யெகோவாவின் நற்குணத்தை பின்பற்றுங்கள்
1 உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சூரிய அஸ்தமனத்தைக் கண்டு ரசித்த பின்பு அல்லது அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்த பின்பு, எல்லா நன்மைகளையும் வாரி வழங்கும் நற்குணத்தின் பிறப்பிடமாகிய யெகோவாவுக்கு நன்றி சொல்ல நம் நெஞ்சங்கள் நெகிழ்கின்றன அல்லவா? அவருடைய நற்குணமே அவரைப் பின்பற்ற நம்மை தூண்டுகிறது. (சங். 119:66, NW, 68; எபே. 5:1) நற்குணம் என்ற பண்பை நாம் எப்படி வெளிக்காட்டலாம்?
2 சத்தியத்தில் இல்லாதவர்களிடம்: யெகோவாவின் நற்குணத்தை நாம் வெளிக்காட்டுவதற்கு ஒரு வழி, சத்தியத்தில் இல்லாதவர்களிடம் உண்மையான அக்கறை காட்டுவதாகும். (கலா. 6:10) நடைமுறையான அநேக வழிகளில் நற்குணத்தை காட்டுவது, யெகோவாவின் சாட்சிகளாகிய நம்மையும் நாம் சொல்லும் செய்தியையும் பற்றி அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படலாம்.
3 உதாரணமாக, பயனியராயிருந்த ஓர் இளம் சகோதரர் சிகிச்சை பெற ஓர் ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தார்; வெயிட்டிங் ரூமில் வயதான ஓர் அம்மா அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்; அங்கிருந்த மற்றவர்களைவிட அந்த அம்மா ரொம்பவே சுகவீனமாக தெரிந்தார். டாக்டரைப் பார்க்க தன் முறை வந்தபோது சகோதரர் அந்த அம்மாவை முதலில் போக சொன்னார். சிலநாள் கழித்து இருவரும் மார்க்கெட்டில் சந்திக்க நேர்ந்தபோது, அந்த அம்மாவுக்கு சந்தோஷம் தாளவில்லை. அதற்கு முன்பெல்லாம் நற்செய்தியை அலட்சியம் செய்து வந்த அவர், இந்த சம்பவத்திற்குப் பின்பு, யெகோவாவின் சாட்சிகள் உண்மையிலேயே தங்கள் அயலாரை நேசிப்பவர்கள் என்பதை தான் அறிந்துகொண்டதாக தெரிவித்தார். அவருக்கு ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
4 சத்தியத்தில் இருப்பவர்களிடம்: சத்தியத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய முன்வருகையிலும் நாம் யெகோவாவின் நற்குணத்தை வெளிக்காட்டுகிறோம். பேரழிவு ஏற்படும் சமயங்களில், நம் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய நாம் ஓடோடி செல்பவர்களாக இருக்கிறோம். கூட்டங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி தேவைப்படுபவர்களுக்கு உதவுகையிலும், வியாதிப்பட்டவர்களை பார்க்க செல்கையிலும், சபையில் நன்கு அறிமுகமாகியிராதவர்களிடம் பாசத்துடன் பழக ஆரம்பிக்கும் சமயத்திலும் இதே மனப்பான்மையைக் காட்டுகிறோம்.—2 கொ. 6:11-13, NW; எபி. 13:16.
5 யெகோவா தம் நற்குணத்தைக் காட்டும் மற்றொரு வழியானது, ‘மன்னிக்க தயாராக’ இருப்பதாகும். (சங்கீதம் 86:5, NW) நாமும் அவரைப் பின்பற்றி மற்றவர்களை மன்னிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்; இவ்வாறு நற்குணத்தை விரும்புகிறோம் என்பதை வெளிக்காட்டலாம். (எபேசியர் 4:32, NW) உடன் விசுவாசிகளுடன் நம் கூட்டுறவு ‘நன்மையும் இன்பமுமாய் இருக்க’ இது உதவுகிறது.—சங். 133:1-3.
6 யெகோவாவின் அளவற்ற நற்குணமானது, அவருக்கான துதி நம் நெஞ்சத்தில் பொங்கி வழியவும், மகிழ்ச்சி ஒளி நம்மில் பிரகாசிக்கவும் செய்வதாக. அதோடு, நாம் எதைச் செய்தாலும் அவருடைய நற்குணத்தைப் பின்பற்ற கடினமாய் முயல அது நம்மை தூண்டுவதாக.—சங். 145:7; எரே. 31:12.