உறவினர்களுக்குச் சாட்சி கொடுப்பது எப்படி?
1 யெகோவாவின் வணக்கத்தில் நம் அன்பானவர்களோடு ஐக்கியப்பட்டவர்களாய் புதிய உலகிற்குள் நுழைவதைக் காட்டிலும் பெரிய சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்! உறவினர்களுக்குச் சாட்சி கொடுப்பதன் மூலம் இந்தச் சந்தோஷமான எதிர்பார்ப்பை நிஜமாக்கலாம். என்றாலும், அதைப் புத்துணர்ச்சியூட்டும் விதத்தில் செய்ய பகுத்துணர்வு தேவை. “உறவினர்களுடைய ஆர்வத்தைத் தட்டியெழுப்புகிற விதத்தில் அவ்வப்போது சாட்சி கொடுக்கிறவர்கள் சிறந்த பலன்களைப் பெற்றிருக்கிறார்கள்” என ஒரு வட்டார கண்காணி குறிப்பிட்டார். நாம் எவ்வாறு இதைச் செய்யலாம்?
2 ஆர்வத்தைத் தட்டியெழுப்புங்கள்: உறவினர்களுடைய ஆவலை எவ்வாறு தூண்டலாம் என்பதைக் குறித்து முன்கூட்டியே கவனமாக யோசியுங்கள். (நீதி. 15:28) அவர்கள் எதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்? என்ன பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள்? அவர்கள் அதிக அக்கறை காட்டும் விஷயத்தைப் பற்றிய ஒரு கட்டுரையையோ, பொருத்தமான வசனத்தையோ நீங்கள் ஒருவேளை அவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். உறவினர்கள் வெகு தூரத்தில் வசிக்கும் பட்சத்தில், கடிதம் அல்லது தொலைபேசி மூலம் இதைச் செய்யலாம். அவர்களைத் திணறடிக்காத விதத்தில் சத்திய விதைகளை விதையுங்கள், பிறகு அவற்றை விளையச் செய்யும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்.—1 கொ. 3:6.
3 பிசாசு பிடித்திருந்த ஒரு மனிதனைக் குணமாக்கிய பின்பு, இயேசு அவனிடம் இவ்விதமாக கூறினார்: “நீ உன் இனத்தாரிடத்தில் [அதாவது, உறவினரிடத்தில்] உன் வீட்டிற்குப் போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவி.” (மாற். 5:19) அவனுடைய உறவினர்களிடம் அது எப்பேர்ப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! இப்படிப்பட்ட அசாதாரணமான அனுபவங்கள் நமக்கு இல்லாதிருந்தாலும், நம்முடைய மற்றும் நம் பிள்ளைகளுடைய நடவடிக்கைகளைக் குறித்து பொதுவாக நம் உறவினர்கள் ஆர்வமுடையவர்களாகவே இருப்பார்கள். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நீங்கள் கொடுத்த ஒரு பேச்சு, நீங்கள் கலந்து கொண்ட மாநாடு, பெத்தேலுக்கு விஜயம் செய்தது, அல்லது ஒரு தனிப்பட்ட இலக்கை எட்டியது போன்றவற்றைப் பற்றி குறிப்பிடுவது, யெகோவா மற்றும் அவரது அமைப்பைப் பற்றி அவர்களிடம் கூடுதலாக சொல்வதற்கு வழியைத் திறந்து வைக்கலாம்.
4 பகுத்துணர்வுள்ளவர்களாக இருங்கள்: உறவினர்களிடம் சாட்சி கொடுக்கையில் ஒரே நேரத்தில் அளவுக்கதிகமாக சொல்வதைத் தவிருங்கள். தான் பைபிள் படிக்க ஆரம்பித்த சமயத்தை நினைவுகூர்ந்த ஒரு சகோதரர் இவ்விதமாக ஒத்துக்கொண்டார்: “பைபிள்ல இருந்து நான் தெரிஞ்சுகிட்ட எல்லா விஷயங்களையும் மணிக்கணக்கா சொல்லி அம்மாவை திணறடிச்சேன். இதனால பெரும்பாலும் வாக்குவாதம்தான் ஏற்படும், குறிப்பா எனக்கும், அப்பாவுக்கும்.” பைபிள் செய்தியில் உறவினர் ஒருவர் ஆர்வம் காட்டினால்கூட, அதிகமாக தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் அவருக்கு ஏற்படும் விதத்தில் பதிலளியுங்கள். (நீதி. 25:7) ஊழியத்தில் முன்பின் தெரியாதவர்களிடம் பேசுகையில் காண்பிக்கும் அதே மரியாதை, தயவு, பொறுமை போன்ற குணங்களை உங்கள் உறவினர்களிடம் பேசும்போதும் காட்டுங்கள்.—கொலோ. 4:6.
5 இயேசுவுக்குப் புத்தி பேதலித்துவிட்டதென்று ஒரு சமயம் அவருடைய உறவினர்கள் நினைத்தார்கள். (மாற். 3:21) என்றாலும், பிற்பாடு சிலர் விசுவாசிகளாக ஆனார்கள். (அப். 1:14) உங்கள் உறவினர்களோடு சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்தால், சோர்ந்து போய்விடாதீர்கள். அவர்களுடைய சூழ்நிலையிலும், மனநிலையிலும் மாற்றம் ஏற்படலாம். எனவே, அவர்களுடைய ஆர்வத்தைத் தட்டியெழுப்புகிற ஒரு குறிப்பைச் சொல்வதற்கு மற்றொரு வாய்ப்பைத் தொடர்ந்து தேடுங்கள். நித்திய ஜீவனுக்கான பாதையில் அவர்களை வழிநடத்துகிற சந்தோஷம் உங்களுக்குக் கிடைக்கலாம்.—மத். 7:13, 14.
[கேள்விகள்]
1. உறவினர்களிடம் சாட்சி கொடுக்கையில் பகுத்துணர்வு ஏன் தேவைப்படுகிறது?
2. உறவினர்கள் மீதுள்ள உண்மையான அக்கறை அவர்களுடைய ஆர்வத்தை தூண்ட எவ்வாறு நமக்கு உதவும்?
3. நம்மீது உறவினர்களுக்கு இருக்கும் ஆர்வம் சாட்சி கொடுப்பதற்கு எவ்வாறு வழியைத் திறந்து வைக்கலாம்?
4. உறவினர்களிடம் சாட்சி கொடுக்கையில் என்ன படுகுழிகளை நாம் தவிர்க்க வேண்டும்?
5. சாட்சி கொடுக்கையில் உறவினர்கள் சாதகமாக பிரதிபலிக்கவில்லை என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?