பைபிள் படிப்பு நடத்த தயங்காதீர்கள்!
1 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் ஊக்கமாய் பங்குகொள்வதன்மூலம் நம் பிராந்தியத்தில் உள்ளவர்களுக்குத் தயங்காமல் ‘நன்மை செய்கிறோம்.’ (நீதி. 3:27) கடவுளுடைய ஆட்சியில் பொன்னான காலம் வரவிருப்பதை ஜனங்களுக்குச் சொல்வதே அறிவிக்கத்தக்க மிகச் சிறந்த செய்தியாகும். சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதன் மூலமோ பிரசுரங்களை அளிப்பதன் மூலமோ ராஜ்ய நம்பிக்கையை அறிவிப்பதில் நீங்கள் பெருமளவு பங்குகொள்ளலாம்; எனினும், நீங்கள் யாருக்கும் பைபிள் படிப்பு நடத்தாதிருந்தால் இந்த இலக்கை எட்டுவதற்கு இப்போது முயற்சி செய்யலாமே.
2 சில சமயங்களில், பைபிள் படிப்பு நடத்தாதிருப்பதற்கு, அது பற்றிய நம்முடைய எண்ணமே மிகப் பெரிய தடைகளில் ஒன்றாய் ஆகிவிடுகிறது. படிப்பு நடத்துமளவுக்கு திறமையில்லை அல்லது நேரமே இல்லை என நினைப்பதால் சிலர் பைபிள் படிப்பு நடத்தத் தயங்குகிறார்கள். அப்படித் தயங்காமல் பைபிள் படிப்பு நடத்த பின்வரும் ஆலோசனைகள் உங்களுக்கு உதவும்.—மத். 28:19; அப். 20:20.
3 திறமையில்லை என்ற எண்ணம்: ஒருவேளை நீங்கள் அதிகம் படிக்காததாலோ வேறு ஏதாவது காரணத்தாலோ பைபிள் படிப்பு நடத்த உங்களுக்குத் திறமையில்லை என்று நீங்கள் நினைக்கலாம். முதல் நூற்றாண்டில் சத்தியத்தைத் திறம்பட்ட விதத்தில் பிரசங்கித்த கிறிஸ்தவர்கள், ‘கல்வியறியாத சாமான்யராக’ இருந்தார்கள். மற்றவர்களுக்கு சத்தியத்தைக் கற்றுக்கொடுக்க எது இவர்களுக்கு உதவியது? ‘இவர்கள் இயேசுவுடன் இருந்ததே.’ (அப். 4:13, தி.மொ.) ஆம், மிகப் பெரிய போதகரான இயேசுவிடமிருந்து இவர்கள் கற்றிருந்தார்கள்; இவருடைய போதனைகளும் கற்பிக்கும் முறைகளும் நமக்காக பைபிளில் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் அதிகம் படிக்காதவராக இருக்கலாம். ஆனால், கடவுளையும் அவருடைய நோக்கங்களையும்பற்றி நீங்கள் இப்போது பெற்றுவரும் கல்வி வேறெந்த கல்வியையும்விட மிகமிக உயர்ந்தது.—ஏசா. 50:4; 2 கொ. 3:5.
4 தவறு செய்த ராஜாக்களையும் உயர் பதவியிலிருந்த சிலரையும் கண்டிப்பதற்கு யெகோவா சில சமயங்களில் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தினார். இவர்களில் ஆமோஸ் போன்ற சிலர் சாதாரண ஜனங்களாய் இருந்தார்கள். “நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப் பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்” என்று தன்னைப்பற்றி அவர் சொன்னார். (ஆமோ. 7:14) இருந்தாலும், கன்றுக்குட்டி வணக்கத்தில் ஈடுபட்டிருந்த ஆசாரியனான அமத்சியாவிடம் தண்டனைத் தீர்ப்பை அறிவிக்க அவர் தயங்கவில்லை. (ஆமோ. 7:16, 17) நாம் கடவுளுடைய வேலையைச் செய்கிறோம் என்பதையும் அதைச் செய்வதற்குத் தேவையான தகுதியை அவர் தருவார் என்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.—2 தீ. 3:16.
5 வேலைப்பளு: வேலைப்பளு அழுத்தினாலும், ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்வதற்கென நீங்கள் ஏற்கெனவே நேரத்தை ஒதுக்கியிருப்பீர்கள். ஊழியத்தில் பெருமகிழ்ச்சி தரும் அம்சங்களில் பைபிள் படிப்பு நடத்துவதும் ஒன்றாகும். ஒருவருடைய வாழ்க்கையில் யெகோவாவின் வார்த்தை ஏற்படுத்தும் மாற்றங்களைக் கண்கூடாகப் பார்ப்பது பாக்கியமே! (எபி. 4:12) “சத்தியத்தை அறிகிற அறிவை அடைய” ஒருவருக்கு உதவுவதற்காக நாம் தியாகங்களை செய்யும்போது யெகோவா பூரித்துப்போகிறார். (1 தீ. 2:4) ஒருவர் இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு கடவுளுடைய ஊழியராக முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவதைப் பார்த்து தேவதூதர்களும்கூட அகமகிழ்ந்து போகிறார்கள்.—லூக். 15:10.
6 “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் [கடவுள்] சித்தமுள்ளவராயிருக்கிறார்.” (1 தீ. 2:4) தயங்காமல் பைபிள் படிப்புகளை நடத்துவதன்மூலம், கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக செயல்படுவது நமக்குக் கிடைத்த பாக்கியம், அல்லவா?
[கேள்விகள்]
1. எந்த விதத்தில் ‘நன்மை செய்ய’ நாம் தயங்குவதில்லை?
2. பைபிள் படிப்பை ஆரம்பிக்க நம்மில் சிலர் ஏன் தயங்கலாம்?
3. பைபிளைக் கற்பிக்க நாம் ஏன் தகுதி பெற்றிருக்கிறோம்?
4. ஆமோஸின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
5. வேலைப்பளுவின் மத்தியிலும் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு நாம் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?
6. கடவுளுடைய சித்தத்தை செயல்படுத்துவதில் என்ன பாக்கியம் பெற்றிருக்கிறோம்?