உதவ முன்வருகிற மனப்பான்மை ஆசீர்வாதங்களுக்கு வழிவகுக்கிறது
1 இஸ்ரவேல படைவீரர்களை கோலியாத் நிந்தித்தபோது, அவனோடு சண்டையிட அவர்களில் யாராவது முன்வந்திருக்கலாம். ஆனால் அப்படி முன்வந்தது யார்? ஆடு மேய்த்துவந்த ஒரு சிறுவன். போர்ப் பயிற்சி எதுவும் பெற்றிராதபோதிலும் அவன் முன்வந்தான். (1 சா. 17:32) நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்கள் எருசலேமுக்குத் திரும்பிய பிறகும்கூட அலங்கங்களைப் புதுப்பிக்கத் தவறினார்கள். அப்போது பெர்சிய ராஜாவுக்குப் பானம் கொடுக்கும் பொறுப்பான உத்தியோகத்தில் இருந்த ஒருவர் கௌரவமான தன் வேலையைத் தியாகம் செய்ய முன்வந்தார். கட்டுமான வேலையை ஒழுங்கமைப்பதற்காக எருசலேமுக்குப் பயணித்தார். (நெ. 2:5) இப்படி மனமுவந்து செயல்பட்டவர்கள் தாவீதும் நெகேமியாவுமே. அவர்களுடைய மனப்பான்மைக்காக அவ்விருவரையுமே யெகோவா ஆசீர்வதித்தார்.—1 சா. 17:45, 50; நெ. 6:15, 16.
2 உதவ முன்வருகிற இத்தகைய மனப்பான்மையை இன்றைய உலகில் காண முடிவதில்லை. இந்தக் “கடைசி நாட்களில்,” ஜனங்கள் இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்; அநேகர் “தற்பிரியராயும்” இருக்கிறார்கள். (2 தீ. 3:1, 2) மற்றவர்களுக்கு உதவி தேவைப்படும்போது அவர்களுக்கு உதவ முன்வர முடியாத அளவுக்கு ஒருவர் தன் சொந்தக் காரியங்களில் மூழ்கிவிடுவது எளிது. என்றாலும், நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதால், இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறோம். அவர் மற்றவர்களுக்கு உதவ முன்வந்தார். (யோவா. 5:5-9; 13:12-15; 1 பே. 2:21) உதவ முன்வரும் மனப்பான்மையை நாம் எவ்வாறு வெளிக்காட்டலாம், அதனால் என்னென்ன ஆசீர்வாதங்களைப் பெறுவோம்?
3 நம் சகோதரர்களுக்கு உதவுதல்: கூட்டங்களில் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பில் குறிப்புகள் சொல்ல நாம் முன்வருவதன் மூலம் ‘ஆன்மீகப் பரிசை’ மற்றவர்களுக்கு அளிக்கலாம். (ரோ. 1:11, NW) குறிப்புகள் சொல்வது யெகோவாவுக்குக் கனம் சேர்க்கிறது; நம் மனதிலும் இருதயத்திலும் சத்தியத்தை இன்னும் உறுதியாகப் பதியச் செய்கிறது; கூட்டங்களை மகிழ்ந்து அனுபவிக்க நமக்கு உதவுகிறது. (சங். 26:12) தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சு கொடுக்க வேண்டிய மாணாக்கர் வராதபோது அதைக் கொடுக்க நாம் முன்வரலாம். இப்படி முன்வருவது கற்பிக்கும் கலையை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவும்.
4 சபையில் பொறுப்புகளைக் கவனிப்பதற்கான தகுதியைப் பெறுவதன் மூலம் உதவ முன்வருகிற மனப்பான்மையை சகோதரர்கள் வெளிக்காட்டலாம். (ஏசா. 32:2; 1 தீ. 3:1) அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும் பல்வேறு இலாகாக்களில் வாலண்டியர் சேவையில் ஈடுபடுவதன் மூலம் அவை சுமுகமாக நடைபெறுவதற்கு எல்லாருமே பங்களிக்கலாம். பயணக் கண்காணியுடன் ஊழியத்தில் கலந்துகொள்ளவோ, அவருக்கு உணவளிக்கவோ முன்வருவது, ‘உற்சாகப் பரிமாற்றத்தில்’ விளைவடையும். (ரோ. 1:12, NW) சபையிலுள்ள திக்கற்ற பிள்ளைகள், விதவைகள், வியாதிப்பட்டு பலவீனமாய் இருப்பவர்கள், சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு திண்டாடும் தாய்மார்கள் போன்றவர்களுக்கும், இன்னும் இதுபோன்றவர்களுக்கும் நடைமுறை உதவிகளை அளிக்கையில் நாம் அகமகிழ்வோம், யெகோவாவின் தயவையும் பெறுவோம்.—நீதி. 19:17; அப். 20:35.
5 உதவ முன்வருகிற மனப்பான்மையை வெளிக்காட்டுவதற்கு இன்னொரு வழி, ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்யும் வேலையிலும் அதைப் பராமரிக்கும் வேலையிலும் பங்குகொள்வதாகும். அத்துடன், அநேக ஜனங்கள் சத்தியத்திற்கு வந்துகொண்டிருப்பதால், புதிய ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுகின்றன; எனவே, அவற்றைக் கட்டுவதற்கு வாலண்டியர்கள் தேவைப்படுகிறார்கள். ஒரு தம்பதியருக்கு கட்டுமான வேலை எதுவும் தெரியாதபோதிலும் மண்டலக் கட்டடக் குழுவுக்கு உதவ முன்வந்தார்கள். காலப்போக்கில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போது செங்கல் வைத்துச் சுவரெழுப்பும் வேலையில் உதவுகிறார்கள். அந்த மனைவி குறிப்பிட்டதாவது: “மற்றவர்களோடு சேர்ந்து வேலை செய்வதால் நெருங்கிய நட்புகள் மலர்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு நாள் முடிவிலும் உடல் களைத்துப் போனாலும் ஆன்மீகப் புத்துணர்ச்சியோடு திரும்புகிறோம்.”
6 பிரசங்க வேலையில்: இன்று நாம் மனமுவந்து செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை ராஜ்ய பிரசங்கிப்பு வேலையாகும். பைபிளின் புத்திமதியைப் புரிந்துகொள்ளவும் அதற்கு இசைவாய் நடக்கவும் ஜனங்களுக்கு உதவும்போது, வாழ்க்கையில் ஒரு நோக்கத்தை அவர்கள் கண்டடைகிறார்கள்; தீய பழக்கவழக்கங்களை விட்டொழிக்க பலத்தையும் பெறுகிறார்கள். பைபிளிலுள்ள ஒளிமயமான எதிர்கால நம்பிக்கை பற்றியும் கற்றுக்கொள்கிறார்கள். பைபிள் கல்வியைப் புகட்டுவதன் மூலம், மற்றவர்களுக்கு நிரந்தர நன்மை செய்வதோடு, மகிழ்ச்சியும் அளிக்கிற வாலண்டியர் சேவையை நாம் செய்கிறோம். (யோவா. 17:3; 1 தீ. 4:16) ஒருவேளை நம் சூழ்நிலை இடங்கொடுத்தால், துணைப் பயனியராகவோ ஒழுங்கான பயனியராகவோ சேவை செய்யலாம்; தேவை அதிகமுள்ள இடங்களுக்கு மாறிச்சென்று ஊழியம் செய்யலாம்; வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ளலாம்; இவ்வாறு இந்த வேலையில் இன்னும் அதிகளவில் பங்குபெறலாம்.
7 மேசியாவின் ஆளுகை ஆரம்பிக்கும்போது கடவுளுடைய ஜனங்கள் ‘மனப்பூர்வமாய் தங்களை அளிப்பார்கள்’ என தாவீது ராஜா தீர்க்கதரிசனம் உரைத்தார். (சங். 110:3; NW அடிக்குறிப்பு) கடைசிக் கட்ட ஆன்மீக அறுவடையை யெகோவா தீவிரப்படுத்துவதால் மனமுவந்து செய்வதற்கு எக்கச்சக்கமான வேலை இருக்கிறது. (ஏசா. 60:22) “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களா? (ஏசா. 6:8) உண்மையில், உதவ முன்வருகிற மனப்பான்மையை வெளிக்காட்டுவதன் மூலம் யெகோவாவை நாம் பிரியப்படுத்துகிறோம்; அளவிலா ஆசீர்வாதங்களையும் பெறுவோம்.
[கேள்விகள்]
1. தாவீதும் நெகேமியாவும் உதவ முன்வருகிற மனப்பான்மையை எப்படி வெளிக்காட்டினார்கள்?
2. உதவ முன்வருகிற மனப்பான்மையை கிறிஸ்தவர்கள் ஏன் வெளிக்காட்ட வேண்டும்?
3. சபை கூட்டங்களில் உதவ முன்வருகிற மனப்பான்மையை எப்படி வெளிக்காட்டலாம்?
4. உதவ முன்வருகிற மனப்பான்மையை வெளிக்காட்டும் பிற வழிகள் யாவை?
5. ராஜ்ய மன்றம் சம்பந்தமாக என்னென்ன வேலைகளுக்கு வாலண்டியர்கள் தேவைப்படுகிறார்கள்?
6. வாலண்டியர் சேவையிலேயே பிரசங்க வேலை ஏன் மிக முக்கியமானதாய் இருக்கிறது?
7. உதவ முன்வருகிற மனப்பான்மை முக்கியமாக இன்று ஏன் அவசியம்?