மெய் கிறிஸ்தவ ஒற்றுமை—எவ்வாறு?
1 உலகெங்கும் 234 நாடுகளில் சுமார் 380 மொழி பேசும் தொகுதியினரை, அதாவது அறுபது லட்சத்துக்கும் அதிகமானவர்களை ஒன்றுபடுத்துவது எது? யெகோவா தேவனின் வணக்கமே. (மீ. 2:12; 4:1-3) இன்று மெய் கிறிஸ்தவ ஒற்றுமை நிஜமானது என்பதை யெகோவாவின் சாட்சிகள் அனுபவத்தில் அறிந்திருக்கிறார்கள். ‘ஒரே மேய்ப்பனின்’ கீழுள்ள ‘ஒரே மந்தையாக’ நாம், இவ்வுலகின் பிரிவினை உண்டாக்கும் மனப்பான்மையை எதிர்க்க திடத்தீர்மானமாய் இருக்கிறோம்.—யோவா. 10:16; எபே. 2:2.
2 புத்திக்கூர்மையுள்ள எல்லா சிருஷ்டிகளும் மெய் வணக்கத்தில் ஒன்றுபட வேண்டுமென்பதே அன்றும் இன்றும் கடவுளுடைய நோக்கம். (வெளி. 5:13) இதன் முக்கியத்துவத்தை அறிந்த இயேசு தம்முடைய சீஷர்களின் ஒற்றுமைக்காக உருக்கமாய் ஜெபித்தார். (யோவா. 17:20, 21) ஆகவே, கிறிஸ்தவ சபையின் ஒற்றுமைக்கு நாம் ஒவ்வொருவரும் எப்படி பங்களிக்கலாம்?
3 எவ்வாறு ஒற்றுமையாய் இருக்க முடிகிறது: கடவுளுடைய வார்த்தையும், அவருடைய ஆவியும் இல்லாமல் இருந்திருந்தால் கிறிஸ்தவ ஒற்றுமை எட்டாக் கனியாகவே இருந்திருக்கும். நாம் பைபிளிலிருந்து கற்றுக்கொள்பவற்றைக் கடைப்பிடிக்கும்போது கடவுளுடைய ஆவி நம்முடைய வாழ்க்கையில் தங்கு தடையின்றி செயல்படுகிறது. இதுவே ‘சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ள’ நமக்கு உதவுகிறது. (எபே. 4:3) அன்புடன் ஒருவருக்கொருவர் பொறுத்துப் போக தூண்டுவிக்கிறது. (கொலோ. 3:13, 14; 1 பே. 4:8) ஆகவே, ஒவ்வொரு நாளும் கடவுளுடைய வார்த்தையைத் தியானிப்பதன் மூலம் ஒற்றுமையின் வளர்ச்சிக்கு நீங்கள் பாடுபடுகிறீர்களா?
4 பிரசங்கித்து, சீஷராக்கும்படி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பும் நம்மை ஒற்றுமைப்படுத்துகிறது. மற்றவர்களுடன் சேர்ந்து கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபடும்போது “நற்செய்தியின் விசுவாசத்திற்காக ஒன்றாகப் போரா”டுகையில் ‘நாம் சத்தியத்தில் உடன் வேலையாட்களாய்’ ஆகிறோம். (பிலி. 1:27; 3 யோ. 8; NW) இவ்வாறு, சபைக்குள்ளாக அன்பின் ஐக்கிய கட்டுகள் பலப்படுகின்றன. சமீபத்தில் நீங்கள் எவருடன் சேர்ந்து ஊழியம் செய்யவில்லையோ அப்படிப்பட்ட ஒருவருடன் சேர்ந்து ஏன் இந்த வாரம் ஊழியம் செய்யக்கூடாது?
5 இன்று பூமியிலுள்ள ஒரே மெய்யான சர்வதேச சகோதரத்துவத்தின் பாகமாக இருப்பதற்கு நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்! (1 பே. 5:9) சமீபத்தில், “தேவனை மகிமைப்படுத்துங்கள்” சர்வதேச மாநாடுகளில் ஆயிரக்கணக்கானோர் இந்த உலகளாவிய ஒற்றுமையைக் கண்கூடாக கண்டார்கள். ஒவ்வொரு நாளும் கடவுளுடைய வார்த்தையை வாசிப்பது, அன்பான விதத்தில் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வது, ‘ஏகசிந்தையுடன்’ நற்செய்தியைப் பிரசங்கிப்பது ஆகியவற்றின் மூலம் நாம் ஒவ்வொருவரும் இந்த அருமையான ஒற்றுமைக்குப் பங்களிப்போமாக.—ரோ. 15:6.