கிளை அலுவலகத்திலிருந்து கடிதம்
அன்பான ராஜ்ய பிரஸ்தாபிகளே:
கடந்த சில ஆண்டுகளாக அமைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்திருப்பதற்காக எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
செப்டம்பர் 1, 2006 முதல், மாவட்ட அளவில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன்படி, அந்த வட்டாரத்தின் மொழியைப் பேசுபவராக இருக்கிற ஒரு மாவட்டக் கண்காணி வட்டார மாநாடுகளில் சேவை செய்வார். மாவட்டம் 1, ஆங்கில வட்டாரத்தையும், மாவட்டம் 2, ஹிந்தி மற்றும் வட இந்திய மொழி வட்டாரங்களையும், மாவட்டம் 3, கன்னடம், தமிழ், தெலுங்கு மொழி வட்டாரங்களையும், மாவட்டம் 4, அனைத்து மலையாள வட்டாரங்களையும் உள்ளடக்கும்.
பெருநகரங்களில் பல்வேறு மொழித் தொகுதிகளுக்கு விசேஷ கவனிப்பு செலுத்தப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இதன்படி, ஒன்றுக்கு மேற்பட்ட சபை பிரஸ்தாபிகள் ஒரே பிராந்தியத்தில் ஊழியம் செய்வார்கள்; அவர்களது சபையின் மொழியைப் பேசுபவர்களிடம் கவனம் செலுத்துவார்கள்.
யெகோவாவின் சித்தத்தைச் செய்ய நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதில் நாம் அனைவருமே நம் பங்கைச் செய்ய வேண்டும்; நம் சபையின் மொழி அல்லாத வேறொரு மொழி பேசுபவர் ஆர்வம் காட்டினால் என்ன செய்யலாமென்பது பற்றிய அறிவுரையைப் பின்பற்றவும் வேண்டும்.—சங். 40:8.
வெவ்வேறு மொழி பேசுபவர்கள் புதிதாக நம்மோடு சேர்ந்துகொள்வதால், கூட்டங்களை நடத்துவதற்கு இன்னும் அதிகளவில் ராஜ்ய மன்றங்கள் தேவைப்படும். நாடு முழுவதிலும் ராஜ்ய மன்றக் கட்டுமானத்திற்காக உடல் ரீதியிலும் பொருள் ரீதியிலும் அருமையான ஆதரவு அளிக்கப்பட்டிருப்பதைக் காண்பது சந்தோஷத்தைத் தந்திருக்கிறது. நம் நிதி நிலையில் மாற்றம் ஏற்பட்டிராதபோதிலும், உள்ளூர் பிரஸ்தாபிகள் அதிகமான நன்கொடை அளித்திருப்பதாலேயே அதிகளவில் ராஜ்ய மன்றங்களைக் கட்ட முடிந்திருக்கிறது. நிலம் வாங்குவது, மன்றத்தைக் கட்டுவது ஆகியவை சம்பந்தமாக சபைகள் அவற்றுக்கே உரிய பாரத்தை, அல்லது பொறுப்பைச் சுமக்கையில், இந்தக் கட்டுமானத் திட்டம் தொடர்ந்து யெகோவாவால் ஆசீர்வதிக்கப்படும் என்பதில் நாங்கள் நிச்சயமாய் இருக்கிறோம்.—கலா. 6:5; சங். 127:1.
உங்கள் சகோதரர்கள்,
இந்தியக் கிளை அலுவலகம்