ஒரு பைபிள் படிப்பாவது நடத்த இலக்கு வையுங்கள்
1 “வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்.” (யோவா. 4:35) இயேசு கிறிஸ்து கூறிய இந்த வார்த்தைகள், இன்று கிறிஸ்தவ ஊழியர்கள் எதிர்ப்படும் நிலைமைக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.
2 யெகோவாவின் வழிகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிற நேர்மை உள்ளம் படைத்தவர்களை இன்றும் நம்மால் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு வருடமும் முழுக்காட்டுதல் எடுக்கும் புதிய சீஷர்களின் எண்ணிக்கை இதற்கு அத்தாட்சி அளிக்கிறது. பைபிள் படிப்பு நடத்த உண்மையிலேயே நீங்கள் ஆர்வமுள்ளவராய் இருந்தால் நீங்கள் என்ன செய்யலாம்?
3 ஒரு இலக்கு வையுங்கள்: முதலில் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்து அதைத் தொடர்ந்து நடத்துவதற்கு இலக்கு வையுங்கள். வெளி ஊழியத்திற்குச் செல்லும்போது இந்த இலக்கை உங்கள் மனதில் வைத்திருங்கள். கிறிஸ்தவர்களாகிய நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையில், பிரசங்கிப்பதோடு கற்பிப்பதும் உட்பட்டிருப்பதால் பைபிள் படிப்பு நடத்துவதில் நாம் எல்லாருமே அதிகமாக ஈடுபட வேண்டும்.—மத். 24:14; 28:19, 20.
4 மனதில் வைக்க வேண்டிய மற்ற குறிப்புகள்: ராஜ்ய பிரஸ்தாபிகள் யெகோவாவிடம் மனதைத் திறந்து ஜெபம் செய்வது அவசியம். பைபிளை புரிந்துகொள்ள கடவுளிடம் உதவி கேட்டு ஜெபித்த மக்களை சில சமயங்களில் நாம் சந்திக்கிறோம். இப்படிப்பட்ட மக்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்த யெகோவா நம்மைப் பயன்படுத்துகிறார் என்றால் அது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்!—ஆகா. 2:7, NW; அப். 10:1, 2.
5 ஒரு சகோதரி, பைபிள் படிப்பு வேண்டுமென்று ஜெபம் செய்துவிட்டு பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதிகளை தான் வேலை செய்யுமிடத்தில் எல்லாருக்கும் தெரிகிறவண்ணம் வைத்தார். ஒரு பெண்மணி அவற்றில் ஒரு துண்டுப்பிரதியை எடுத்து, வாசித்துவிட்டு, அதிலிருந்த கூப்பனை பூர்த்தி செய்ய ஆரம்பித்த போது நம்முடைய சகோதரி அவரிடம் பேசி, ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க முடிந்தது.
6 ஒரு பைபிள் படிப்பாவது நடத்த வேண்டுமென்று நீங்கள் வைத்திருக்கும் இலக்கை எட்டுவதற்கு, பைபிள் படிப்புகளை ஆரம்பித்து, நடத்துவதில் திறமைசாலிகளாக இருக்கிற சக பிரஸ்தாபிகள் உங்களுக்கு உதவலாம். உங்கள் இலக்கை எட்ட உதவுமாறு யெகோவாவிடம் ஜெபியுங்கள், அதை எட்டுவதற்கு உங்களுக்கு கிடைக்கும் எல்லா உதவிகளையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒருவேளை, சீக்கிரத்திலேயே நீங்களும்கூட ஒரு பைபிள் படிப்பு நடத்துவதில் வரும் சந்தோஷத்தைப் பெறுவீர்கள்.