புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி
‘நாம் களிமண்—யெகோவா நம் குயவர்’ என்ற பொருளில் ஏசாயா 64:8-ன் அடிப்படையில் இந்த ஆண்டு விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் வாயிலாக நமக்கு கிடைக்கும் வேதப்பூர்வ ஆலோசனைகள் மிகப்பெரிய குயவராயிருக்கும் யெகோவாவின் ஞானம், நீதி, வல்லமை, அன்பு ஆகியவற்றின்மீது போற்றுதலையும் புரிந்துகொள்ளுதலையும் அதிகரிக்க உதவும்.
“ஊழியத்தில் கனத்திற்குரிய பாத்திரங்களாய் சேவை செய்தல்” என்ற தலைப்பில் வட்டாரக் கண்காணி பேச்சு கொடுப்பார்; சத்தியத்தை அறிந்து அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் அபரிமிதமாக ஆசீர்வாதத்தை ஏராளமானோர் எப்படி அனுபவித்து வருகிறார்கள் என்பதை இப்பேச்சு காட்டும். “தியானிப்பது உங்களைப் பாதுகாக்கும்” என்ற பேச்சு யெகோவாவின் நீதியான நியமங்களை ஆழ்ந்து சிந்திப்பது எவ்வாறு நம்மைப் பாதுகாக்கிறது என்பதைக் காட்டும். “‘இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம்’ தரிக்காதிருங்கள்,” “பெரிய குயவரால் வடிவமைக்கப்படுங்கள்” ஆகிய தலைப்புகளில் சிறப்புப் பேச்சாளர் உரையாற்றுவார். “யெகோவாவுக்கு பயனுள்ளவர்களாய் இருக்கிற இளைஞர்கள்,” “வடிவமைக்கும் பணியில் பெற்றோரின் முக்கிய பங்கு” ஆகிய பேச்சுகள் பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் உற்சாகமளிக்கும். நடிப்புகள் மற்றும் பேட்டிகள் வாயிலாக, நம் சகோதர சகோதரிகள் ஊழியத்தில் எதைச் சாதித்து வருகிறார்கள் என்பதைக் கேட்டு உணர்ந்துகொள்வது நமக்குச் சிலிர்ப்பூட்டும். தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலமாக தங்களுடைய ஒப்புக்கொடுத்தலை வெளிக்காட்ட விரும்புகிறவர்கள் நடத்தும் கண்காணியிடம் அதை விரைவில் தெரிவிக்க வேண்டும். விசேஷ மாநாட்டு தின வாரத்தில் படிக்கவிருக்கும் காவற்கோபுர பிரதியை மறக்காமல் கொண்டுவாருங்கள்.
மிகப்பெரிய குயவர் எதையெல்லாம் செய்ய நோக்கம் கொண்டிருக்கிறாரோ அதையெல்லாம் நிறைவேற்றுகிறார். ஆனால் அவர் நம்மை வடிவமைப்பதற்கு எந்தளவுக்கு வளைந்து கொடுக்கிறோம் என்பது அவரவர் கையில்தான் உள்ளது. யெகோவாவின் நியதிகளுக்கும் சரிப்படுத்துதல்களுக்கும் நாம் ஞானமாய் வளைந்து கொடுக்கும்போது, குயவனின் சக்கரத்திலுள்ள களிமண்ணைப்போல, சரிப்படுத்தப்பட்டு, மெருகூட்டப்பட்டு உபயோகமுள்ள பாத்திரங்களாக மாறுவோம். நாம் யெகோவாவுடன் ஒத்துழைக்கும்போது, அவருடைய பேரரசுரிமையை மகிமைப்படுத்தி அநேக ஆசீர்வாதங்களை அறுவடை செய்வோம்.