கடவுளது அரசைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
1. ஏப்ரல் 30, 2012-ல் துவங்கும் வாரத்திலிருந்து சபை பைபிள் படிப்புக்கு எதைப் பயன்படுத்துவோம்?
1 ஏப்ரல் 30, 2012-ல் துவங்கும் வாரத்திலிருந்து கடவுளது அரசைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’ என்ற பிரசுரத்தை சபை பைபிள் படிப்பில் பயன்படுத்துவோம். இது அப்போஸ்தலர் புத்தகத்தை அலசுகிறது; வாசிப்போரின் மனதை நெகிழ வைக்கிற விறுவிறுப்பூட்டும் சம்பவங்கள் இந்தப் பிரசுரத்தில் இடம்பெற்றுள்ளன. வசனத்திற்கு வசனம் விளக்கம் கொடுப்பது இதன் நோக்கமல்ல. அப்போஸ்தலர் புத்தகத்தின் பதிவுகளிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் அவற்றை ஊழியத்தில் கடைப்பிடிக்கவும் உதவுவதே இதன் நோக்கம்.—ரோ. 15:4.
2. சாட்சி கொடுங்கள் புத்தகத்தின் சில சிறப்பம்சங்களைச் சொல்லுங்கள்.
2 இப்புத்தகத்தின் சிறப்பம்சங்கள்: இரண்டாம் பக்கத்தில் ஆளும் குழு எழுதிய அன்பான கடிதத்தை பார்க்கலாம்; இந்தப் புத்தகத்திலிருந்து நாம் பயனடைய வேண்டுமென அவர்கள் விரும்புவதை அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இரண்டாம் அதிகாரம்முதல் ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்புக்கும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வரிகள் அந்த அதிகாரத்தின் சாராம்சத்தைச் சொல்கிறது. அதற்கு அடியில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் அப்போஸ்தலர் புத்தகத்தில் சிந்திக்கப்படும் பகுதியைச் சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலான அதிகாரங்களில் பெட்டிச் செய்திகள் உள்ளன; அவை, மக்களின் பின்னணித் தகவல்களை, இடங்களை, அல்லது சம்பவங்களைப் பற்றி விளக்குகின்றன. குறிப்புகள் எழுதிக்கொள்ள வசதியாக அகன்ற ஓரப்பகுதிகள் உள்ளன. பைபிள் கால காட்சிகளை மிக நுணுக்கமாய்ச் சித்தரிக்கிற படங்கள் இப்புத்தகம் முழுவதிலும் உள்ளன; முக்கிய சம்பவங்களை நம் மனத்திரையில் பார்க்க இவை உதவும். கடைசி பக்கத்தில், ஒவ்வொரு படத்தையும் விளக்கும் பட அட்டவணையும் உள்ளது. முதல் நூற்றாண்டில், “பூமியின் கடைமுனைவரையிலும்” நற்செய்தி பரவ ஆரம்பித்தபோது உண்மை கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்தளவு பெருகியது என்பதை அறிய, அட்டை பக்கங்களுக்கு உள்ளே கொடுக்கப்பட்டுள்ள வரைபடங்கள் உதவும்.—அப். 1:8.
3. அப்போஸ்தலர் புத்தகத்தைச் சிந்திக்கும்போது, என்ன முக்கியமான கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்?
3 முக்கியமான கேள்விகளுக்குப் பதில்கள்: அப்போஸ்தலர் புத்தகத்தைச் சிந்திக்கும்போது, ஊழியம் சம்பந்தப்பட்ட முக்கியமான கேள்விகளுக்குத் தெளிவான பதில் கிடைக்கும். உதாரணமாக, இயேசு கிறிஸ்துவின் உண்மை சீடர்கள் என்ன வேலை செய்வார்கள், என்ன செய்தி சொல்வார்கள்? உலகமெங்கும் நடக்கிற பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்துகிறவர்கள் யார், எப்படி? துன்புறுத்தலும் எதிர்ப்பும் கடவுளுடைய ஊழியர்களுக்கு என்ன வாய்ப்புகளை அளிக்கின்றன? நம் ஊழிய வேலையில் கடவுளுடைய சக்தி எவ்வாறு செயல்படுகிறது?
4. இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நாம் எவ்வாறு முழுமையாக நன்மை அடையலாம்?
4 இப்புத்தகத்திலிருந்து முழுமையாக பயன் பெற முன்கூட்டியே படித்து, கூட்டத்தில் பதில் சொல்லத் தயாரியுங்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்; அதோடு, கற்றுக்கொண்ட பாடங்களை ஊழியத்தில் எப்படிப் பொருத்தலாம் எனச் சிந்தியுங்கள். சிலிர்ப்பூட்டும் சம்பவங்களைக் கொண்ட இப்புத்தகம், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுக்க உங்களைத் தூண்டுவதாக!—அப். 28:23.