தனிப்பட்ட படிப்பும் குடும்ப பைபிள் படிப்பும் அதிமுக்கியம்!
1 முதல் நூற்றாண்டைப் போலவே இன்றும் ஆளும் குழு யெகோவாவின் ஜனங்களுடைய நலனில் உள்ளார்ந்த அக்கறை காட்டிவருகிறது. (அப். 15:6, 29) மிகுந்த உபத்திரவம் எனும் கார்மேகம் வேகமாய் திரண்டுவருகையில் ராஜ்ய பிரஸ்தாபிகள் ஒவ்வொருவரும் யெகோவாவுடன் உள்ள பந்தத்தில் உறுதியாய் பலப்படுவது அதிமுக்கியம். முன்பு சபை புத்தகப் படிப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை இப்போது எப்படிப் பயன்படுத்தப்போகிறீர்கள்? நாம் அனைவரும் இந்த நேரத்தை குடும்ப வழிபாட்டிற்காகப் பயன்படுத்திக்கொள்ளும்படி உற்சாகப்படுத்தப்படுகிறோம். இதற்கான நேரத்தை ஞானமாக பயன்படுத்தும்போது நாம் கடவுளுடைய வார்த்தையைக் கருத்தூன்றி படிக்கவும் அதன் போதனைகளிலிருந்து பயன் அடையவும் முடியும்.—சங். 1:1–3; ரோ. 11:33, 34.
2 குடும்ப வழிபாட்டிற்குரிய நேரம்: பயன் தரும் விதத்தில் தவறாமல் குடும்ப பைபிள் படிப்பை நடத்துவதன் மூலம் தங்களுக்கு யெகோவா கொடுத்திருக்கும் இந்தப் பொறுப்பை நிறைவேற்றும்படி குடும்ப தலைவர்கள் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். (உபா. 6:6, 7) திருமணமாகாத சகோதர சகோதரிகளுக்கு குடும்ப பொறுப்புகள் இல்லாததால் அவர்கள் இந்த நேரத்தைத் தனிப்பட்ட பைபிள் படிப்புக்கும் அது சம்பந்தமான ஆராய்ச்சிக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த ‘பொல்லாத நாட்களிலும்கூட’ எப்போதும் யெகோவாவுடன் நெருங்கிய பந்தத்தை அனுபவிக்க, கருத்தூன்றி படிப்பதற்கும் தியானிப்பதற்கும் நாம் எல்லாருமே ‘வாய்ப்பான நேரத்தை வாங்குவது’ அதிமுக்கியம்.—எபே. 5:15, 16, NW.
3 என்ன படிக்கலாம்: உங்கள் பைபிள் படிப்பு அனுபவித்து மகிழ உதவும் தகவல்களை உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸில் அல்லது சிடி—ரோமிலுள்ள உவாட்ச் டவர் லைப்ரரியில் பார்க்கலாம். காவற்கோபுரத்தில் வரும், “குடும்ப மகிழ்ச்சிக்கு . . . ,” “பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்,” “இளம் வாசகருக்கு” போன்ற கட்டுரைகளைக் குடும்பமாகச் சேர்ந்து படிக்கலாம். அதோடு, விழித்தெழு!-விலுள்ள “இளைஞர் கேட்கின்றனர்” என்ற தலைப்பில் வரும் கட்டுரைகளையும் வியக்கவைக்கும் படைப்பைப் பற்றிய சுவையான கட்டுரைகளையும் படிக்கலாம்.
4 பைபிளை அவசர அவசரமாக படிக்காமல் நிதானமாக படிக்கும்போது குடும்பத்தார் எல்லாரும் கடவுளுடைய நியமங்களையும் அவை கற்பிக்கிற பாடங்களையும் நினைவில் வைத்து, அதற்கேற்ப வாழ முடியும். (எபி. 4:12) சில சமயம், அமைப்பு வெளியிட்டிருக்கும் வீடியோக்களில் ஒன்றைப் பார்த்துவிட்டு அதிலிருந்து கலந்தாலோசிக்கலாம். புதுப்புது உத்திகளைப் பயன்படுத்தி படிப்பை சுவாரஸ்யமாக ஆக்குவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. எதைப் படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று உங்கள் குடும்பத்தாரிடமே ஏன் கேட்கக் கூடாது?
5 இப்போது ஏன் முக்கியம்: யெகோவாவுடன் உள்ள பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்வது, ‘உறுதியாக நின்று யெகோவா அளிக்கும் இரட்சிப்பைப் பார்க்க’ நம்மை தயார்படுத்தும். (யாத். 14:13, NW) “கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே” பிள்ளைகளை வளர்க்க பெற்றோருக்கு கடவுளுடைய வழிநடத்துதல் அவசியம். (பிலி. 2:15) இன்று பள்ளிகளில் ஒழுக்கநெறி சீர்கெட்டுப் போவதால் அவற்றைச் சமாளிக்க பிள்ளைகளுக்கு உதவி தேவை. (நீதி. 22:3, 6) தம்பதிகள் யெகோவாவுடன் சேர்ந்து ‘முப்புரிநூலாய்’ இணைந்துள்ள பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். (பிர. 4:12) நம்முடைய ‘மகா பரிசுத்தமான விசுவாசம்’ உறுதிப்பட மீதமுள்ள இந்தக் காலத்தை நாம் ஞானமாய் பயன்படுத்திக்கொள்வோமாக.—யூ. 20.
[கேள்விகள்]
1. இந்தக் காலகட்டத்தில், நம்முடைய நலனில் விசேஷ அக்கறை இருப்பதை ஆளும் குழு எந்த விதத்தில் காட்டிவருகிறது, ஏன்?
2. குடும்ப வழிபாட்டிற்குரிய நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம்?
3, 4. குடும்ப படிப்பில் பயன்படுத்துவதற்குரிய பிரசுரங்களைக் குறித்து என்ன ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன, என்ன நோக்கத்தோடு?
5. தனிப்பட்ட படிப்பும் குடும்ப பைபிள் படிப்பும் இன்று நமக்கு ஏன் மிக முக்கியம்?