இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு ஆறுதல் அளியுங்கள்
1 ஆறுதல் அளிக்கவேண்டிய அவசியம், மனித சரித்திரத்திலேயே என்றுமில்லாத அளவு இப்போது ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய ராஜாவாகிய கிறிஸ்து இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாக, “இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு” நாமும் ‘காயங்கட்டுகிறோம்.’—ஏசா. 61:1.
2 அணுகுமுறை: ஊழியத்தில் நாம் சந்திக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டுமென்றால், நம்முடைய அணுகுமுறை உற்சாகம் அளிக்கும் விதத்தில் இருப்பது அவசியம், அதேசமயம் நம் உரையாடலில் சமநிலை காப்பதும் அவசியம். உலகத்தில் நடக்கிற கெட்ட காரியங்களைப் பற்றியும் பொய் கோட்பாடுகள் பற்றியும் நாம் அதிகம் பேசாமல் இருக்கையில், பைபிள் சத்தியமும் பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றிய கடவுளுடைய ஆறுதலான வாக்குறுதியும் நம் உரையாடலில் முக்கிய இடத்தைப் பெறும். அதற்கென்று, அர்மகெதோனைப்பற்றி நாம் பேசவே கூடாது என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. “கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தை” மட்டுமல்ல “நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளை” குறித்தும் அறிவித்து, ‘துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்க’ வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. என்றாலும், அர்மகெதோன் பற்றிய எச்சரிப்பும் அது கொண்டுவரப்போகும் நாசகரமான விளைவுகள் பற்றிய விளக்கமும் நம் ஊழியத்தின் கருப்பொருளாகிய கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை மறைத்துவிடக்கூடாது.—ஏசா. 61:2; எசே. 3:18; மத். 24:14.
3 வீட்டுக்கு வீடு ஊழியத்தில்: வியாதி, அன்பான ஒருவரின் மரணம், அநியாயங்கள், அல்லது பொருளாதார பிரச்சினைகள் போன்றவற்றால் மனமுடைந்திருக்கும் மக்களை நாம் அடிக்கடி சந்திக்கிறோம். இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாக, ஊழியத்தில் நாம் சந்திக்கும் நபர்களைப் பார்த்து “மனதுருகி,” அவர்களிடம் பரிவிரக்கம் காட்டுகிறோம். (லூக். 7:13; ரோ. 12:15) வீட்டுக்காரர் எதிர்ப்படும் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட ஓரிரண்டு வசனங்களை நாம் எடுத்துக் காட்டினாலும், அவர் தன் மனதிலிருப்பவற்றை சொல்ல நாம் அனுமதிக்க வேண்டும், ஆம், ‘கேட்கிறதற்குத் தீவிரமாய்’ இருக்க வேண்டும். (யாக். 1:19) அவர் சொல்வதை காதுகொடுத்து கேட்டால்தான் அவருக்கு எப்படிப்பட்ட ஆறுதல் தேவைப்படுகிறது என்பதை நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.
4 உரையாடலின்போது, பொருத்தமான சமயம் பார்த்து, “பைபிளிலிருந்து ஆறுதலளிக்கும் சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்” என்று வீட்டுக்காரரிடம் சொல்லலாம். அந்த நபர் சொல்லும் ஒவ்வொரு தவறான கருத்தையும் திருத்த முயலாமல், பகுத்துணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். வேத வசனங்களைப் பயன்படுத்தி வீட்டுக்காரருடைய மனதிற்கு தெம்பளிப்பதே நம் முக்கிய குறிக்கோளாக இருப்பதால், அவருக்குத் தேவையான உற்சாகத்தையும் ஆறுதலையும் அளிப்பதிலுமே நாம் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக, வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்ற புத்தகத்தில் 117-121 பக்கங்களில், “ஊக்கமூட்டுதல்” என்ற தலைப்பின்கீழ் உள்ள விஷயங்களை அவருடன் நீங்கள் கலந்தாராயலாம். அல்லது, மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் என்ற துண்டுப்பிரதியை அவரிடம் கொடுத்து, அதிலுள்ள உற்சாகமளிக்கும் விஷயங்களையும் கலந்தாலோசிக்கலாம்.
5 மற்றவர்களுக்கு ஆறுதலளிக்க முற்படுங்கள்: உங்கள் அக்கம்பக்கத்தில், வேலை செய்யுமிடத்தில், பள்ளியில், அல்லது குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவருக்கு ஆறுதல் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட நபர்களுக்கு பைபிளிலிருந்து ஆறுதலளிக்க நீங்கள் ஏன் அவர்களுடைய வீட்டிற்கே சென்று சந்திக்க முயற்சி செய்யக்கூடாது? அவர்களுக்கு ஏன் ஆறுதல் தேவை என்பதை நீங்கள் அறிந்திருப்பதால் அந்தச் சூழலுக்குத் தக்கவாறு உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ளலாம். சிலர், கடிதங்கள் எழுதி அல்லது தொலைபேசியில் பேசி மற்றவர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறார்கள். அயலகத்தார்மீது நமக்கு உண்மையான அன்பு இருந்தால், அவர்களிடம் அனுதாபத்துடன் நடந்துகொண்டு, வேதவசனங்களிலிருந்து அவர்களுக்குத் தேவையான ஆறுதல் அளிக்க நாம் தூண்டப்படுவோம்.—லூக். 10:25-37.
6 ஆம், துக்கிப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும், நொறுங்கிப்போன இருதயங்களுக்குத் தெம்பளிக்கவும், ஒளிமயமான எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை மக்களின் மனதில் விதைக்கவும் நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். உலகெங்கிலுமுள்ள மக்களுக்கு இப்படிப்பட்ட ஆறுதலே அவசியமாக இருக்கிறது. கடவுள் வாக்குறுதியளித்திருக்கும் அநேக நல்ல காரியங்களைப்பற்றி நேர்மை மனமுடையவர்களிடம் உற்சாகம் பொங்க நாம் பேசுகையில் அது அவர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையும் அளிக்கும். இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு காயங்கட்ட வேண்டிய அவசியத்தை நாம் எப்போதும் நினைவில் வைத்திருப்போமாக.