“கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!” மாவட்ட மாநாட்டை முழுமூச்சுடன் உலகெங்கும் விளம்பரப்படுத்துதல்
பிரஸ்தாபிகள் மீண்டும் விசேஷ கைப்பிரதியை வினியோகிப்பார்கள்
1 கடந்த வருடம் “மீட்பு விரைவில்!” மாவட்ட மாநாட்டை உலகெங்கும் விளம்பரப்படுத்தியது, ஆர்வம் காட்டியவர்களிடம் நல்ல விதத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. விசேஷ அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டு மாநாட்டிற்கு வந்தவர்கள், முதன்முறையாக வாழ்க்கையில் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து அபரிமிதமான ஆன்மீக உணவை ருசித்தார்கள். (ஏசா. 65:13) ஒன்றுபட்ட கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் அன்பான கூட்டுறவை அவர்கள் அனுபவித்தார்கள். (சங். 133:1) “கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!” மாவட்ட மாநாட்டில் எத்தனை பேர் முடியுமோ அத்தனை பேரும் கலந்துகொள்ள உதவுவதற்கு, விசேஷ கைப்பிரதியை உலகெங்கும் நாம் மீண்டும் வினியோகிப்போம்.
2 கடந்த வருட பலன்கள்: “மீட்பு விரைவில்!” மாவட்ட மாநாட்டை விளம்பரப்படுத்தியதால் கிடைத்திருக்கிற அருமையான பலன்களை உலகெங்குமிருந்து வந்த அறிக்கைகள் காட்டின. அநேக இடங்களில் சாதகமான விதத்தில் மாநாட்டைப்பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டது. உதாரணத்திற்கு, ஒரு நகரத்தில் செய்தித்தாள் ஒன்று இந்த அழைப்பிதழ் வினியோகிப்பைப்பற்றி ஆறு பத்தி கட்டுரையை வெளியிட்டது; “மாநாட்டிற்கு முன்பு அக்கம்பக்கத்திலுள்ள ஒவ்வொருவரையும் அழைப்பதற்குச் சாட்சிகள் ஊக்கத்துடன் விசேஷ முயற்சி எடுத்து வந்திருக்கிறார்கள்; அதற்காக, அதிக நேரம் ஊழியம் செய்திருக்கிறார்கள், தொலை தூரம் நடந்திருக்கிறார்கள், வேக வேகமாகப் பேசியிருக்கிறார்கள்.” மற்றொரு நகரத்தில், கைப்பிரதியை வினியோகிக்கும் ஏற்பாடு உள்ளூர் மீடியாவின் கவனத்தைக் கவர்ந்தது; மிகப் பெரிய அளவில் செய்தி விளம்பரத்தைக் கொடுக்க இது வழிசெய்தது. மாவட்ட மாநாட்டிற்கு முன்பாக மூன்று செய்தித்தாள்களாவது நம் வேலையைப்பற்றி சாதகமாக அறிக்கை செய்தன. ஒரு செய்தித்தாளின் நிருபர், ஞாயிறு வெளியீட்டில் பல கட்டுரைகளை இரண்டு பக்கங்களுக்கும் அதிகமாக எழுதினார். அதில் நம் நம்பிக்கைகள், நம் சகோதரத்துவம், கைப்பிரதி வினியோகம், மாவட்ட மாநாடு சம்பந்தமான விவரங்கள் விளக்கப்பட்டது. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பிரஸ்தாபி ஒருவர் அழைப்பிதழைப்பற்றி பேச்செடுத்ததும் அந்த வீட்டுக்காரர் “தெரியும், இப்போதுதான் இதைப்பற்றி செய்தித்தாளில் வாசித்தேன்!” என்று இடைமறித்து சொன்னார். “இதைப்பற்றித்தான் இப்போது வாசித்துக்கொண்டிருந்தேன், அதற்குள் நீங்களே வந்துவிட்டீர்கள்! இது எனக்குரிய அழைப்பிதழா?” என்று இன்னொரு வீட்டுக்காரர் ஆச்சரியத்துடன் கேட்டு வாங்கிக்கொண்டார். “இது யெகோவாவின் சாட்சிகள் செய்கிற மிக அன்பான காரியம்” எனவும் அவர் சொன்னார்.
3 ஆர்வம் காட்டிய அநேகர் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்பிதழோடு மாநாட்டு வளாகங்களுக்கு வந்தார்கள். மாநாட்டு நிகழ்ச்சிகளைக் கேட்பதற்குத் தூரமான நகரங்களிலிருந்து ஆர்வம் காட்டிய அநேகர் கார்களில் வந்திருந்தார்கள். மற்றவர்களை அழைப்பதற்கு நாம் ஊக்கமாய் முயற்சி எடுத்தது அதிகமதிகமானோர் மாநாட்டில் கலந்துகொள்ள வழிசெய்தது; ஒரு நாட்டில் கூடிவந்தோரின் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிட 27 சதவீதம் அதிகமாய் இருந்தது.
4 பிராந்தியம் முழுவதிலும் வினியோகித்து முடிப்பது: நீங்கள் கலந்துகொள்ளப்போகும் மாநாடு துவங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பிருந்து நீங்கள் கைப்பிரதியை வினியோகிக்க ஆரம்பிக்கலாம். உங்கள் சபைக்குரிய பிராந்தியம் முழுவதிலும் கைப்பிரதியை வினியோகித்து முடிப்பதற்கு எல்லாவித முயற்சியையும் எடுக்க வேண்டும். மிகப் பெரிய பிராந்தியத்தை உடைய சபைகளிலுள்ள பிரஸ்தாபிகள் மாநாடு துவங்குவதற்கு முந்தைய வாரத்தில், பிறருடைய கவனத்தைக் கவராதபடி கைப்பிரதிகளைப் பூட்டிய வீடுகளில் விட்டுவரலாம். சபைகள் பெற்றுக்கொண்ட கைப்பிரதிகள் அனைத்தையும் வினியோகிப்பதற்கும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குப் பிராந்தியம் முழுவதிலும் கைப்பிரதியைக் கொடுப்பதற்கும் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கும் கூடுதலாக இருக்கும் கைப்பிரதிகளைச் சபையிலுள்ள பயனியர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
5 என்ன சொல்வது: இது போன்று ஏதாவதை நீங்கள் சொல்லலாம்: “வரவிருக்கும் முக்கியமான நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை உலகெங்கும் வினியோகிக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். இது உங்களுக்குரிய அழைப்பிதழ். இந்த அழைப்பிதழில் கூடுதல் தகவல்கள் கொடுக்கப்பட்டிருப்பதையும் நீங்கள் காண்பீர்கள்.” சுருக்கமாகப் பேசி அழைப்பிதழை வினியோகிப்பது பெருமளவு கைப்பிரதிகளைக் கொடுத்து முடிப்பதற்கு வழிசெய்யும். வீட்டுக்காரர் கேள்விகள் கேட்டால், பதில் சொல்ல நேரம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது உண்மைதான். ஆர்வம் காட்டுபவர்களைச் சந்தித்தால் குறித்து வைத்துக்கொண்டு, முடிந்த மட்டும் சீக்கிரத்தில் மீண்டும் போய்ச் சந்தியுங்கள்.
6 கிறிஸ்துவைப் பின்பற்ற நாம் கடினமாய் முயற்சி எடுப்பது எவ்வளவு அவசியம்! (யோவா. 3:36) வரவிருக்கும் நம் மாவட்ட மாநாடு, அதில் கலந்துகொள்கிற அனைவரும் அதையே செய்ய உதவும். “கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!” மாவட்ட மாநாட்டைப்பற்றி முழுமூச்சுடன் உலகெங்கும் விளம்பரப்படுத்துவதால் மிகப் பெரிய அளவில் மீண்டும் சாட்சிகொடுக்கப்படுமென நாம் நிச்சயமாய் எதிர்பார்க்கலாம். எனவே, மாநாட்டிற்கு வரும்படி எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரையும் அழைப்பதில் ஊக்கமாய் ஈடுபடுங்கள். உலகளவில் கைகோர்க்கும் இந்த வினியோகிப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கிற முயற்சிகளை யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக.