யெகோவாவின்
அன்புள்ள தயவிற்கு நன்றி தெரிவியுங்கள்
கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு—மார்ச் 24
1 சங்கீதக்காரன் வியந்து கூறினதாவது: “அவருடைய [கடவுளுடைய] கிருபையினிமித்தமும், [அதாவது அன்புள்ள தயவினிமித்தமும்] மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.” (சங். 107:9) கடவுளுடைய அன்புள்ள தயவு என்பது ஜனங்களைப் பார்த்து அவர் பரிதாபப்படுவதை மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை. இது ஏவுதலால் எழுதப்பட்ட பின்வரும் துதிப்பாடலிலிருந்து தெளிவாகத் தெரிகிறது: “கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.” (சங். 94:18) தம் ஒரே பேறான குமாரனை நமக்காகப் பலி கொடுத்திருப்பதன் மூலம் அளவுகடந்த விதத்தில் யெகோவா அன்புள்ள தயவைக் காட்டியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது!—1 யோ. 4:9, 10.
2 கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு நெருங்குகையில், ‘கிருபையுள்ள தேவனுக்கு’ நாம் எப்படி நன்றி தெரிவிக்கலாம்? (சங். 59:17) இயேசு கடைசியாக பூமியில் கழித்த நாட்களைப் பற்றி தியானிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் நேரம் ஒதுக்க வேண்டும். (சங். 143:5) நினைவு ஆசரிப்புக்காக, தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்—2005 என்ற சிறுபுத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விசேஷ பைபிள் வாசிப்புப் பகுதியைப் படிப்பது பயன் தரும். முடிந்தால், மிகப் பெரிய மனிதர் புத்தகத்தில் 112-16 அதிகாரங்களிலும், வேறு பைபிள் பிரசுரங்களிலும் உள்ள கூடுதல் விஷயங்களை வாசித்து ஆராய்ச்சி செய்யுங்கள். நீங்கள் வாசிக்கும் விஷயங்களைக் குறித்து ஆழ்ந்து சிந்தியுங்கள், அவற்றில் நிலைத்திருங்கள். (1 தீ. 4:15) கடவுளுடைய வார்த்தையை ஜெபசிந்தையோடு வாசிப்பது நம் இருதயத்தைக் காப்பது மட்டுமல்லாமல், யெகோவா மீதுள்ள நம் அன்பையும் வெளிக்காட்டுகிறது.—மத். 22:37.
3 கடவுளுக்கு நன்றி தெரிவிக்க மற்றவர்களை ஊக்குவியுங்கள்: கடந்த வருடம் உலகளவில் 1,67,60,607 பேர் நினைவு ஆசரிப்பில் கலந்துகொண்டார்கள். சில வருடங்களுக்கு முன்பு, லைபீரியாவிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் நகரத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில், கர்த்தரின் இராப்போஜனத்தை அவருடைய நகரத்தில் ஆசரிக்க தீர்மானித்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தார்கள். அந்நிகழ்ச்சிக்கு உள்ளூர் கால்பந்து மைதானத்தைப் பயன்படுத்திக்கொள்ள அவர் அனுமதியளித்தார்; அதில் கலந்துகொள்ளுமாறு அந்தப் பகுதி முழுவதிலுமுள்ள மக்களுக்கு அறிவிப்பு செய்ய ஏற்பாடு செய்தார். அந்தக் கிராமத்திலுள்ள மொத்த பிரஸ்தாபிகள் ஐந்து பேர் மட்டுமே; ஆனால் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தவர்களோ 636 பேர்!
4 அதைப் போலவே, நாமும் நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்ள எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு உதவ வேண்டும். நீங்கள் யாரையெல்லாம் அழைக்க விரும்புகிறீர்கள் என ஒரு பட்டியலைத் தயாரித்தாலென்ன? நம் பத்திரிகைகளின் கடைசி பக்கத்தைக் காட்டியே ஆட்களை அழைக்கலாம்; அல்லது நினைவு ஆசரிப்பு அழைப்பிதழ்களைக் கொடுத்தும் அழைக்கலாம். அந்த அழைப்பிதழில் ஆசரிப்பின் நேரத்தையும் இடத்தையும் டைப் செய்தோ, தெளிவாக எழுதியோ ஒவ்வொருவரிடமும் கொடுங்கள். மார்ச் 24-ம் தேதி நெருங்க நெருங்க, அவர்கள் ஒவ்வொருவருக்கும் நினைப்பூட்டுவதற்கும் முடிவான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
5 நம்மோடு பைபிள் படிப்பவர்கள் இதுவரை கூட்டங்களுக்கு வராமல் இருந்திருக்கலாம்; அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் முழு பயனைப் பெறவும் நாம் எப்படி உதவலாம்? ஒவ்வொரு படிப்பின்போதும் இந்த ஆசரிப்பின் முக்கியத்துவத்தை அவர்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வைப்பதற்கு சில நிமிடங்களைச் செலவிடலாம். மார்ச் 15, 2004 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 3-7-லும், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 266-9-லும் இது சம்பந்தமாக மிகச் சிறந்த தகவலைக் காணலாம்.
6 வந்தவர்களுக்கு ஆவன செய்யுங்கள்: நினைவு ஆசரிப்புக்கு வந்திருப்பவர்களுக்கு வரவேற்பு கொடுங்கள். (ரோ. 12:13) உங்கள் அழைப்பை ஏற்று வந்திருப்பவர்களுடன் உட்கார முயற்சி செய்யுங்கள்; அவர்களிடம் பைபிளும் பாட்டுப் புத்தகமும் இருக்குமாறும் பார்த்துக்கொள்ளுங்கள். செயலற்ற சகோதரர்களோ சகோதரிகளோ இதில் கலந்துகொள்ள அதிக முயற்சியெடுத்து வந்திருக்கலாம்; விசேஷமாக அப்படிப்பட்டவர்களை, நாமாகவே சென்று அன்பாக வரவேற்கலாம். நம் அன்பையும் அக்கறையையும் பார்த்து அவர்கள் சபையுடன் மீண்டும் கூட்டுறவு கொள்ள ஆரம்பிக்கலாம். (லூக். 15:3-7) மிக பரிசுத்தமான இந்தச் சமயத்தில், யெகோவா காட்டியிருக்கும் ‘அதிசயமான கிருபைக்கு’ நன்றி தெரிவிக்க நம்மோடு மற்றவர்களும் கலந்துகொள்ள நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோமாக.—சங். 31:21.
[கேள்விகள்]
1. யெகோவா நம் மீது எவ்வாறு அன்புள்ள தயவைக் காட்டியிருக்கிறார்?
2. யெகோவாவுக்கு நாம் எப்படி நன்றி தெரிவிக்கலாம்?
3, 4. (அ) லைபீரியாவிலுள்ள நம் சகோதரர்களின் மனப்பான்மையை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (ஆ) நினைவு ஆசரிப்புக்கு யாரையெல்லாம் அழைக்கத் திட்டமிடுகிறீர்கள்?
5. பைபிள் மாணாக்கர் நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்ள நாம் எப்படி ஊக்கமளிக்கலாம்?
6. நினைவு ஆசரிப்புக்கு வந்திருப்பவர்களை வரவேற்பது ஏன் முக்கியம்?