‘முழுமையாக சாட்சி கொடுப்பதற்கு’ ஊக்கமாய் உழையுங்கள்
1 இயேசுவையும் இன்னும் அநேக பண்டைய உண்மையுள்ள ஊழியர்களையும் போலவே அப்போஸ்தலன் பவுல் நற்செய்தியை வைராக்கியத்துடன் பிரசங்கித்தார். சூழ்நிலை எப்படியிருந்தாலும் சரி, அவர் ‘முழுமையாக சாட்சி கொடுத்தார்.’ அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோதும், ‘தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, மிகுந்த தைரியத்துடனே [“பேச்சு சுயாதீனத்துடன்,” NW] தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விசேஷங்களை உபதேசித்துக் கொண்டிருந்தார்.’—அப். 28:16-31.
2 நாமும் எல்லா சந்தர்ப்பங்களிலும் ‘முழுமையாக சாட்சி கொடுப்பதற்கு’ ஊக்கமாய் உழைக்கலாம். அசெம்பிளிகளுக்கும் மாநாடுகளுக்கும் பயணம் செய்கையில் சந்திக்கும் ஜனங்களிடம் சாட்சி கொடுப்பதும் இதில் அடங்கும்.—அப். 28:23, NW; சங். 145:10-13.
3 சந்தர்ப்ப சாட்சி என்றால் என்ன? சந்தர்ப்ப சாட்சி என்பது ஏதோ திட்டமிடாதது போலவோ அவ்வளவாய் முக்கியமல்லாதது போலவோ, தற்செயலாக அல்லது நோக்கமின்றி கொடுக்கப்படும் சாட்சி அல்ல. அவ்வாறு ஏனோதானோவென்று சாட்சி கொடுப்பது நம் ஊழியத்திற்கு எவ்விதத்திலும் பொருந்தாது. பவுல் செய்ததைப் போலவே, சாட்சி கொடுப்பதன் மூலம் கடவுளுக்கு மகிமை சேர்ப்பது நமது முக்கியமான வேலைகளில் ஒன்று. ஆகவே இந்த வருடம் நாம் பயணம் செய்கையில் எங்கெல்லாம் சந்தர்ப்பம் வாய்க்கிறதோ அங்கெல்லாம் சாட்சி கொடுப்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். என்றாலும், மற்றவர்களை நாம் அணுகும் விதம் சந்தர்ப்ப வசம் என்று அழைக்கப்படுவதே பொருத்தமானது. ஏனெனில் அது சாவகாசமான, சிநேகப்பான்மையான, இயல்பான அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறை நல்ல பலன்களை தரலாம்.
4 சாட்சி கொடுக்க தயாரியுங்கள்: பவுல் ரோம் நகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது சாட்சி கொடுப்பதற்கு புதுப்புது சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டியிருந்தது. அவர் தங்கியிருந்த இடத்தில் இருந்துகொண்டே, அங்கிருந்த யூத மதத் தலைவர்களை வரவழைப்பதற்கு முன்முயற்சி எடுத்தார். (அப். 28:17) ரோம் நகரில் ஒரு கிறிஸ்தவ சபை இருந்தபோதிலும், அங்கிருந்த யூத சமுதாயத்தினர் கிறிஸ்தவ மார்க்கத்தைப் பற்றியே கேள்விப்படாமல் இருந்தது பவுலுக்குத் தெரிய வந்தது. (அப். 28:22; ரோ. 1:2, 3) ஆகவே இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் சளைக்காமல் ‘முழுமையாக சாட்சி கொடுத்தார்.’
5 நீங்கள் பயணிக்கும் போது யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அவ்வளவாய் தெரிந்திராத யாரையெல்லாம் சந்திக்க வாய்ப்பு உள்ளது என்பதை முன்கூட்டியே எண்ணிப் பாருங்கள். நாம் இலவசமாக பைபிள் படிப்பை நடத்துவதுகூட அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆகவே நீங்கள் பயணிக்கையில், இடை நிறுத்தங்களில், பெட்ரோல் பங்க்குகளில், கடைகளில், ஹோட்டல்களில் தங்குகையில், ரெஸ்ட்டாரன்ட்டுகளில் சாப்பிடுகையில், பொது வாகனங்களில் பயணிக்கையில் என எல்லா சமயங்களிலும் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்து காத்திருங்கள். எப்படி உரையாடலை துவங்குவது, எப்படி சுருக்கமாக சாட்சி கொடுப்பது என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். வரவிருக்கும் நாட்களில் உங்கள் அக்கம்பக்கத்தாரிடம், உறவினர்களிடம், உங்களுக்கு அறிமுகமானவர்களிடம் என உங்களால் முடிந்தவரை சந்தர்ப்ப சாட்சி கொடுத்து பழகிப் பாருங்களேன்.
6 சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையில் உங்களிடம் விதவிதமான பிரசுரங்கள் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட பிரசுரங்கள்? பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை வைத்துக் கொள்ளலாம். அதில் முதல் ஐந்து பாராக்களிலுள்ள விஷயங்களை எடுத்துச் சொல்லுங்கள். அவற்றில் பைபிளை வாசிப்பதற்கான வெவ்வேறு காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த துண்டுப்பிரதியின் கடைசியில் இலவசமான பைபிள் படிப்புக்கு விருப்பம் தெரிவித்து அனுப்புவதற்காக கூப்பன் இருப்பதை காட்டுங்கள். அதற்கு சம்மதம் தெரிவிக்கும் நபரை நீங்கள் சந்தித்தால் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளியுங்கள். பிற மொழி பேசும் ஆட்களை சந்திக்க வாய்ப்பிருப்பதால் அதை மனதில் கொண்டு எல்லா தேசத்தாருக்கும் நற்செய்தி என்ற ஆங்கில சிறு புத்தகத்தையும் வைத்திருங்கள். சாட்சி கொடுப்பதற்கு அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பக்கம் 2-ல் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் காரில் பயணம் செய்வதாக இருந்தால், வேறு சில முக்கிய பிரசுரங்களையும் எடுத்துச் செல்வது சௌகரியமாக இருக்கலாம். ராஜ்ய செய்தியில் உண்மையிலேயே ஆர்வம் காட்டும் ஆட்களுக்கு கொடுப்பதற்காக அவற்றை வைத்துக் கொள்ளலாம்.
7 உங்கள் தோற்றத்திலும் நடத்தையிலும் கவனம் தேவை: நம் நடத்தையும் ஆடை அணியும் விதமும் அலங்கரித்துக் கொள்ளும் விதமும் நம்மைப் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடாதவாறு, அல்லது யெகோவாவின் அமைப்புக்கு ‘விரோதமாய்ப் பேச’ இடம் கொடுக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். (அப். 28:22) அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும் மட்டுமின்றி, அதற்காக பயணிக்கும்போதும், நிகழ்ச்சிகள் முடிந்து ஓய்வாக இருக்கும்போதும் இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 1, 2002, காவற்கோபுரத்தில் பக்கம் 18, பாரா 14-ல் இவ்வாறு எச்சரிக்கப்பட்டிருந்தது: “நம்முடைய தோற்றம், எல்லாருடைய கவனத்தையும் இழுப்பதாக, மட்டுக்கு மீறியதாக, காம உணர்ச்சிகளை தூண்டுவதாக, கவர்ச்சியாக அல்லது படுஸ்டைலாக இருக்கக்கூடாது. . . . அதோடு, ‘தேவபக்தியை’ வெளிக்காட்டும் விதமாக நாம் உடுத்த வேண்டும். இது நம்மை யோசிக்க தூண்டவில்லையா? சபை கூட்டங்களுக்கு [அல்லது மாநாடுகளுக்கு] வரும்போது மட்டுமே நேர்த்தியாக உடுத்திக் கொண்டு மற்ற சமயங்களில் ஏனோதானோவென இருந்துவிடக் கூடாது. 24 மணிநேரமும் நாம் கிறிஸ்தவர்களாகவும் ஊழியர்களாகவும் இருப்பதால், நம்முடைய தனிப்பட்ட தோற்றம் கண்ணியத்தையும் மதிப்பையும் எப்போதும் வெளிப்படுத்த வேண்டும்.”—1 தீ. 2:9, 10.
8 நாம் அடக்கமாகவும் கண்ணியமாகவும் உடுத்த வேண்டும். இவ்வாறு நம் தோற்றமும் நடத்தையும் கடவுள் மீதுள்ள நம் விசுவாசத்தை எப்போதும் வெளிப்படுத்துகிற வகையில் இருந்தால் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க வாய்ப்பு வரும்போது, ‘ஓர் ஊழியருக்கு லட்சணமாக நான் உடுத்தவில்லையே, எப்படி சாட்சி கொடுப்பது’ என்று சங்கோஜப்பட மாட்டோம்.—1 பே. 3:15.
9 சந்தர்ப்ப சாட்சி பலன் தருகிறது: பவுல் ரோம் நகரில் வீட்டுக்காவலில் இரண்டு வருடம் வைக்கப்பட்டிருந்தபோது சாட்சி கொடுத்ததால் நல்ல பலன்களைக் கண்டார். “அவன் சொன்னவைகளைச் சிலர் விசுவாசித்தார்கள்” என்று லூக்கா அறிக்கை செய்தார். (அப். 28:24) ‘முழுமையாக சாட்சி கொடுத்ததற்கு’ கிடைத்த பலனின் மதிப்பு பற்றி பவுல் இவ்வாறு எழுதினார்: “எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன். அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி, சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.”—பிலி. 1:12-14.
10 கடந்த வருடம், மாவட்ட மாநாட்டில் அன்றைய நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிய ஒரு தம்பதியினருக்கு அருமையான ஓர் அனுபவம் கிடைத்தது. வெயிட்ரஸாக இருந்த பெண்மணியிடம் அவர்கள் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தனர். அவர்கள் அணிந்திருந்த மாநாட்டு பேட்ஜ் கார்ட் சம்பந்தமாக அவள் கேட்டபோது அவர்கள் சாட்சி கொடுத்தனர். அந்த மாநாடு பற்றியும் மனிதவர்க்கத்திற்கு பைபிள் அளிக்கும் நம்பிக்கை பற்றியும் அவளிடம் கூறினர். பிறகு பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை அவளிடம் கொடுத்து, இலவசமான பைபிள் படிப்பு பற்றி விளக்கினர். சாட்சிகள் தன்னை சந்திக்கும்படி அந்தப் பெண்மணி விரும்பினாள். தன் பெயரையும் விலாசத்தையும் அந்தத் துண்டுப்பிரதியின் கடைசியில் பூர்த்தி செய்து கொடுத்தாள். ‘முழுமையாக சாட்சி கொடுப்பதற்கு’ ஊக்கமாய் உழைப்பதன் மூலம் நீங்கள் இந்த வருடம் எவ்வாறு வெற்றி காணலாம்?
11 நற்செய்தி பரவ முழு ஆதரவளியுங்கள்: தன் வைராக்கியமான முன்மாதிரியை உடன் கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றனர் என்பதை பவுல் கேள்விப்பட்ட போது எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! பைபிள் சார்ந்த நம் நம்பிக்கையைக் குறித்து சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதன் மூலம் நற்செய்தி எங்கும் பரவ நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோமாக.
[கேள்விகள்]
1, 2.பவுல் நற்செய்தியை பிரசங்கித்தது சம்பந்தமாக எது உங்களை கவருகிறது, ‘முழுமையாக சாட்சி கொடுப்பதற்கு’ அவர் வைத்த முன்மாதிரியை நாம் எப்படி பின்பற்றலாம்?
3. சந்தர்ப்ப சாட்சி என்றால் என்ன?
4. தான் தங்கியிருந்த இடத்தில் இருந்தவாறே பவுல் எப்படி சாட்சி கொடுத்தார்?
5, 6. சந்தர்ப்ப சாட்சி கொடுக்க என்னென்ன சந்தர்ப்பங்கள் கிடைக்கலாம், அதை திறம்பட்ட விதத்தில் பயன்படுத்திக்கொள்ள எவ்வாறு நாம் தயாரித்துச் செல்லலாம்?
7, 8. பயணிக்கையிலும் ஓய்வாக இருக்கையிலும் நம் தோற்றத்தைக் குறித்தும் நடத்தையைக் குறித்தும் கவனமாக இருக்க என்ன எச்சரிப்புக்கு செவிசாய்க்க வேண்டும்?
9. ரோம் நகரில் சாட்சி கொடுத்தபோது பவுல் எவ்வாறு வெற்றி கண்டார்?
10. கடந்த வருடம் ஒரு தம்பதியினர் சாட்சி கொடுப்பதில் எவ்வாறு வெற்றி கண்டனர்?
11. ‘முழுமையாக சாட்சி கொடுப்பதன்’ மூலம் எங்கும் நற்செய்தி பரவ என்ன குணங்களை நம்மில் வளர்த்துக்கொள்ள வேண்டும்?
[பக்கம் 1-ன் பெட்டி]
சந்தர்ப்ப சாட்சிக்கென வைத்திருக்க வேண்டிய பிரசுரங்கள்
■ பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? (துண்டுப்பிரதி)
■ கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? (சிற்றேடு)
■ எல்லா தேசத்தாருக்கும் நற்செய்தி (சிறு புத்தகம்)
■ மற்ற முக்கிய பிரசுரங்கள்
[பக்கம் 4-ன் பெட்டி]
அவர்களை மறவாதீர்கள்!
யாரை? கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு அல்லது விசேஷ பேச்சுக்கு வந்திருந்த புதியவர்கள் அனைவரையும். இந்த வருட அசெம்பிளிகளுக்கும் மாநாடுகளுக்கும் வரும்படி அவர்களை அழைத்திருக்கிறோமா? கனிவோடு உற்சாகப்படுத்தினால் ஒருவேளை அவர்களில் அநேகர் வருவார்கள். இக்கூட்டங்களில் தெம்பூட்டும் கூட்டுறவையும் ஊக்கமூட்டும் ஆவிக்குரிய நிகழ்ச்சியையும் அனுபவிக்கையில், அவர்கள் யெகோவாவிடமும் அவருடைய அமைப்பிடமும் நெருங்கி வருவார்கள். அவர்களை அழைத்து, அதற்கு அவர்கள் எப்படித்தான் பிரதிபலிக்கிறார்கள் என்று பாருங்களேன். அவர்களுக்குத் தேவையான எல்லா விவரங்களையும் கொடுங்கள். நம் அசெம்பிளிகளும் மாநாடுகளும் நடைபெறவிருக்கும் தேதிகளையும், இவை நடக்கும் இடங்களுக்கு செல்வது பற்றிய தகவலையும், நிகழ்ச்சிகள் ஆரம்பித்து முடியும் நேரங்களையும் பற்றி கூறுங்கள். அத்துடன், ஏப்ரல் 2003 நம் ராஜ்ய ஊழியத்திலும், ஜூன் 8, 2003 விழித்தெழு! ஆங்கில பத்திரிகையின் பின் அட்டையிலும் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிநிரல் பற்றி அறிவிக்கப்பட்டுள்ள விஷயங்களையும் தெரிவியுங்கள்.