இரத்தத்தின் சிறு கூறுகளையும் என்னுடைய சொந்த இரத்தத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருத்துவ முறைகளையும் பற்றி நான் என்ன தீர்மானம் எடுக்க வேண்டும்?
“இரத்தத்திற்கு . . . விலகியிருக்கும்படி” கிறிஸ்தவர்களுக்கு பைபிள் கட்டளையிடுகிறது. (அப். 15:20) எனவே, யெகோவாவின் சாட்சிகள் முழு இரத்தத்தையோ, இரத்தத்தின் முக்கிய பகுதிகளான இரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள், பிளாஸ்மா ஆகியவற்றையோ ஏற்றிக்கொள்ள மறுக்கிறார்கள். மேலும், அவர்கள் இரத்த தானம் செய்வதுமில்லை, பிற்காலத்தில் ஏற்றிக்கொள்வதற்காக தங்கள் சொந்த இரத்தத்தை சேமிப்பதுமில்லை.—லேவி. 17:13, 14;அப். 15:28, 29.
இரத்தத்தின் சிறு கூறுகள் என்றால் என்ன, அவற்றைப் பயன்படுத்துவதைக் குறித்து ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஏன் தீர்மானிக்க வேண்டும்?
பிரித்தெடுத்தல் என்றழைக்கப்படும் முறையின் மூலம் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் பொருட்களையே இரத்த சிறு கூறுகள் என்கிறோம். உதாரணமாக, பிளாஸ்மா என்பது இரத்தத்திலுள்ள நான்கு முக்கியப் பகுதிகளில் ஒன்று. இதை பின்வரும் சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கலாம்: இதில் சுமார் 91 சதவிகிதம் தண்ணீரே இருக்கிறது; ஆல்ப்யுமின்கள், குளோபூலின்கள், ஃபைப்ரினோஜென் ஆகிய புரதங்கள் சுமார் 7 சதவிகிதம் உள்ளன. சத்துப்பொருள்கள், ஹார்மோன்கள், வாயுக்கள், வைட்டமின்கள், கழிவுப்பொருள்கள், மின்அயனிகள் போன்ற மற்ற சிறுகூறுகள் சுமார் 1.5 சதவிகிதம் உள்ளன.
இரத்தத்திற்கு விலகியிருக்கும்படியான கட்டளை இந்தச் சிறு கூறுகளையும் உட்படுத்துகிறதா? நாம் உறுதியாகச் சொல்லமுடியாது. இவற்றைப் பயன்படுத்துவது சம்பந்தமாக பைபிள் எந்தத் திட்டவட்டமான வழிநடத்துதலையும் கொடுப்பதில்லை.aமருத்துவ சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட இரத்தத்திலிருந்து அநேக சிறு கூறுகள் பிரித்தெடுக்கப்படுகின்றன என்பது உண்மைதான். தனக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் இவற்றை ஏற்றுக்கொள்வதா அல்லது மறுப்பதா என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் மனச்சாட்சியின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.
இதுபோன்ற தீர்மானங்களை எடுக்கும்போது, பின்வரும் கேள்விகளை கவனத்தில் கொள்ளுங்கள்: இரத்தத்தின் எல்லா சிறு கூறுகளையும் ஏற்க மறுப்பது, நுண்கிருமிகளுக்கும் (viruses) நோய்களுக்கும் எதிரான எதிர்ப்புசக்தியை அதிகரிக்கக்கூடிய மருந்துகளையும் இரத்தம் கசிவதைத் தடுப்பதற்காக அதை உறையவைக்கும் மருந்துகளையும் உட்படுத்துகிறது என்பதை நான் அறிந்திருக்கிறேனா? இரத்தத்தின் குறிப்பிட்ட சில கூறுகளை ஏன் ஏற்றுக்கொள்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்பதை மருத்துவரிடம் என்னால் விளக்க முடியுமா?
என்னுடைய சொந்த இரத்தத்தை உபயோகித்து செய்யப்படும் சில சிகிச்சைகளைப் பற்றி ஏன் நானே தீர்மானிக்க வேண்டும்?
கிறிஸ்தவர்கள் இரத்ததானம் செய்வதில்லை, அல்லது பிற்பாடு ஏற்றிக்கொள்வதற்காக தங்களுடைய இரத்தத்தை சேமித்து வைப்பதுமில்லை. என்றாலும், ஒருவருடைய இரத்தத்தை உபயோகித்து செய்யப்படும் சில மருத்துவ முறைகளும், பரிசோதனைகளும் பைபிள் நியமங்களுக்கு முரண்பட்டவை என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. எனவே, தங்களுடைய இரத்தத்தை உபயோகித்து செய்யப்படும் சில வகை மருத்துவ முறைகளை ஏற்றுக்கொள்வதா மறுப்பதா என்பதை ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.
இதுபோன்ற தீர்மானங்களை எடுக்கும்போது, பின்வரும் கேள்விகளை உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்: என்னுடைய இரத்தத்தில் கொஞ்சம் ஓர் இயந்திரத்திற்குள் திருப்பிவிடப்படுகையில் ஒருவேளை சிறிது நேரத்திற்கு இரத்த ஓட்டம் தடைசெய்யப்படலாம்; அப்படிப்பட்ட இரத்தம் இன்னமும் என் உடலின் பாகமாகவே இருக்கிறது, அதை ‘தரையிலே ஊற்றிவிட’ வேண்டியதில்லை என்று கருத என் மனசாட்சி அனுமதிக்குமா? (உபா. 12:23, 24) ஒரு மருத்துவ முறையின்போது என்னுடைய இரத்தத்தில் கொஞ்சம் வெளியே எடுக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டு, திரும்பவும் என்னுடைய உடலுக்குள் செலுத்தப்பட்டால், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட என்னுடைய மனசாட்சி உறுத்துமா? என்னுடைய இரத்தத்தை உபயோகித்துச் செய்யப்படும் எல்லா மருத்துவமுறைகளையும் மறுப்பது, ‘டையாலிசிஸ்’ செய்வதை அல்லது இருதய-நுரையீரல் இயந்திரத்தைப் பயன்படுத்துவதை மறுப்பதையும் உட்படுத்துகிறது என்பதை அறிந்திருக்கிறேனா? இவ்விஷயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு முன்னால் வழிநடத்துதலுக்காக கடவுளிடம் ஜெபம் செய்தேனா?b
என்னுடைய தனிப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
பின்வரும் பக்கங்களில் உள்ள இரண்டு வினாப்பட்டியல்களையும் கவனியுங்கள். இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் சில கூறுகளையும், அவை பொதுவாக மருந்துகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும்வினாப்பட்டியல் 1பட்டியலிடுகிறது. இந்தச் சிறு கூறுகள் ஒவ்வொன்றையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா அல்லது நிராகரிப்பீர்களா என்பதை அதில் பூர்த்திசெய்யுங்கள். உங்களுடைய இரத்தத்தை உபயோகித்துச் செய்யப்படும் பொதுவான சில மருத்துவமுறைகளைவினாப்பட்டியல் 2பட்டியலிடுகிறது. இவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா அல்லது நிராகரிப்பீர்களா என்பதை அதில் பூர்த்திசெய்யுங்கள். இந்த வினாப்பட்டியல்கள் சட்டப்பூர்வ ஆவணங்கள் அல்ல, ஆனால் இந்த வினாப்பட்டியல்களில் உள்ள பதில்களை DPA (உடல்நலப் பராமரிப்பிற்குரிய நிரந்தர அதிகாரப் பத்திரம்) அட்டையைப் பூர்த்திசெய்கையில் நீங்கள் பயன்படுத்தலாம்.
உங்களுடைய தீர்மானம் கண்டிப்பாக உங்களுடையதாகவே இருக்க வேண்டும்; மற்றவர்கள் உங்களுக்காக தீர்மானிக்கக்கூடாது. அதேபோல, யாரும் மற்றவர்களுடைய தீர்மானங்களை விமர்சிக்கவும் கூடாது. இந்த விஷயங்களில் ‘அவனவன் தன்தன் [பொறுப்பெனும்] பாரத்தைச் சுமப்பான்.’—கலா. 6:4, 5.
cdefghijகுறிப்பு: இந்த ஒவ்வொரு மருத்துவ முறைகளையும் செயல்படுத்தும் விதம் மருத்துவருக்கு மருத்துவர் வேறுபடுகிறது. பரிந்துரைக்கப்படும் எந்த மருத்துவ சிகிச்சை முறையும் பைபிள் நியமங்களுக்கு இசைவாகவும் உங்களுடைய சொந்த மனச்சாட்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு இசைவாகவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்; அதற்காக அந்த சிகிச்சையில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதைக் குறித்து சரியான விளக்கத்தை உங்களுடைய மருத்துவரிடமிருந்து நீங்கள் கண்டிப்பாக பெற வேண்டும்.