நம் ஊழியம் நிறைவேற்றுகிற காரியங்கள்
1 வெற்றி வாகை சூடியவர்கள் சந்தோஷத்துடன் ஊர்வலத்தில் வெற்றிநடை போடுவதுபோல் யெகோவாவின் சேவையில் கிறிஸ்தவர்கள் வெற்றிநடை போடுகிறார்கள் எனக் கடவுளுடைய வார்த்தை வர்ணிக்கிறது. (2 கொ. 2:14-16) கடவுளைப் பற்றிய அறிவை ஜனங்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம் நாம் செலுத்துகிற ஸ்தோத்திர பலி யெகோவாவுக்குச் சுகந்த வாசனைபோல் இருக்கிறது. அந்த நற்செய்தியின் சுகந்தத்திடம் சிலர் ஈர்க்கப்படுகிறார்கள்; பலர் அதைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால், இப்படிப் பலரும் அதைப் புறக்கணிக்கிறார்கள் என்பதற்காக நம் ஊழியம் வெற்றி பெறவில்லை என்று சொல்லிவிட முடியாது. நம் ஊழியம் நிறைவேற்றுகிற காரியங்களை இப்போது கவனியுங்கள்.
2 யெகோவாவை மகிமைப்படுத்துகிறது: தன்னல காரணங்களுக்காகவே மனிதர்கள் யெகோவாவை வணங்குவதாக சாத்தான் வாதம் செய்தான். (யோபு 1:9-11) நாம் தன்னலமின்றி, உண்மை மனதுடன்தான் யெகோவாவை வணங்குகிறோம் என்பதை நிரூபிப்பதற்குக் கிறிஸ்தவ ஊழியம் நமக்கு வாய்ப்பளிக்கிறது. தனிப்பட்ட பல பிரச்சினைகள் மத்தியிலும், ஜனங்களிடம் பொதுவாகக் காணப்படுகிற அசட்டை மனப்பான்மை மத்தியிலும் பிரசங்கித்து, சீஷராக்கும்படியான கட்டளைக்கு அநேக பிரஸ்தாபிகள் தொடர்ந்து கீழ்ப்படிகிறார்கள். இப்படி அவர்கள் ஊழியத்தில் உண்மையுடன் சகித்திருப்பது யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறது.—நீதி. 27:11.
3 அதோடு, கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில்கூட நம் ஊழியத்திற்கு ஒரு பங்கிருக்கிறது. சாத்தானின் உலகத்திற்கு வரவிருக்கும் அழிவு சம்பந்தமாக யெகோவா பின்வருமாறு சொல்கிறார்: ‘நான் யெகோவா என்பதை தேசங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.’ (எசே. 39:7, NW) தேசங்கள் இதை அறிந்துகொள்ள வேண்டுமானால், கடவுளுடைய ஊழியர்கள் அவருடைய பெயரையும் நோக்கத்தையும் “சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்” தொடர்ந்து அறிவிப்பது முக்கியமாகும்.—வெளி. 14:6, 7.
4 நியாயத்தீர்ப்புக்கு அடிப்படையாக அமைகிறது: நற்செய்தியைப் பிரசங்கிப்பது நியாயத்தீர்ப்புக்கு அடிப்படையாகவும் அமைகிறது. “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும்” கிறிஸ்து இயேசு தண்டனைத் தீர்ப்பளிப்பார் என அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (2 தெ. 1:7, 10) நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதன் அடிப்படையிலேயே ஜனங்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள். அப்படியானால், கடவுளுடைய ஊழியர்கள்மீது எப்பேர்ப்பட்ட கனத்த பொறுப்பு இருக்கிறது! நம்மீது இரத்தப்பழி வரக்கூடாதென்றால், உயிர் காக்கும் ராஜ்ய செய்தியைத் தவறாமல் நாம் அறிவிக்க வேண்டும்.—அப். 20:26, 27.
5 ஜனங்கள் யெகோவாவின் தயவைப் பெற்றுக்கொள்ள நாம் தொடர்ந்து உதவுவது, அவருடைய இரக்கத்திற்கு அத்தாட்சியாக இருக்கிறது. (1 தீ. 2:3, 4) ஜனங்களுடைய வாழ்க்கை மாறிக்கொண்டே இருப்பதை அறிந்திருக்கும் நாம் மீண்டும் மீண்டும் அவர்களைப் போய்ச் சந்திக்கிறோம்; காலம் இருக்கும்போதே யெகோவாவைத் தேடுவதற்கு அவர்களைத் தூண்டுகிறோம். இவ்வாறு செய்வதன் மூலம், ‘ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிற’ ‘நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தை’ நாம் வெளிக்காட்டுகிறோம்.—லூக். 1:77; 2 பே. 3:9.
6 நமக்கும் பயன் அளிக்கிறது: யெகோவாவின் சேவையில் எப்போதும் சுறுசுறுப்பாக ஈடுபடுவது நமக்குப் பாதுகாப்பாய் அமைகிறது. ‘யெகோவாவின் நாளை மனதில் நெருக்கமாக வைத்திருப்பதற்கும்,’ (NW) தற்போதைய பொல்லாத உலகத்தால் நம்மை கறைபடுத்திக்கொள்ளாதிருப்பதற்கும் இது உதவுகிறது. (2 பே. 3:11-14; தீத். 2:11, 12) எனவே, கிறிஸ்தவ ஊழியத்தில் எடுக்கப்படும் முயற்சிகள் வீணல்ல என்பதை அறிந்துள்ள நாம், ‘உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்போமாக.’—1 கொ. 15:58.
[கேள்விகள்]
1. யெகோவா நம் ஊழியத்தை எப்படிக் கருதுகிறார், நற்செய்திக்கு ஜனங்கள் எப்படிப் பிரதிபலிக்கிறார்கள்?
2. நம் ஊழியம் எதை நிரூபிக்க நமக்கு உதவுகிறது?
3. கடவுளுடைய பெயரையும் நோக்கத்தையும் தொடர்ந்து அறிவிப்பது ஏன் அதிக முக்கியம்?
4. நற்செய்தியைப் பிரசங்கிப்பது நியாயத்தீர்ப்புக்கு எப்படி அடிப்படையாய் அமைகிறது?
5. நம் ஊழியத்தில் கடவுளுடைய இரக்கம் எவ்வாறு வெளிக்காட்டப்படுகிறது?
6. யெகோவாவின் சேவையில் எப்போதும் சுறுசுறுப்பாக ஈடுபடுவது நமக்கு எவ்வாறு பயன் அளிக்கிறது?