ராஜ்ய மன்ற நூலகங்களுக்கான புதிய ஏற்பாடு
பல வருடங்களாக உலகமுழுவதும் உள்ள ராஜ்ய மன்றங்களில் இருக்கும் நூலகத்திலிருந்து சபைகள் பயனடைந்திருக்கின்றன; இவை முன்னர் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நூலகம் என்று அழைக்கப்பட்டன. முன்பெல்லாம் ஒவ்வொரு சபைக்கும் தனித்தனி நூலகம் இருக்க வேண்டும் என கருதப்பட்டது. இருந்தபோதிலும் இப்போது ஒரே ராஜ்ய மன்றத்தை பல சபைகள், குறிப்பாக பலதரப்பட்ட மொழி பேசும் சபைகள் பயன்படுத்துவதால், நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட, ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக, எல்லா புதிய பிரசுரங்களையும் கொண்ட ஒரே நூலகத்தை ஏற்பாடு செய்வதே நல்லது என தோன்றுகிறது. ஒரே ராஜ்ய மன்றத்தில் பல ஹால்கள் இருந்தால் அந்தந்த மொழி கூட்டங்கள் நடக்கும் ஹால்களில் அந்தந்த மொழியில் நூலகம் இருக்க வேண்டும்.
இந்த ஏற்பாடு, இடத்தையும் செலவையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலுமாக, இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சபைகளின் நூலகத்தை ஒன்றாக சேர்ப்பதால் இன்னும் மேம்பட்ட ஒரு நூலகம் உருவாக உதவும். மேலுமாக இது தேவைக்கு அதிகமாக இருக்கும் பிரசுரங்களை பாதுகாத்து வைத்து புதிய ராஜ்ய மன்றம் கட்டிய பின்பு அவற்றை பயன்படுத்த உதவியாக இருக்கும். ஒருவேளை ராஜ்ய மன்ற நூலகத்தில் கம்ப்யூட்டரில் பயன்படுத்தக்கூடிய உவாட்ச்டவர் லைப்ரரி சிடி-ராம் இருந்தால் அதனால் சிலர் பயனடையலாம்.
ஒவ்வொரு ராஜ்ய மன்ற நூலகத்திற்கும் ஒரு சகோதரர் நூலக காப்பாளராக செயல்படுவார்; அவர் தேவராஜ்ய ஊழியப் பள்ளி கண்காணிகளில் ஒருவராக இருப்பது விரும்பத்தக்கது. அவர் தேவையான பிரசுரங்களை அவ்வப்போது சேகரித்து வைப்பார்; அத்துடன் அந்த பிரசுரங்கள் ராஜ்ய மன்ற நூலகத்துக்கு சொந்தமானவை என்று தெரியும் வண்ணம் புத்தகத்தின் உள்ளே தெளிவாக குறித்தும் வைப்பார். குறைந்தது வருடத்திற்கு ஒரு முறையாவது நூலகத்தில் எல்லா புத்தகங்களும் சரியாக உள்ளனவா, நல்ல நிலையில் உள்ளனவா என்று பரிசோதிக்க வேண்டும். இந்த நூலகத்திலிருந்து எந்த பிரசுரத்தையும் ராஜ்ய மன்றத்தை விட்டு வெளியே எடுத்து செல்லக் கூடாது.
சபைக்கு வரும் அனைவரும் ராஜ்ய மன்ற நூலகத்தை அதிகம் போற்றுகிறார்கள். இந்த நூலகத்தை பாதுகாத்து, ‘தேவனை அறியும் அறிவைக் கண்டடைய’ இதை தொடர்ந்து பயன்படுத்துவன் மூலம் இந்த ஏற்பாட்டிற்கு தனிப்பட்ட விதமாக நாமும் மதிப்பு காட்டுவோமாக.—நீதி. 2:5.