைகொடுத்து உதவுவதை நாம் காண்போம்.—1 கொரிந்தியர் 16:2-ஐக் காண்க.
6 உங்கள் அறை வசதி தேவைகளுக்காக: உங்களுக்குத் தேவையான தகவலை அளிப்பதற்கும் மாநாட்டு நகரத்தில் தங்குமிடத்தைப் பெற உதவுவதற்கும் ஒவ்வொரு மாநாட்டிலும் ரூமிங் டிபார்ட்மென்ட் உள்ளது. தங்குமிடத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்வதற்கு வெகு முன்னதாகவே திட்டமிடுங்கள். உங்கள் சபையின் செயலரிடம் ரூம் ரிக்வெஸ்ட் படிவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். தேவையான தகவலைப் பூர்த்தி செய்த பின்பு அதை உங்கள் சபை செயலரிடம் கொடுங்கள்; அதை நீங்கள் கலந்துகொள்ளும் மாநாட்டிற்குரிய மாநாட்டு தலைமை செயலகங்களுக்கு அவர் அனுப்பி வைப்பார். அனுப்புகையில் எப்போதும் சுயவிலாசம் எழுதி, ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட கவரையும் அதோடு சேர்த்து அனுப்புங்கள். சத்திரம் போன்ற இடங்களில் ஒரு நபருக்கு ஒரு இரவுக்கு குறைந்தபட்சம் 50 ரூபாய் வாடகை தரவேண்டும். உங்களால் எவ்வளவு வாடகை கொடுக்க முடியும் என குறிப்பிடுகையில் தயவுசெய்து இதை நினைவில் வையுங்கள். நீங்கள் சகோதரர்களுடைய வீடுகளில் தங்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டால் தயவுசெய்து அங்குள்ள குடும்பத்தாரின் உபசரிப்பை அளவுக்குமீறி சாதகப்படுத்திக் கொள்ளாதீர்கள். அவர்கள் எதிர்ப்படும் கூடுதல் செலவை சமாளிக்க ஏதாவது விதத்தில் உதவுங்கள்.
7 சபையில் ஒரு நோட்டமிடுங்கள்: ஒரு சகோதரனோ சகோதரியோ சரீர அல்லது பொருளாதார தேவை காரணமாக மாநாட்டிற்கு வரமுடியாத நிலையில் இருப்பதை நாம் அறிந்தால் நம் அன்பில் ‘விரிவடைந்து’ அவர்களுக்கு உதவியளிக்க முடியுமா? (2 கொ. 6:12, 13, NW; உபா. 15:7) இந்த மனநிலையையே 2 கொரிந்தியர் 8:15-ல் பவுல் உற்சாகப்படுத்தினார். உங்களோடு சேர்ந்து மாநாட்டிற்கு பயணம் செய்யும்படி அப்படிப்பட்டவர்களை ஏன் அழைக்கக்கூடாது? அவர்கள் பயனியர்களாக இருந்தால் பயணிக்கையில் அநேக நல்ல அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம். அவர்கள் சபையிலிருக்கும் முதிர்வயதானவர்களாக இருந்தால் நீங்கள் கேள்விப்பட்டிராத அற்புதமான தேவராஜ்ய சரித்திரத்தை அறிந்திருக்கலாம். இந்தச் சகோதரர்களோடும் சகோதரிகளோடும் கூட்டுறவு கொள்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நன்மை அளிக்காதா? உங்களுடைய தாராள குணத்தை அவர்கள் பாராட்டுவார்கள், யெகோவாவும் நிச்சயம் பலனளிப்பார்.—நீதி. 28:27; மத். 10:42.
8 வாலண்டியராக முன்வந்து சேவை செய்யுங்கள்: மாநாடு நடைபெறவிருக்கும் நகரங்களில் மாநாட்டு இடத்தை தயார்படுத்துவதில் உதவுவதற்கு அங்குள்ள சபைகளுக்கு விசேஷ வாய்ப்புகள் உள்ளன. உங்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து “தெய்வீக போதனையால் ஐக்கியப்படுதல்” ஆங்கில வீடியோவை பார்த்துவிட்டு, திட்டமிடப்பட்டிருக்கும் பெரும் வேலையில் பங்கெடுக்க ஏன் தீர்மானிக்கக்கூடாது? கூடுதல் விடுமுறை தேவைப்பட்டாலும் அதனால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் விவரிக்கப்பட முடியாதவை. மாநாட்டின்போது இலாக்காக்கள் சுமுகமாக செயல்பட நூற்றுக்கணக்கான வாலண்டியர்களின் உதவியும் தேவைப்படும். அரங்கத்தில் உள்ள அட்டண்டன்ட்டுகள், இருக்கைகளை கண்டுபிடிப்பதில் உதவுகின்றனர். வணக்கத்திற்கான அந்த தற்காலிக இடத்தை முன்பிருந்ததைவிட சுத்தமாக விட்டுவருவதன் மூலம், சுத்தத்திற்கு நாம் பெற்றிருக்கும் நற்பெயரை தக்கவைத்துக் கொள்ளும் அரிய வாய்ப்பு சுத்தம் செய்யும் இலாக்காவுக்கு உள்ளது. நம் உதவி தேவைப்படும் இதுபோன்ற இலாக்காக்களுடன் நம்மால் ஒத்துழைக்க முடியுமா? உங்கள் சகோதரர்களோடு “ஒருமனப்பட்டு” சேவை செய்ய நீங்கள் முன்வருவீர்களா?—செப். 3:9.
9 நாம் செய்வதை மக்கள் உண்மையில் கவனிக்கிறார்களா? கடந்த வருட மாவட்ட மாநாட்டின்போது, 20 வருடங்களுக்கும் முன்பு யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்து பாதியில் நிறுத்திவிட்ட ஒருவர் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். பைபிள் படிப்பை மறுபடியும் ஆரம்பித்து, மீண்டும் கூட்டங்களுக்கு செல்ல நினைப்பதாக அவர் சில சாட்சிகளிடம் கூறினார். ஏன்? அந்த ஹோட்டலில் தங்கியிருந்தபோது சாட்சிகள் அவரை நடத்திய அன்புள்ள விதமே இதற்கு காரணம். “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” என்ற இயேசுவின் ஆலோசனையை நாம் பின்பற்றுவதை காணும் நம் பரலோக தகப்பன் எவ்வளவு பெருமிதம் கொள்வார்!—மத். 5:16.
10 யெகோவாவின் வணக்க ஸ்தலத்திற்கு செல்வதை சந்தோஷத்தோடு எதிர்பார்த்த தாவீது ராஜாவின் மனநிலையை நாமும் பிரதிபலிப்போமாக. நம் மாவட்ட மாநாடுகள் ஆவிக்குரிய உணவின் முக்கிய ஊற்றுமூலமாகவும் அன்பான கூட்டுறவிற்கான ஒப்பற்ற வாய்ப்பாகவும் இருக்கின்றன. ஆகவே, இந்த வருடம் நடைபெறவிருக்கும் “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மாவட்ட மாநாட்டின் மூன்று தினங்களிலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிக்கும்படி உற்சாகத்தோடு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.