குடும்பமாக யெகோவாவைத் துதியுங்கள்
1 பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்கள் பல வேலைகளை குடும்பமாகச் செய்தார்கள். வீட்டு வேலைகளைச் சேர்ந்து செய்தார்கள்; முக்கியமாக யெகோவாவை குடும்பமாக வழிபட்டார்கள். (லேவி. 10:12-14; உபா. 31:12) இன்றோ, குடும்பமாகச் சேர்ந்து காரியங்களைச் செய்வது பல இடங்களில் அரிதாகி வருகிறது. இருந்தாலும், குடும்பமாகச் சேர்ந்து வேலைகளைச் செய்வதன் முக்கியத்துவத்தை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள்; குறிப்பாக கடவுளை வழிபடுவதில் குடும்பமாக ஈடுபடுவது எந்தளவு முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். குடும்பத்தைத் துவக்கி வைத்தவர், குடும்பங்கள் தம்மை ஒன்றுபட்டு வழிபடுவதைப் பார்க்கையில் எவ்வளவாய் சந்தோஷப்படுவார்!
2 குடும்பமாகப் பிரசங்கியுங்கள்: நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலையில் குடும்பமாக ஈடுபடுவது குடும்ப பந்தத்தைப் பலப்படுத்துகிறது. எனவே, ஒரு மூப்பர் சபையிலுள்ள மற்றவர்களுடன் பிரசங்க வேலையில் ஈடுபடுவதோடு தன் மனைவி, பிள்ளைகளுடனும் தவறாமல் ஊழியம் செய்ய வேண்டும். (1 தீ. 3:4, 5) பிஸியான அட்டவணையின் மத்தியிலும் பயணக் கண்காணிகள் தங்கள் மனைவியுடன் சேர்ந்து ஊழியம் செய்வதற்காக நேரம் ஒதுக்குகிறார்கள்.
3 பிள்ளைகளுடன் சேர்ந்து பெற்றோர் பிரசங்க வேலையில் ஈடுபடும்போது, அந்த வேலையில் பிள்ளைகள் முன்னேறுவதற்கு அவர்களால் உதவ முடிகிறது. அப்போது ஊழியத்தில் தங்கள் பெற்றோர் அனுபவிக்கிற மகிழ்ச்சியையும் திருப்தியையும் பிள்ளைகளால் காண முடியும்; அதோடு, யெகோவாமீதும் சக மனிதர்மீதும் அவர்கள் வைத்திருக்கிற அன்பையும்கூட காண முடியும். (உபா. 6:5-7) பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி வருகையிலும்கூட அவர்களுடன் சேர்ந்து பெற்றோர் ஊழியம் செய்வது முக்கியம். ஒரு தம்பதியர் 15-க்கும் 21-க்கும் இடைப்பட்ட வயதிலிருந்த தங்கள் மூன்று மகன்களுடன் தவறாமல் தொடர்ந்து ஊழியத்தில் ஈடுபட்டார்கள். அந்தத் தகப்பன் இவ்வாறு சொன்னார்: “ஒவ்வொரு தடவையும் அவர்களுக்கு எதையாவது நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம். அது இனிமையான, உற்சாகமூட்டுகிற அனுபவமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம்.’
4 சேர்ந்து தயாரியுங்கள்: ஊழியத்திற்காக ஒன்றுசேர்ந்து தயாரிப்பதும்கூட பயனுள்ளது என்பதை அநேக குடும்பத்தார் அறிந்திருக்கிறார்கள். குடும்ப அங்கத்தினரோடு சேர்ந்து பிரஸ்தாபியாகவோ, வீட்டுக்காரராகவோ மாறி மாறி நடித்துப் பழகும்போது பிள்ளைகள் குதூகலமடைகிறார்கள். சிலர் தங்களுடைய குடும்பப் படிப்பின் முடிவில் இவ்வாறு நடித்துப் பழகுவதற்காக சில நிமிடங்கள் ஒதுக்குகிறார்கள்.
5 முக்கியத்துவம் வாய்ந்ததும், திருப்தியளிப்பதுமான வேலைகளில் நம் அன்பானவர்களுடன் ஈடுபடும்போது நம் மகிழ்ச்சி அதிகரிக்கிறது. வீட்டுக்கு வீடு ஊழியத்திலும், மறுசந்திப்புகள் செய்வதிலும் பைபிள் படிப்புகளை நடத்துவதிலும் குடும்ப அங்கத்தினர்கள் ஒன்றுசேர்ந்து ஈடுபடும்போது எத்தனை இன்பம் அடைகிறார்கள்! இவ்வாறு யெகோவாவை குடும்பமாக நீங்கள் வணங்கும்போது, ‘நானும் என் வீட்டாருமோவென்றால், யெகோவாவையே சேவிப்போம்’ என்று மகிழ்ச்சி பொங்க உங்களால் சொல்ல முடியும்.—யோசு. 24:15.