ராஜ்ய நம்பிக்கையை அறிவிக்கிறோம்
1 கடினமான இந்தக் கடைசி காலத்தில், அநேகர் எந்த நம்பிக்கையும் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். (எபே. 2:12) இன்னும் சிலர் முட்டாள்தனமாக, சொத்துசுகங்கள், அரசியல் தலைவர்கள், நவீன விஞ்ஞானம் போன்றவற்றின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், எதிர்காலத்தைப் பற்றிய நிஜமான நம்பிக்கை நமக்கிருப்பதற்காக நாம் அதிக சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கிறோம். அந்த நம்பிக்கைதானே, ‘நமக்கு நிலையும் உறுதியுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது’!—எபி. 6:19.
2 கடவுளுடைய ராஜ்யத்தில் இந்தப் பூமி பூங்காவனமாய் மாற்றப்படும். இறந்துபோயிருக்கும் நம் அன்புக்கும் பாசத்துக்கும் உரியவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (அப். 24:15) ஏழ்மை, அநீதி, வியாதி, வயோதிகம், மரணம் ஆகியவை இனி இருக்காது. (சங். 9:18; மத். 12:20, 21; வெளி. 21:3, 4) சீக்கிரத்தில் நிறைவேறவிருக்கிற யெகோவாவின் வாக்குறுதிகளில் இவை சில மட்டுமே. இந்த வாக்குறுதிகளில் எது நிறைவேறுவதைக் காண முக்கியமாய் நீங்கள் ஆவலோடு காத்திருக்கிறீர்கள்?
3 நற்செய்தியைப் பிரசங்கியுங்கள்: ராஜ்ய நம்பிக்கையை நமக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்ளக்கூடாது. கடவுளிடமும் ஜனங்களிடமும் நமக்குள்ள அன்பு இயேசுவைப் பின்பற்றி, ‘தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் . . . சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்’ நம்மை ஊக்கப்படுத்துகிறது. (லூக். 4:18) அப்போஸ்தலன் பவுல், சந்தைவெளிகளிலும் ஜனங்களை எங்கெல்லாம் பார்த்தாரோ அங்கெல்லாமும் பிரசங்கித்தார். அவர் ஊழியத்தில் பக்திவைராக்கியத்தோடு ஈடுபட்டார். (அப். 18:5) அவரைப் போலவே ஊழியத்தில் ஆர்வத்துடன் நாம் கலந்துகொள்ள வேண்டும்; இது, ‘உலகக் கவலைகளாலும், ஐசுவரியத்தின் மயக்கத்தாலும்’ நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கை எனும் சுடர் மங்கிவிடாதபடி காக்கும்.—மாற். 4:18.
4 ராஜ்ய செய்தியை கேட்க மறுப்பவர்களையோ அதில் ஆர்வம் காட்டாதவர்களையோ நம்மை நேருக்கு நேர் எதிர்ப்பவர்களையோ நாம் சந்திக்கும்போது நம் ராஜ்ய நம்பிக்கை மங்கிவிடுவதில்லை. ‘நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாய்’ இருக்கிறோம். (எபி. 10:23) நாம், ‘சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படுவதில்லை.’ (ரோ. 1:16) நம்முடைய நம்பிக்கையில் உறுதியாய் நிலைத்திருப்பதையும் சகித்திருப்பதையும் பார்க்கும் சிலர் பின்னர் நற்செய்திக்குச் செவிசாய்க்கலாம்.
5 பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, உலக நிலைமை சீரழிந்து வருவதைப்பற்றி மக்களிடம் நாம் சொல்வது சரியே. இருந்தாலும் அழிவைப்பற்றி பிரசங்கிப்பது நம் நோக்கமல்ல. மாறாக, நம்முடைய ஊழியம் ராஜ்ய நம்பிக்கையிடமே, அதாவது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியிடமே கவனத்தைத் திருப்புகிறது. “முடிவுபரியந்தம்” “நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி” முழு உறுதியோடும் ஊக்கத்தோடும் இந்த நற்செய்தியை நாம் பிரசங்கிப்போமாக.—எபி. 6:12.