நேரத்தை வெகு கவனமாய் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
1 நேரத்தையும் வேலையையும் மிச்சப்படுத்தும் சாதனங்கள் மலைபோல் குவிந்திருக்கும் இந்த யுகத்தில், வேலையோ அதிகம் நேரமோ குறைவு என்பதுபோல் அநேகர் உணருவதாக தெரிகிறது. ஆவிக்குரிய காரியங்களை உரிய நேரத்தில் சிறப்பாக செய்வது உங்களுக்கு சிரமமாக தோன்றுகிறதா? ஊழியத்திற்கு நேரம் போதவில்லையே என்று ஆதங்கப்படுகிறீர்களா? நமக்கிருக்கும் நேரத்தை மிகச் சிறந்த விதத்தில் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது?—சங். 90:12; பிலி. 1:9-11, NW.
2 நேரத்தை விழுங்கும் காரியங்களை கண்டுபிடியுங்கள்: நமக்கிருக்கும் நேரத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை அவ்வப்போது நாம் அனைவருமே பரிசோதிக்க வேண்டும். பைபிள் பின்வருமாறு அறிவுறுத்துகிறது: “ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போல் கவனமாய் நடந்துகொள்ளப் பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.” (எபே. 5:15, 16) தகவல் தொழில்நுட்பம் பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளதால் அநேக சிரமங்கள் ஏற்படுகின்றன என்பதை மனதில் வையுங்கள். கம்ப்யூட்டர்களும் பிற எலக்ட்ரானிக் சாதனங்களும் ஓரளவு பயனுள்ளவையாய் இருந்தாலும், நம் நேரத்தை எப்படி செலவிடுகிறோம் என்பதில் நாம் வெகு கவனமாக இராவிடில் அவை ஒரு கண்ணியாக மாறிவிடலாம்.—1 கொ. 7:29, 31.
3 நாம் ஒவ்வொருவரும் பின்வருமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘பிரயோஜனமே இல்லாத ஈ-மெயில் செய்திகளை வாசிப்பதற்கு அல்லது பதில் அனுப்புவதற்கு ஒவ்வொரு நாளும் நேரம் செலவிடுகிறேனா? சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஃபோன் செய்வதும் எலக்ட்ரானிக் செய்தி அனுப்புவதுமே என் வேலையாகிவிட்டதா? (1 தீ. 5:13) நோக்கம் இல்லாமல் இன்டர்நெட்டில் பிரௌசிங் செய்கிறேனா, அல்லது டிவி பார்க்கையில் மனம் போல் சேனல் மாற்றி சேனலாக பார்க்கிறேனா? எப்பொழுதும் எலக்ட்ரானிக் கேம்ஸ் விளையாடுவதிலேயே குறியாக இருப்பதால் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கு நேரமே இல்லாமல் போய்விடுகிறதா?’ அப்படிப்பட்ட காரியங்கள் நம் ஆவிக்குரிய தன்மையை தந்திரமாக அழித்துவிடலாம்.—நீதி. 12:11.
4 நேரத்தை ஞானமாக பயன்படுத்துதல்: எலக்ட்ரானிக் சாதனங்கள் நம் நேரத்தையும் கவனத்தையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. நாளெல்லாம் கம்ப்யூட்டர் கேம்ஸிலேயே பொழுதைக் கழித்த ஓர் இளைஞர் இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “சில சமயங்களில், நான் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடிவிட்டு ஊழியத்திற்கோ கிறிஸ்தவ கூட்டத்திற்கோ கிளம்பிப் போகும்போது, என்னால் சரியாக கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறேன். வீடு திரும்பினால் இன்னும் எப்படி நல்லா விளையாடலாம் என யோசித்து யோசித்தே நேரத்தை வீணடித்திருக்கிறேன். இதனால் என்னுடைய தனிப்பட்ட படிப்பும் பைபிள் வாசிப்பும் பாதிக்கப்பட்டன. கடவுளை சேவிப்பதில் எனக்கிருந்த மகிழ்ச்சியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.” மாற்றங்கள் செய்தே ஆக வேண்டுமென்று உணர்ந்ததால் அவர் தன்னிடமிருந்த எல்லா கம்ப்யூட்டர் கேம்ஸுகளையும் அழித்துவிட்டார். “அது ரொம்ப ரொம்ப சிரமமாக இருந்தது” என்று நினைவுபடுத்தி சொல்கிறார். “கேம்ஸில் இந்தளவுக்கு பைத்தியமாகிவிடுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் நான் செய்ததெல்லாம் என் நன்மைக்குத்தான் என்பதை அறிந்திருந்ததால் எதையோ பெரிதாக சாதித்துவிட்ட திருப்தியும் எனக்குக் கிடைத்தது.”—மத். 5:29, 30.
5 அதுபோன்ற பழக்கங்கள் ஏதாவது உங்களிடம் இருந்தால் அப்படிப்பட்ட மாற்றங்களை செய்வது அவசியமாய் இருக்கலாம். ஒவ்வொரு நாளும் அரை மணிநேரத்தை தேவையற்ற காரியங்களிலிருந்து வாங்க முடியுமா? அவ்வாறு செய்தால் ஒரு வருடத்தில் பைபிள் முழுவதையும் வாசித்து முடித்து விடலாம். அது ஆவிக்குரிய வகையில் எத்தனை புத்துணர்ச்சியளிப்பதாய் இருக்கும்! (சங். 19:7-11; 119:97-100) குறிப்பிட்ட நேரத்தில் பைபிள் வாசிக்கவும், கூட்டத்திற்கு தயாரிக்கவும், வெளி ஊழியத்திற்கு செல்லவும் திட்டமிடுங்கள். (1 கொ. 15:58) இவ்வாறு செய்வது, நேரத்தை விழுங்கும் காரியங்களை இனம் கண்டுகொண்டு அவற்றைத் தவிர்க்க உதவும். ‘கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளவும்’ உதவும்.—எபே. 5:17.
[கேள்விகள்]
1. எங்கும் மக்கள் என்ன சிரமத்தை இன்று எதிர்ப்படுகிறார்கள்?
2, 3. தகவல் தொழில்நுட்பத்தால் என்ன சிரமங்கள் ஏற்படுகின்றன, நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே எவ்வாறு சுயபரிசோதனை செய்துகொள்ளலாம்?
4. ஓர் இளைஞர் என்ன மாற்றம் செய்தார், ஏன்?
5. ஆவிக்குரிய காரியங்களுக்கென நாம் நேரத்தை எப்படி வாங்குவது, அவ்வாறு செய்வதால் கிடைக்கும் பயன் என்ன?