“நீங்கள் ஒரு நல்ல பயனியர் ஆகலாம்!”
1. பயனியர் ஊழியத்தை பற்றி ஒரு சகோதரி எப்படி உணர்ந்தார்?
1 “பயனியர் சேவை செய்யும்போது நான் யெகோவாவோடு நெருங்கிய பந்தம் வைக்க முடிகிறது. யெகோவாவும் அவருடைய மகனும் நமக்காகச் செய்திருக்கிற காரியங்களுக்கு நன்றி சொல்ல ஒரு அருமையான சந்தர்ப்பமாக இதை நான் கருதுகிறேன். என் வாழ்க்கையில் சந்தோஷத்தையும் திருப்தியையும் காண இது உதவுகிறது” என்கிறார் மேரி. தன்னலமற்ற பயனியரான இவர், இந்தியாவிலுள்ள பல இடங்களில் 42 ஆண்டுகளாக ஊழியம் செய்திருக்கிறார். முழு நேர சேவை செய்யும்போது வாழ்க்கையில் திருப்தி கிடைப்பதால், “நீங்கள் ஒரு நல்ல பயனியர் ஆகலாம்!” என சிலர் உங்களிடம் சொல்லலாம்.
2. ஊழியத்தில் ஈடுபடும்போது எப்படி உண்மையான மனநிறைவு கிடைக்கும் என்பதை விளக்குங்கள்.
2 மனநிறைவளிக்கும் வாழ்க்கை: நமக்கு முன்மாதிரியாய் இருக்கிற இயேசு தம் பிதாவின் சித்தத்தைச் செய்வதிலிருந்து உண்மையான புத்துணர்ச்சி பெற்றார். (யோவா 4:34) ஆகவே, யெகோவாவை வழிபடுவதோடு சம்பந்தபட்ட வேலையில் கலந்துகொண்டால் உண்மையான மனநிறைவு கிடைக்கும் என இயேசு தம்முடைய சீடர்களுக்கு உள்ளப்பூர்வமாகக் கற்றுக்கொடுத்தார். யெகோவா அங்கீகரிக்கும் வேலையில் நாம் எப்போதும் மூழ்கியிருக்கும்போது நம்மால் திருப்தியாக வாழ முடியும். அதுமட்டுமல்ல, மற்றவர்களுக்கு உதவ நம்முடைய நேரம், சக்தி, வளங்கள் ஆகியவற்றை அதிகமாகக் கொடுக்கும்போதும் நம் சந்தோஷம் அதிகரிக்கும்.—அப். 20:31, 35.
3. ஊழியத்தில் அதிக நேரத்தை செலவிடுவதால் நாம் என்ன சந்தோஷத்தைப் பெறலாம்?
3 ஊழியத்தில் எந்தளவுக்கு ஈடுபடுகிறோமோ அந்தளவுக்கு பைபிள் படிப்புகளை ஆரம்பித்து நடத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன; இவை நமக்குச் சந்தோஷத்தை அளிக்கின்றன. பிராந்தியத்தில் மக்கள் அக்கறை காட்டாததுபோல் தெரிந்தாலும், ஊழியத்தில் நமக்கு அனுபவமும் திறமையும் அதிகரிக்கும்போது பிராந்தியத்தின் மீதுள்ள நம் கண்ணோட்டம் மாறி அது அதிக பலன்தருவதாக உணரலாம். பயனியர்கள் தங்களுடைய சேவையை ஆரம்பித்து சுமார் ஒரு வருடத்திற்கு பின்பு பயனியர் ஊழியப் பள்ளியிலிருந்து கிடைக்கும் ஏராளமான கல்வியை ஊழியத்தில் உபயோகிக்கலாம். (2 தீ. 2:15) நாம் ஊழியத்தைத் தொடர்ந்து செய்தோமென்றால், எதிர்காலத்தில் கனி கொடுக்கவிருக்கும் சத்திய விதைகளை இப்போதே நன்றாக விதைக்கலாம்.—பிர. 11:6.
4. பள்ளி படிப்பை முடிக்கும் தருவாயில் உள்ள இளைஞர்கள் எதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
4 இளைஞர்கள்: நீங்கள் பள்ளிப் படிப்பை முடிக்கும் தருவாயில் இருக்கிறீர்கள் என்றால் எதிர்காலத்தில் என்ன செய்யலாமென கவனமாகச் சிந்தித்திருக்கிறீர்களா? இதுவரை படிப்புக்கே நீங்கள் அதிக நேரம் செலவிட்டிருக்கலாம். பள்ளி படிப்பு முடித்தபின் அந்த நேரத்தை எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள்? முழுநேர வேலைக்காக உங்களுடைய இளவயதின் சக்தியையெல்லாம் விரயம் செய்வதற்கு பதிலாக, ஜெபசிந்தையோடு ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய ஏன் திட்டமிடக்கூடாது? நீங்கள் பல திறமைகளை வளர்த்துக்கொள்வது உங்கள் வாழ்நாள் முழுவதிலும் பயனளிக்கும்; உதாரணத்திற்கு, வித்தியாசப்பட்ட பின்னணியில் உள்ளோருக்கு சாட்சி கொடுக்க, வாழ்க்கையின் தடைகளைச் சமாளிக்க, சுயக்கட்டுபாட்டை வளர்க்க, போதிக்கும் திறமைகளை வளர்க்கக் கற்றுக்கொள்வது உங்கள் வாழ்நாள் முழுவதிலும் பயனளிக்கும்.
5. பயனியர் ஊழியம் செய்ய பெற்றோரும் சபையினரும் எவ்வாறு உற்சாகப்படுத்தலாம்?
5 பெற்றோர்களே, பிள்ளைகள் முழுநேர சேவையைத் தேர்ந்தெடுக்க உங்கள் பங்கை செய்கிறீர்களா? கடவுளுடைய அரசாங்கத்தை முதலிடத்தில் வைக்க உங்கள் வார்த்தைகளும் நல்ல முன்மாதிரியும் அவர்களுக்குப் பெரிதும் உதவலாம். (மத். 6:33) உயர்நிலை பள்ளி படிப்பை முடித்த கையோடு பயனியர் ஊழியத்தை ஆரம்பித்த சஞ்சய் இவ்வாறு சொல்கிறார்: “பயனியர் ஊழியம் செய்யும்போதுதான் வாழ்க்கையில் அதிக திருப்தி கிடைப்பதாக என் பெற்றோர் எப்போதும் உணருவார்கள்.” பயனியர் ஊழியம் செய்யும்படி சபையினர் எல்லாரும் தங்களுடைய வார்த்தைகளால் மற்றவர்களை உற்சாகப்படுத்தி, அதற்கு ஆதரவும் அளிக்கலாம். “இளைஞர்களுக்கு பயனளிக்கும் சிறந்த வேலை பயனியர் சேவைதான் என என் சபையினர் கருதினார்கள். அவர்களுடைய உற்சாகமூட்டும் வார்த்தைகளும் பயனியர் சேவைமீது அவர்களுக்கு இருந்த மதிப்பும், அவர்கள் எனக்குக் கொடுத்த நடைமுறையான உதவியும் பயனியர் சேவையை ஆரம்பிக்க எனக்கு உதவியது” என்கிறார் ஸ்பெய்னை சேர்ந்த ஜோஸ்.
6. தற்சமயம் பயனியர் ஊழியம் செய்ய ஆசையில்லை என்றால் நாம் என்ன செய்யலாம்?
6 தடைகளைச் சமாளித்தல்: “பயனியர் செய்ய எனக்கு ஆசையில்லை” என்று முதலில் யோசித்தால், என்ன செய்வது? அப்படியானால், நீங்கள் என்ன உணருகிறீர்கள் என்பதைக் குறித்து யெகோவாவிடம் ஜெபத்தில் தெரியப்படுத்துங்கள்; ‘நான் பயனியர் சேவைதான் செய்ய வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் உங்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்” என்று ஜெபத்தில் சொல்லுங்கள். (சங். 62:8; நீதி. 23:26) பிறகு, அவருடைய வார்த்தை மற்றும் அமைப்பின் மூலமாக அவருடைய வழிநடத்துதலை நாடுங்கள். துணை பயனியர் ஊழியத்தை “ருசித்து” சந்தோஷத்தைப் பெற்றதால் அநேகர் முழுநேர சேவையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.—சங். 34:8.
7. ஒவ்வொரு மாதமும் 70 மணிநேரம் எட்ட முடியுமா என்ற சந்தேகமிருந்தால் அதை எவ்வாறு போக்கலாம்?
7 ஒழுங்கான பயனியருக்குரிய 70 மணிநேரத்தை ஒவ்வொரு மாதமும் எட்ட முடியுமா என யோசித்தால் என்ன செய்வது? உங்களைப் போன்ற சூழ்நிலையிலுள்ள பயனியர்களிடம் அதைக் குறித்துப் பேசலாம், அல்லவா? (நீதி. 15:22) உங்களால் எப்படியெல்லாம் செய்ய முடியும் என்பதை அட்டவணை போட்டுப் பாருங்கள். அப்படிச் செய்யும்போது முக்கியமில்லாத காரியங்களிலிருந்து ஊழியத்திற்காக நேரத்தை எடுத்துக்கொள்வது, முன்பு யோசித்ததுபோல் கஷ்டமான விஷயமாகவே தெரியாது.—எபே. 5:15, 16.
8. நம் சூழ்நிலைகளை ஏன் அவ்வப்போது மறு பரிசீலனை செய்ய வேண்டும்?
8 சூழ்நிலைகளை மறு பரிசீலனை செய்யுங்கள்: நம் சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருக்கும். ஆகவே, உங்களுடைய சூழ்நிலைகளை அவ்வப்போது மறு பரிசீலனை செய்வது நல்லது. உதாரணத்திற்கு, நீங்கள் சீக்கிரத்தில் வேலையிலிருந்து ஓய்வு பெற போகிறீர்களா? பயனியர் செய்வதற்காக வேலையை விட்டுவிட்ட கிருஷ்ணன் இப்படிச் சொல்கிறார்: “இந்தத் தீர்மானம், என் மனைவியோடு சேர்ந்து ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பிக்க எனக்கு உதவியிருக்கிறது; தேவை அதிகமுள்ள இடத்திற்குச் சென்று ஊழியம் செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறது. ஆன்மீக ரீதியில் இவ்வளவு பலனையோ சந்தோஷத்தையோ தரும் வேலையை என்னால் கண்டுபிடித்திருக்கவே முடியாது.”
9. திருமணமானவர்கள் எதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
9 சில தம்பதியர் தங்களுடைய சூழ்நிலைகளை அலசி ஆராய்ந்த பிறகு, இரண்டு பேருமே முழுநேரமாக வேலை செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். உண்மைதான், இதற்காக தங்களுடைய வாழ்க்கைமுறையை எளிமையாக வைத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். ஆனாலும் நாம் செய்யும் தியாகங்கள் வீண்போகாது. ஊழியத்தில் அதிகம் ஈடுபடுவதற்காக, சமீபத்தில் முழுநேர வேலையை விட்டுவிட்ட தன் மனைவியைப் பற்றி ஜான் இவ்வாறு சொல்கிறார்: “என் மனைவி நாள்முழுதும் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதை அறியும்போது அதைவிட அதிகச் சந்தோஷம் எனக்கு வேறெதுவும் இல்லை.”
10. பயனியர் ஊழியத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க கிறிஸ்தவர்களை எது உந்துவிக்கும்?
10 அன்புக்கும் விசுவாசத்திற்கும் ஒரு வெளிக்காட்டு: யெகோவா நமக்கு கொடுத்திருக்கிற இந்த முக்கியமான பிரசங்க வேலை எல்லாராலும் செய்ய முடிந்த ஒரு வேலையாகும். இந்தப் பொல்லாத உலகம் விரைவில் அழிக்கப்படும். அப்போது யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறவர்கள் மட்டுமே மீட்புப் பெறுவார்கள். (ரோ. 10:13) யெகோவாமீது இதயப்பூர்வமான அன்பும் அவர் நமக்கு செய்த எல்லாவற்றின்மீது நன்றியுணர்வும் இருந்தால், பக்திவைராக்கியத்துடன் பிரசங்கிக்கும்படி அவருடைய மகன் கொடுத்த வேலைக்குக் கீழ்ப்படிவோம். (மத். 28:19, 20; 1 யோ 5:3) அதோடு, நாம் கடைசி காலத்தில்தான் வாழ்கிறோம் என்பதில் விசுவாசம் வைத்தால், மீந்திருக்கும் இந்தக் காலத்தில் உலகத்தை முழுமையாகப் பயன்படுத்தாமல் ஊழியத்தில் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.—1 கொ. 7:29-31.
11. நல்ல பயனியர் ஆகலாம் என யாராவது சொன்னால் நாம் அதை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும்?
11 ஒழுங்கான பயனியர் சேவை என்பது வெறுமென ஊழியத்தில் அதிக நேரம் ஈடுபடுவதை அல்ல, ஆனால் கடவுள்மீதுள்ள நம் பக்தியை வெளிக்காட்டுவதைக் குறிக்கிறது. நீங்கள் ஒரு நல்ல பயனியர் ஆகலாம் என யாராவது சொன்னால் அதைப் பாராட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு, இந்த திருப்திகரமான சேவையில் மற்றவர்களோடு சேர்ந்துகொள்வதைக் குறித்து ஜெப சிந்தையுடன் யோசித்துப் பாருங்கள்.
[பக்கம் 2-ன் சிறுகுறிப்பு]
பெற்றோர்களே, பிள்ளைகள் முழுநேர சேவையைத் தேர்ந்தெடுக்க உங்கள் பங்கை செய்கிறீர்களா?
[பக்கம் 3-ன் சிறுகுறிப்பு]
யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற இந்த முக்கியமான பிரசங்க வேலை எல்லாராலும் செய்ய முடிந்த ஒரு வேலையாகும்.