கடவுளின் பெயரை தெரியப்படுத்துதல்
1 கடவுளுடைய பெயரை முதன்முதல் தெரிந்துகொண்டபோது நீங்கள் எப்படி பிரதிபலித்தீர்கள்? அநேகர் இந்தப் பெண்ணைப் போலவே பிரதிபலித்தார்கள். அவள் சொல்கிறாள்: “பைபிளில் கடவுளுடைய பெயரை முதன் முதலில் பார்த்தபோது, நான் கண்ணீர்விட்டு அழுதேன். கடவுளுடைய தனிப்பட்ட பெயரை உண்மையில் அறிந்துகொள்ளவும் அதைப் பயன்படுத்தவும் முடியும் என்பதை அறிந்துகொண்டது என்னை மிகவும் நெகிழ வைத்தது.” அவளைப் பொறுத்தவரை, யெகோவாவை ஒரு நபராக அறிந்துகொண்டு அவரோடு ஓர் உறவை வளர்த்துக்கொள்வதற்கு அது ஒரு முக்கிய படியாக இருந்தது.
2 ஏன் தெரியப்படுத்த வேண்டும்? கடவுளுடைய பெயரை தெரிந்திருப்பது, அவரது பண்புகளையும், நோக்கங்களையும், செயல்களையும் தெரிந்திருப்பதை குறிக்கிறது. இரட்சிக்கப்படுவதற்கும் அப்பெயரை தெரிந்திருப்பது மிக முக்கியம். “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். ஆனால், முதலில் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்டு அவரை விசுவாசியாதவர்கள் “எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்?” என்று அவர் கேட்டார். ஆகவே கடவுளுடைய பெயரையும் அது அர்த்தப்படுத்தும் அனைத்தையும் கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டியது மிக அவசரம். (ரோ. 10:13, 14) என்றாலும், கடவுளுடைய பெயரை தெரியப்படுத்துவதற்கு இன்னொரு முக்கிய காரணம் உள்ளது.
3 கடவுளுடைய அரசுரிமை நியாய நிரூபணம் செய்யப்படுவதையும், அவருடைய பெயர் பரிசுத்தப்படுத்தப்படுவதையும் உட்படுத்தும் சர்வலோக விவாதம் தொடர்பான வசனங்களை கடவுளுடைய ஜனங்கள் 1920-களில் பகுத்துணர்ந்தார்கள். யெகோவாவின் பெயர்மீது குவிக்கப்பட்டுள்ள நிந்தைகளை நீக்குவதற்காக துன்மார்க்கரை அழிப்பதற்கு முன்பு, அவரைப் பற்றிய சத்தியம் ‘பூமியெங்கும் அறியப்பட’ வேண்டும். (ஏசா. 12:4, 5; எசே. 38:23) ஆகவே, நாம் பிரசங்கிப்பதற்கு மிக முக்கிய காரணம், யெகோவாவை யாவரும் அறியும் வகையில் துதிப்பதும் எல்லா மனுஷருக்கு முன்பாகவும் அவருடைய பெயரை பரிசுத்தப்படுத்துவதுமே ஆகும். (எபி. 13:15) கடவுளிடமும் அயலாரிடமும் உள்ள அன்பு கடவுள் கொடுத்துள்ள இந்த வேலையில் முழுமையாய் பங்கேற்க நம்மை உந்துவிக்கும்.
4 ‘தமது நாமத்திற்காக ஒரு ஜனம்’: யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை 1931-ல் நாம் ஏற்றுக்கொண்டோம். (ஏசா. 43:10) அதுமுதல், கடவுளுடைய பெயரை எங்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம். எந்தளவுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள அறிவிப்போர் (ஆங்கிலம்) புத்தகத்தில் பக்கம் 124-ல் சொல்லப்பட்டுள்ள குறிப்பை கவனியுங்கள்: “உலகளவில், யெகோவாவின் பெயரை தாராளமாய் பயன்படுத்தும் எவரையும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக அடையாளம் கண்டுகொள்கின்றனர்.” உங்களையும் மற்றவர்கள் இவ்வாறு அடையாளம் கண்டுகொள்கின்றனரா? யெகோவாவின் நற்குணத்திற்கான நன்றியுணர்வு, ‘அவருடைய பெயரை ஸ்தோத்திரிக்க’ நம்மைத் தூண்டும், அதாவது பொருத்தமான எல்லா சந்தர்ப்பத்திலும் அவரைப் பற்றி பேசும்படி நம்மைத் தூண்டும்.—சங். 20:7; 145:1, 2, 7.
5 ‘தமது நாமத்திற்காக ஒரு ஜனமாக’ நாம் இருப்பதால் கடவுளுடைய தராதரங்களை நாம் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். (அப். 15:14; 2 தீ. 2:19) யெகோவாவின் சாட்சிகள் என்றதுமே அவர்கள் நடத்தையைத்தான் ஜனங்கள் முதலில் கவனிப்பார்கள். (1 பே. 2:12) ஆகவே தெய்வீக நியமங்களை அவமதிக்கும் வகையிலோ, நம் வாழ்க்கையில் அவருடைய வணக்கத்தை ஒதுக்கித்தள்ளி அதற்கு இரண்டாம் இடத்தை கொடுக்கும் வகையிலோ நடந்துகொண்டு, அவருடைய பெயரை பரிசுத்தக் குலைச்சலாக்க நாம் விரும்ப மாட்டோம். (லேவி. 22:31, 32; மல். 1:6-8, 12-14) அதற்கு மாறாக, கடவுளுடைய பெயரை தரித்தவர்களாயிருக்கும் பெரும் பாக்கியத்தை பொக்கிஷமாக கருதுகிறோம் என்பதை நாம் வாழும் முறையில் காட்டுவோமாக.
6 யெகோவாவின் பின்வரும் அறிவிப்பு நிறைவேற்றமடைவதை நாம் காண்கிறோம்: “சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்.” (மல். 1:11) யெகோவாவைப் பற்றிய சத்தியத்தை யாவருக்கும் தொடர்ந்து தெரியப்படுத்துவோமாக; இவ்வாறு “அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரி”ப்போமாக.—சங். 145:21.
[கேள்விகள்]
1. கடவுளின் பெயரை தெரிந்துகொள்கையில் ஜனங்கள் எவ்வாறு பிரதிபலிக்கலாம்?
2. யெகோவாவைப் பற்றி நாம் மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டியது ஏன் மிக அவசரம்?
3. நாம் பிரசங்கிக்க மிக முக்கிய காரணம் என்ன?
4. கடவுளுடைய பெயரை வைத்து யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளப்பட்டிருக்கின்றனர்?
5. கடவுளுடைய பெயரை தரித்தவர்களாயிருப்பதில் நம் நடத்தை எவ்வாறு உட்பட்டுள்ளது?
6. இன்றும் என்றும் நமக்கு என்ன பாக்கியம் இருக்கிறது?