தொடர்ந்து பிரசங்கியுங்கள்
1 இது ஒரு கொடிய காலம். உள்நாட்டுக் கலகம், இனப் போர்கள், இயற்கை பேரழிவுகள் போன்றவையும் இது போன்று அதிர்ச்சியூட்டும் இன்னும் பல சம்பவங்களும் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டிருக்கின்றன. எப்போதையும்விட இப்போது மனித குலத்திற்கு நற்செய்தி தேவைப்படுகிறது. இருப்பினும் திரும்பிய பக்கமெல்லாம் ஆன்மீக காரியங்களிடம் அக்கறையின்மையே தென்படுகிறது. சில இடங்களில் ஆட்களை வீடுகளில் சந்திப்பது பெரும்பாடாய் இருக்கிறது, நாம் சொல்வதைக் கேட்கவோ, பைபிளைப் படிக்கவோ விரும்புகிறவர்களைக் கண்டுபிடிப்பது அதைவிடவும் பெரும்பாடாய் இருக்கிறது. ஆனாலும் கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தின் நற்செய்தியை நாம் தொடர்ந்து பிரசங்கிப்பது மிக அவசியமாகும்.—மத். 24:14.
2 ஜனங்களிடம் அன்பு: நம் பிரசங்க வேலை, ஜனங்கள் மீது யெகோவா வைத்திருக்கும் அன்பை முக்கியப்படுத்திக் காட்டுகிறது. அவர் ‘ஒருவரும் கெட்டுப்போகாமல் [அதாவது, அழிக்கப்படாமல்] எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிறார்.’ (2 பே. 3:9; எசே. 33:11) அதனால்தான், ‘சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்பட வேண்டும்’ என இயேசுவின் மூலமாக அவர் கட்டளையிட்டிருக்கிறார். (மாற். 13:10) தம்மிடம் திரும்பும்படியும், சாத்தானின் உலகிற்கு வரவிருக்கும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளும்படியும் மக்களிடம் கடவுள் வேண்டுகோள் விடுக்கிறார். (யோவே. 2:28, 29, 32; செப். 2:2, 3) அதை செய்ய யெகோவா நமக்கு வாய்ப்பை அளித்திருப்பதற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டாமா?—1 தீ. 1:12, 13.
3 ஒவ்வொரு மாதமும் சராசரியாக 60,85,387 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன என்றும் ஒவ்வொரு வாரமும் சராசரியாக சுமார் 5,000 புதிய சீஷர்கள் முழுக்காட்டுதல் பெற்றார்கள் என்றும் 2004-ம் ஊழிய ஆண்டின் உலகளாவிய அறிக்கை காட்டுகிறது! தங்களுக்கு நியமிக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள ஒவ்வொருவரிடமும் பேச பிரஸ்தாபிகள் தொடர்ந்து முயற்சி எடுத்ததை யெகோவா ஆசீர்வதித்திருப்பதாலேயே புதிதாக ஒப்புக்கொடுத்த இவர்களில் சிலரைக் கண்டுபிடிக்க முடிந்தது. இது சபைகளுக்கு எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது! உயிர்காக்கும் இந்த வேலையில் கடவுளின் சக வேலையாளாக இருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!—1 கொ. 3:5, 6, 9.
4 கடவுளுடைய பெயரைத் துதித்தல்: யெகோவாவை வெளிப்படையாய் துதிப்பதற்காகவும் எல்லாருக்கும் முன்பாக அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்காகவும் நாம் தொடர்ந்து பிரசங்கிக்கிறோம். (எபி. 13:15) சாத்தான் “உலகமனைத்தையும்” தவறாக வழிநடத்தி இருக்கிறான்; கடவுள், மனிதரின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாதவர், மனிதர் படும் துன்பத்தை துளியும் கண்டுகொள்ளாதவர், கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை என்றெல்லாம் மனிதர்களை நம்ப வைத்திருக்கிறான். (வெளி. 12:9) ஆனால் பிரசங்க வேலையின் மூலமாக நம் மகத்தான பரலோகத் தகப்பனைப் பற்றிய சத்தியத்தை ஆதரித்துப் பேசுகிறோம். ஆம், இன்றும், என்றும், அவருடைய பெயரைத் துதித்துக்கொண்டிருப்போமாக.—சங். 145:1, 2.