கல்வி புகட்டுகிற வீடியோக்களை உபயோகியுங்கள்
1 தம் பூர்வகால ஊழியர்களிடம் முக்கியமான விஷயங்களைத் தெரிவிக்க சில சமயங்களில் யெகோவா தரிசனங்களையும் சொப்பனங்களையும் பயன்படுத்தினார். யெகோவாவின் பரலோக ரதம் பற்றிய தரிசனம் எசேக்கியேலுக்குக் காட்டப்பட்டதைச் சிந்தித்துப் பாருங்கள். (எசே. 1:1-28) அடுத்தடுத்த உலக வல்லரசுகளின் எழுச்சியைச் சித்தரிக்கும் தீர்க்கதரிசன அர்த்தம் நிறைந்த சொப்பனத்தை தானியேல் கண்ட பிறகு எப்படி உணர்ந்திருப்பார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். (தானி. 7:1-15, 28) “கர்த்தருடைய நாளில்” சம்பவிக்கவிருந்த காரியங்களை, அப்போஸ்தலன் யோவானுக்கு “அடையாளங்களினால்” மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் வெளிப்படுத்தியதைப் பற்றி என்ன சொல்லலாம்? (வெளி. 1:1, 10; NW) வண்ண வண்ணக் காட்சிகள் மூலமாகவும், வலிமை வாய்ந்த செயல்கள் மூலமாகவும் அந்த மூவருக்கும் யெகோவா கற்பித்தார். அது அவர்கள் மனதைவிட்டு நீங்கவில்லை.
2 அதுபோலவே, பைபிள் சத்தியங்களை மனதைவிட்டு நீங்காதளவுக்கு நாம் மற்றவர்களுக்குக் கற்பிக்க விரும்பினால், வீடியோக்களை உபயோகிக்கலாம். நம் வீடியோக்கள், பலதரப்பட்ட தலைப்புகளில் உள்ளன; அவை பைபிள் மீதும், யெகோவாவின் அமைப்பு மீதும், கிறிஸ்தவ வாழ்க்கைக்குப் பொலிவூட்டுகிற நியமங்கள் மீதும் நம்பிக்கையை வளர்க்கின்றன. போதிப்பதற்காக நம் வீடியோக்களை உபயோகிக்க முடிந்த சில வழிகளைப் பற்றி யோசியுங்கள். என்னென்ன வீடியோக்களை அவ்வாறு உபயோகிக்கலாம் என்பதற்கு சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
3 ஊழியத்தில்: உங்கள் பைபிள் மாணாக்கரிடம் நமது உலகளாவிய கிறிஸ்தவ சகோதரத்துவத்தைப் பற்றிச் சொல்லி வந்திருக்கிறீர்களா? நம் சகோதர கூட்டுறவு என்ற ஆங்கில வீடியோவைக் காட்டுங்கள். அடுத்த முறை படிப்பு நடத்துவதற்கு முன் அவரே அதைப் போட்டுப் பார்க்கும்படி அவரிடம் கொடுத்துவிட்டு வரலாம், அல்லது அடுத்த முறை படிப்புக்குச் செல்லும்போது நீங்களும் அவரும் சேர்ந்து பார்க்கலாம். பின்னர் ஜூன் 2002 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தில் காணப்படும் கேள்விகளைக் கலந்தாலோசிக்கலாம்.
4 இளைஞர்களே, டாக்குமென்ட்டரி வடிவில் ஆங்கிலத்திலுள்ள நாசி தாக்குதலுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக நிற்கின்றனர் என்ற வீடியோவை அல்லது சோதனைகளின் மத்தியிலும் உண்மையாயிருத்தல்—சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகள் என்ற வீடியோவை வகுப்பிலுள்ளவர்களுக்குக் காட்டுவதைப் பற்றி உங்கள் ஆசிரியரிடம் நீங்கள் பேசலாம். அதைக் கலந்தாலோசிக்க கேள்விகளைத் தொகுத்துக் கொடுப்பதாகச் சொல்லுங்கள்; நம் ராஜ்ய ஊழியம், ஜூன் 2001, பிப்ரவரி 2003 இதழ்களில் கொடுக்கப்பட்டிருக்கிற கேள்விகளை, வகுப்பில் கலந்தாலோசிப்பதற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
5 குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும்: பெற்றோர்களே, இளைஞர் கேட்கின்றனர்—நல்ல நண்பர்களைப் பெறுவது எப்படி? என்ற வீடியோவை முதன்முதலாக நீங்கள் பார்த்தபோது உங்கள் பிள்ளைகள் சிறுவர்களாக இருந்திருக்கலாம்; இப்போது அவர்கள் பெரியவர்களாய் வளர்ந்திருப்பார்கள் என்பதால், அந்த வீடியோவை அடுத்த குடும்பப் படிப்பின்போது மீண்டும் பார்க்கலாம், அல்லவா? சுவாரஸ்யமான, ஒளிவு மறைவில்லாத கலந்தாலோசிப்புக்கு, நம் ராஜ்ய ஊழியம், ஏப்ரல் 2002 இதழில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளை உபயோகிக்கலாம்.
6 சபையிலுள்ள நண்பர்கள் யாரையாவது உங்கள் வீட்டிற்கு அழைக்க நினைத்திருக்கிறீர்களா? யெகோவாவின் அதிகாரத்திற்கு மரியாதை காட்டுங்கள் என்ற ஆங்கில வீடியோவை அவர்களுடன் சேர்ந்து பார்க்கலாம். குறிப்பாக அந்த வீடியோவிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை நம் ராஜ்ய ஊழியம், செப்டம்பர் 2004 இதழில் கொடுக்கப்பட்டிருக்கிற கேள்விகளைப் பயன்படுத்தி கலந்தாலோசித்தால், அந்த மாலைப்பொழுது பெரிதும் ஊக்கமூட்டுவதாய் இருக்கும்.
7 பிற சந்தர்ப்பங்கள்: நம்மிடமுள்ள 20 வீடியோக்களை வேறு எந்த வழிகளில் நீங்கள் உபயோகிக்கலாம்? நீங்கள் தவறாமல் சந்தித்து வருபவர்களுக்கு அவற்றில் ஓரிரண்டைப் போட்டுக் காட்டுவது அவர்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுமா? உள்ளூரிலிருக்கும் ஒரு நர்சிங் ஹோமில் அல்லது முதியோர் இல்லம் ஒன்றில் இந்த வீடியோக்களைப் போட்டுக் காட்ட ஏற்பாடு செய்யலாம், அல்லவா? சத்தியத்தில் இல்லாத உங்கள் உறவினர்கள், அக்கம்பக்கத்தார், சக பணியாளர்கள் ஆகியோரின் நன்மதிப்பைச் சம்பாதிப்பதற்கு இந்த வீடியோக்கள் உதவுமா? நம்மிடமுள்ள வீடியோக்கள் கண்களுக்கு விருந்தளிக்கிற, கல்வி புகட்டுகிற, பலன் தருகிற உபகரணங்களாகும். எனவே, கற்பிப்பதற்கு அவற்றை உபயோகியுங்கள்.
[கேள்விகள்]
1. யெகோவா தம் பூர்வகால ஊழியர்களுக்கு எவ்வாறு கற்பித்தார், ஏன் அவ்வாறு கற்பித்தார்?
2. பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்குக் கற்பிக்க, எந்த உபகரணங்களை நாம் உபயோகிக்கலாம்?
3. பைபிள் மாணாக்கரை அமைப்பினிடம் வழிநடத்த நீங்கள் எந்த வீடியோவைப் பயன்படுத்தலாம்?
4. கல்வி புகட்டுகிற எந்த உபகரணங்களை யெகோவாவின் சாட்சியாய் இருக்கும் ஓர் இளைஞர் பள்ளியில் உபயோகிக்கலாம்?
5. குடும்பப் படிப்புகளில் எதைப் பெற்றோர்கள் உபயோகிக்கலாம்?
6. ஊக்கமூட்டும் விதத்தில் நண்பர்களோடு சேர்ந்து பொழுதைக் கழிப்பதற்கு நீங்கள் என்ன ஏற்பாடு செய்யலாம்?
7. நம்மிடமுள்ள வீடியோக்களை எந்தெந்த சந்தர்ப்பங்களில் உபயோகிக்கலாம் என யோசித்திருக்கிறீர்களா?